தமிழக அரசுக்கு ஒத்துழைக்க வேல்முருகன் எம்.எல்.ஏ., வேண்டுகோள்!

Share

கொரோனாவின் இரண்டாவது அலையின் பரவலும் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

இச்சூழலில், தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின். அவர்கள், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டமாக இம்மாதமே ரூ. 2,000வழங்கப்படும் என்ற அறிவிப்பும், கடந்த அதிமுக ஆட்சியில் உயர்த்தப்பட்ட ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து வெளியிட்ட அறிவிப்பும், பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நகரங்களில் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளில் பணிபுரியும் மகளிரும், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்பட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் இன்று முதல் பயணிக்கலாம் என்ற அறிவிப்பும், மக்களிடம் திமுக அரசு மீதான நம்பிக்கையைக் கூடுதலாக்கியுள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் தொகையான 1,200கோடி ரூபாயை மானியமாக அரசே ஈடுகட்ட முன் வந்திருப்பது நல்ல அணுகுமுறை.

மாவட்டந்தோறும் மக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுத் தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படும் என்ற அறிவிப்பும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இதன் வாயிலாக, விவசாயிகள் கடன் தள்ளுபடி, அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு கால மகப்பேறு விடுப்பு, முதியோர் உதவித் தொகை உயர்வு, கல்விக் கடன்தள்ளுபடி, ஆட்டோ வாங்க மானியம், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதோடு, திமுக அரசின் மீதும், மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மீதும் பெரும் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, கொரோனா இரண்டாவது அலையின் கோரத்தாண்டவத்தால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனையெல்லாம் கட்டுக்குள் கொண்டுவரும் என்ற ஒற்றை நோக்கத்தோடும், தமிழக மக்களின் நலன் கருதியும் முழு ஊரடங்கை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்கிறது. ஏனென்றால் ஒரு நெருக்கடியான சூழல் நிலவி வரும் நிலையில், வரும் 10 முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்திருப்பது தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளது.

முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நாட்களில், பொதுமக்கள் பசியாற்றும் வகையில், உணவகங்களில் பார்சல் சேவை அனுமதி, பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவுத் தபால் சேவை, மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், ஆக்சிஜன் வாயு எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் அனுமதி, வேளாண் உற்பத்திக்கு தேவையான பூச்சிக்கொல்லி, உரம், விதை விற்பனை செய்யும் கடைகள், மாட்டுத்தீவனம் விற்பனை செய்யும் கடைகள், இயங்க அனுமதி உள்ளிட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதாகும்.

திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கைக் கூடங்கள் , அனைத்து மதுக்கூடங்கள் , பெரிய அரங்குகள் ,பொருட்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பது, கொரோனா பரவலை கட்டுபடுத்தும் நடவடிக்கையாகும். முக்கியமாக, மதுக்கடைகளில் மது வாங்குவதற்காக கூட்டம் முண்டியடிக்கும்போது, அந்தக் கூட்டத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால், அது அங்கு நெருக்கமாக இருக்கும் அனைவருக்கும் எளிதாகப் பரவிவிடும் என்பதை உணர்ந்து,
மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு தமிழக அரசின் சிறந்த நிர்வாகத்திற்கு சான்றாகும்.

எனவே, கொரோனா பரவலின் தீவிரத்தை உணர்ந்தும், தமிழக அரசின் வழிகாட்டுதலின் படியும், தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க, முழு ஊரடங்கு விதிமுறைகளை முறையாக பின்பற்றி தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

Leave A Reply