விக்ரம் வெற்றிக்கு காரணம் என்ன? – Ka.Deena விமர்சனம்

Share

மாநகரம் படத்தை இயக்கி சினிமாவில் கால்பதித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்தி, விஜய் அண்ட் விஜய் சேதுபதியை வைத்து கைதி, மாஸ்டர் அடுத்தடுத்து படங்களை இயக்கினார். இதில் கைதி அளவுக்கு மாஸ்டர் வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் விஜய் ரசிகர்களின் வரவேற்பையும் வசூலையும் பெற்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினியை லோகேஷ் இயக்கப்போகிறார் என்ற தகவல் உலவியது. ஆனால், கொரோனோ முதல் அலைக்குப்பிறகு உலகநாயகன் கமல்ஹாசனை இயக்கப்போகிறார் என்ற தகவல் பரவியது. இதை அவரே உறுதி செய்தார்.

பிக்பாஸ், அரசியல் என பிசியாக இருந்த நடிகர் கமல் சில வருட இடைவெளிக்கு பிறகு, அதுவும் ஒரு இளம் இயக்குநரின் திரைப்படத்தில் நடிக்கப்போகிறார் என்றவுடன் கோலிவுட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியது..

திரைப்படத்தின் தலைப்பு விக்ரம், நடிகர் கமலுடன் மலையாள நடிகர் பஹத் ஃபாசில், விஜய் சேதுபதி இணைகிறார்கள் என்ற செய்தி படத்தை பற்றிய சினிமா ரசிகர்களின் கற்பனையை சிறகடிக்கச் செய்தது.

விக்ரம் திரைப்படத்தின் கரு இயக்குனரின் முந்தைய படங்களான கைதி மாஸ்டர் போன்ற படங்களில் கையாண்ட போதை பொருள் – கடத்தல் – விற்பனை – சமூகம் – இளைஞர் தொடர்புடையதுதான். அதிலும் கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் தொடர்ச்சியாகவே விக்ரம் (2022) எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கமல்ஹாசன் நடித்து 1986-ல் வெளிவந்த விக்ரம் படத்தின் தொடர்ச்சியாகவும் இது இருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

கைதி திரைப்படத்தில் நேர்மையான இளம் காவல்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பல ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருளை திரும்ப பெற போதைப்பொருள் உற்பத்தியாளரான சந்தனம் (விஜய் சேதுபதி) முயற்சி செய்கிறார்.

தொடக்கத்தில் அப்பா மகன் என அடுத்தடுத்த இரண்டு கொலைகள். முகமூடி அணிந்த ஒரு குழு தொடர்ச்சியாக கொலைகளை அரங்கேற்றுகிறது. தடுக்க முடியாத காவல்துறை தனியார் நிறுவனத்தின் உதவியை நாடுகிறது. கொலையாளிகள் யார், எதற்காக கொலை செய்கிறார்கள் என்பதை அமர் (பஹத் ஃபாசில்) தலைமையிலான குழு கண்டறிய முனைகிறது.

தொடங்கியதில் இருந்தே கொலை, விசாரணை என வேகமாக நகர்கிறது. முதல்பாதியின் திரைக் கதையும், படமாக்கப்பட்ட விதமும், பின்னனி இசையும் ஹாலிவுட் லெவல் எனும்படி தரம்.

முதல் பாதியில் நிறைய சுவாரஸ்யமான முடிச்சுகள். அவை இரண்டாம் பாதியில் எப்படி அவிழ்க்கப் படப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. முதல் பாதியின் முடிவில் ஒரு சுவாரஸ்ய முடிச்சு அவிழ்க்கப்படாமல் வெட்டப்பட்டுவிட்டது.

இந்த இடத்திலிருந்து படம் வேறொரு நிலைக்கு எடுத்துச் செல்லப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் அதன்பிறகு படம் ஒரு சாதாரண பழிவாங்கும் படமாக பயணிக்கத் தொடங்குகிறது.

முதல்பாதியில் ஒரு முகமூடி குழு, காவல்துறை, விஜய் சேதுபதி, மற்றும் பஹத் ஃபாசில் இவர்களுக்கிடையே அழகாக பின்னப்பட்ட வலை இரண்டாம் பாதியில் இரு முனை கயிறாக மாறிவிட்டது. ஒரு சினிமாவின் இரண்டாம் பாதியில் வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்று கேட்காலம் ஆனால் இயக்குநரின் முற்பகுதி திரைக்கதை பிற்பகுதியின் திரைக்கதைப் போக்கை கேள்வி எழுப்பும்படி இருக்கிறது என்பதே உண்மை.

முதல் பாதியை நடிகர் பஹத் பாசில் முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தார். அவர் வரும் காட்சிகள் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலத்தை தந்தது. அபாரமான நடிப்பு.

இரண்டாம் பாதியில் விஜய் சேதுபதி மட்டும் தனி ஆளாக திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கொண்டு வர முயன்றுள்ளார். இரண்டாம் பாதி ஆரம்பத்திலிருந்தே கதை கதாயகனின் பக்கம் நகர ஆரம்பிக்கிறது. கதாநாயகன் வீழ்த்த முடியாதவர் என்பது போன்ற காட்சிகள்/வசனங்கள் திரைப் படத்தின் சுவாரஸ்யத்தை குறைத்துவிட்டன. இந்த குறையை விஜய் சேதுபதி தன்னுடைய நடிப்பின் மூலம் ஓரளவுக்கு போக்கியிருக்கிறார்.

வில்லனாக நடிப்பில் அசத்தியிருக்கும் விஜய் சேதுபதியே மிரளும் வகையில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா இறுதிக்காட்சியல் தோன்றி பேசுவது எதுவுமே பொருந்தவில்லை.
நடிகர் கமல்ஹாசன் இந்த திரைப்படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்துவிட்டு நகர்ந்திருக்கிறார். மற்றபடி நடிகர் கமல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய எந்த வய்ப்பையும் லோகேஷின் திரைக்கதை வழங்கவில்லை.

முதல்பாதியின் திரைக்கதை, பின்னனி இசை, திரையரங்கு அனுபவம், சமீப காலத்தில் நல்ல தமிழ் சினிமா வராதது போன்ற காரணங்கள் விக்ரம் திரைப்படத்தை வெற்றிப்படமாக மாற்றியி ருக்கிறது!
லோகேஷ் கனகராஜ் கையாண்டிருக்கும் இந்த மல்டிவெர்ஸ் கான்செப்ட் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய சுவையை கொடுத்திருக்கிறது. முதலில் ஒரு கதையை எழுதி இயக்கியபிறகு அந்தக் கதையின் நீட்சியாக அடுத்தடுத்த படங்களை எடுப்பது இயல்பானதே. கௌதம் வாசுதேவனின் காக்க-காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்றவையும் பெயர் மாற்றப்பட்ட மல்டிவெர்ஸ் திரைப்படங்கள் தான். இது நமக்கு புதிதல்ல!

Leave A Reply