பாரதிராஜா வேண்டுகோளை வழிமொழிந்த சிலம்பரசன்

Share

திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

அங்கு செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பினால் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய திரையுலகினர் பலர் உருக்கமாகப் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நலம் தேற கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட இயக்குநர் பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று மாலை 6 மணிக்கு வீடுகளில் அமர்ந்து திரையுலகப் பிரமுகர்கள் பிரார்த்தனை செய்யவும், எஸ்.பி.பி.யின் பாடல்களைப் பாடி பிரார்த்தனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

அவருடைய வேண்டுகோளை ஏற்று நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..

உயிரினும் மேலான ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், பாடல் கேட்டு வாழும் என் போன்ற அனைத்து மக்களுக்கும் வணக்கங்கள். எத்தனையோ பேரை உயிர்த்த குரல் அது. எத்தனையோ நாட்களைக் கடந்துவரச் செய்த வரப் பாடல்கள் அவருடையது.

இனிமை என்ற வார்த்தையை உணர்வுப் பூர்வமாக உணர அவர் பாடக் கேட்டாலே போதும். அற்புதங்களை தமிழ் சினிமாவில் நிகழ்த்திய பாடல் ஆசான் அவர்.

இன்று மருத்துவமனையிலிருந்து மீண்டு வரும் வரத்திற்காய் காத்திருக்கிறார். நம் வேண்டுதல் என்னும் ஒருமித்த எண்ணம் அவரிடம் அற்புதங்கள் நிகழ்த்தி நம்மிடையே மீண்டும் அழைத்து வர வேண்டும். எஸ். பி .பி என்பது ஒரு பெயரல்ல. அது காற்றை இன்னிசை ஆக்கிய மருந்து. அவர் மீண்டு வருவது நமக்கு மிக முக்கியம்.

லெஜண்டுகளை நம்மோடு பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது அவசியம். அவர்கள் பாடிக்கொண்டு, நம்மிடையே இருப்பதை கடவுளிடம் கெஞ்சிக் கேட்டு மீட்டு வரவேண்டும்.

நம் ‘பாடும் நிலா’ எழுந்து வரவேண்டி நம் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் முன்னெடுப்பின்படி, இன்று 20 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நாம் அனைவரும் எஸ்.பி.பி அவர்களின் பாடலை ஒலிக்கவிட்டு அவருக்காக வேண்டிக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

வேண்டுதலின் பலனாய் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு உங்களில் ஒருவனாய்…

அன்புடன்

உங்கள் சிலம்பரசன் டிஆர்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

3 Comments

Leave A Reply