அனைத்து நோயாளிகளுக்கும் ஆக்சிஜன், தடுப்பூசி கிடைத்திட வேண்டும் – பிரதமருக்கு யெச்சூரி கடிதம்

Share

நாடு முழுதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கும் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி கிடைத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நான் இக்கடிதத்தை கடும் மனவேதனையுடனும், துன்பத்துடனும் தங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். கோவிட்-19 இரண்டாவது அலை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுகாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தி சுனாமி போன்று மாறிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் அணுகுமுறை காரணமாக நிலைமை மேலும் மோசமாகி இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அத்தொற்றிலிருந்து மீட்டு காப்பாற்றியிருக்க முடியும் என்றபோதிலும் அவ்வாறு செய்யப்படாமல் சக இந்தியர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் மடிந்து கொண்டிருக்கும் விவரங்களுக்குள் ஆழமாகச் செல்வதற்கு இது தருணம் அல்ல.

மிகவும் அவசரத்துடன் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய இரு அடிப்படை அம்சங்கள் குறித்து இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன். நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கும் எவ்விதமான இடையூறுமின்றி மருத்துவ ஆக்சிஜன் சப்ளை செய்யப்படுவதை உத்தரவாதம் செய்திட வேண்டும். இவற்றை என்ன விலை கொடுத்தாவது வாங்கி அவர்களுக்கு சப்ளை செய்திட வேண்டும்.

அதேபோன்று அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதற்காக இலவசமாக தடுப்பூசிகளை அளித்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை அவசரநிலை ஷரத்துக்களின்கீழ் உற்பத்தி செய்யப்பட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். சாத்தியமான அனைத்து விதங்களிலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்திட வேண்டும். இவற்றின் மூலமாக மேலும் மரணங்கள் ஏற்படாது தடுத்திட வேண்டும்.

இம்முடிவுகள் மேற்கொள்ளப்படுவதில் நிதிப் பிரச்சனை இருக்கக்கூடும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். பட்ஜெட்டில் தடுப்பூசித் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்த 35 ஆயிரம் கோடி ரூபாயையும் இதற்காக உடனடியாக செலவு செய்திட வேண்டும்.
மேலும் இப்போதாவது தில்லியில் புதிய சென்ட்ரல் விஷ்டா கட்டுமானத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற ஊதாரித் திட்டங்களுக்கான செலவினங்களை நிறுத்தி வைத்திட வேண்டும்.

தங்கள் பெயரில் தனியார் அறக்கட்டளை ஒன்றின் மூலம் வசூலிக்கப்பட்ட அனைத்து நிதியையும் ஆக்சிஜன் சப்ளை செய்வதற்கும், தடுப்பூசிகள் வாங்குவதற்கும் பயன்படுத்த வேண்டும்.

ஒருவேளை, மருத்துவ ஆக்சிஜன் அளிப்பதற்கோ, தடுப்பூசிகள் அளிப்பதற்கோ உங்கள் அரசாங்கத்தால் இயலாமல் போனால், அதன் காரணமாக மேலும் இதனால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க முடியாமல் போனால், உங்கள் அரசாங்கம் தொடர்ந்து நீடிப்பதற்கான தார்மீக அதிகாரத்தை (moral authority) இழந்துவிடுகிறது.

இப்போது ஏற்பட்டிருக்கும் சுகாதார மற்றும் மனிதாபிமானப் பேரிடர் தவிர்க்கப்படக்கூடியதே. இது தவிர்க்கப்பட்டாக வேண்டும். இது, உங்களுடைய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய அடிப்படைக் கடமையாகும். ஆயினும் உங்கள் அரசு இதனை இதுவரையிலும் செய்திடவில்லை.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

Leave A Reply