ஆளுநருக்கு கவலையா? உள்நோக்கமா? – அ.அன்வர் உசேன்

Share

தமிழ்நாட்டில் இன்றும் தீண்டாமை நிலவுவ தாகவும் ஏனைய சமூகக் குறியீடுகளிலும் தொழில் வளர்ச்சியும் கண்ட தமிழகத்தில் தீண்டாமை இருப்பது வேதனை எனவும் தமிழக ஆளுநர் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பல வடிவங்களில் தீண்டாமை இருப்பது வேதனை அளிக்கும் சமூகக் கொடுமைதான்! இது விரைவில் மாற வேண்டும் என்பதில் இரு கருத்துகளுக்கு இடமில்லை. ஆனால் ஆளுநரின் கவலை நியாயமானதா அல்லது உள்நோக்கம் கொண்டதா எனும் கேள்வி எழுவது தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது. ஏனெனில் ஒன்றிய அரசின் பிரதிநிதியாக ஆளுநர் பல சமயங்களில் இந்துத்துவா கருத்துகளுக்கு இசைந்தும் மாநிலத்தை ஆளும் தி.மு.க. அரசாங்கத்தை தனது அதிகார வரம்பை மீறியும் விமர்சித்து வருகிறார். இந்த பின்னணியில்தான் தீண்டாமை குறித்த அவரது கருத்தையும் மதிப்பிட வேண்டியுள்ளது.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தீண்டாமை
தீண்டாமை எனும் சமூக சாபக்கேடை ஒழிக்க வேண்டும் என ஆளுநர் நினைத்தால் அவர் தமிழகத்தை மட்டுமல்ல; இந்தியாவின் அநேக பகுதிகளில் தீண்டாமை நிலவுவதையும் பட்டியலின மக்கள் எவ்வாறு துன்புறுத்தப்படுகின்றனர் என்பதையும் பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் அதனை பேசவில்லை. கடந்த இரு வாரங்களில் நடைபெற்ற சில நிகழ்வுகளை குறிப்பிடுவது தவறாகாது.

கர்நாடகத்தில் ஷோராப்பூர் சட்டமன்ற தொகுதி பழங்குடி இனத்துக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றாகும். அங்கு ஒரு பட்டியலின இளைஞன் கோவிலில் உள்ள கடவுள் சிலைக்கு அருகில் இருந்த ஒரு கம்பத்தை தொட்டுவிட்டார் என்பதற்காக அவரது குடும்பத்துக்கு ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராதத்தை கட்டிவிட்டு வீட்டுக்கு வந்த அவர் அனைத்து கடவுள் சிலைகளையும் அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் அம்பேத்கர் படத்தை வைத்தார். இனி அம்பேத்கரை மட்டுமே கும்பிடப்போவதாக அறிவித்தார்.

இதே பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு பட்டியலின குடும்பம் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இது பெரிய பிரச்சனையாக மாற காவல்துறை தலையிட்ட பின்னர் அந்த குடும்பம் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டது. அதே போல இந்த பகுதியில் தலித் குடும்பத்தினர் எவராவது இறந்துவிட்டால் ஊரில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுவிடும்.

இறந்தவருக்கு மரியாதை என நினைத்தால் அது தவறு! ஏனெனில் இடை நிலை அல்லது உயர் சாதியினர் இறந்தால் இப்படி கடைகள் அடைக்கப்படுவது இல்லை. தலித் குடும்ப சாவுக்கு அஞ்சலி செலுத்த வெளியூர்களிலிருந்து பல தலித் பகுதியினர் வருவர். அவர்கள் தமது உணவு விடுதிகள் அல்லது கடைகளுக்கு வருவதை தவிர்க்கவே இந்த கடை அடைப்பு. இது நீண்ட நாட்களாக நடக்கிறது என சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய பல வடிவ தீண்டாமைகளை கண்டு வெறுத்த இந்த பகுதியில் உள்ள சுமார் 450 தலித் குடும்பங்கள் சில நாட்களுக்கு முன்பு பவுத்தத்துக்கு மதம் மாறினர். நாட்டு நடப்புகளை கூர்மையாக கவனிக்கும் ஆளுநருக்கு இந்த நிகழ்வுகள் கவனத்துக்கு வராமல் இருக்காது. ஆனால் ஆளுநர் ஏன் இதனை குறிப்பிடவில்லை? கர்நாடகம் பா.ஜ.க. ஆளும் மாநிலம் என்பதாலா?

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தில்லியில் ஒரு பவுத்த மத விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் தலித் முகமாக உள்ள அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் பங்கேற்றார். இவர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் கூட! இந்த நிகழ்வில் அம்பேத்கர் அவர்கள் பவுத்தத்துக்கு மாறிய பொழுது எடுத்த 22 உறுதி மொழிகள் அனைவராலும் எடுக்கப்பட்டன. இவற்றில் பல இந்து மத நெறிமுறைகளுக்கு எதிரானவை! இந்த நிகழ்வை ஒரு மிகப்பெரிய பிரச்சார வடிவமாக பா.ஜ.க. குஜராத்தில் முன்னெடுத்தது.

அங்கு ஆம் ஆத்மி கட்சி பா.ஜ.க.வுக்கு சவாலாக நகர்ப்புறங்களில் உள்ளது என்பது ஒரு மதிப்பீடு! எனவே ஆம் ஆத்மி கட்சியை இந்துக்களுக்கு விரோதமானது எனும் ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிகள்! குஜராத்தில் தனது வாக்குகளை காப்பாற்றிக்கொள்ள ஆம் ஆத்மி கட்சி, ராஜேந்திர பால் கவுதமை அமைச்சர் பதவியிலிருந்து விலக நிர்ப்பந்தம் கொடுத்தது. பா.ஜ.க.வின் இந்த தலித் விரோத செயலை ஏன் தமிழக ஆளுநர் குறிப்பிடவில்லை? உத்தரப்பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் சமீபத்தில் 15 மற்றும் 17 வயதான இரு தலித் சகோதரிகள் பாலியல் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டனர். இரு ஆண்டுகளுக்கு முன்பு இதே மாநிலத்தில் ஹத்ராஸ் எனும் இடத்தில் ஒரு தலித் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் அவரது உடலை குடும்பத்தினருக்கு தராமல் யோகி அரசாங்கத்தின் காவல்துறையினரே எரித்ததும் நாடு முழுவதும் கண்டனக் குரல்களை விளைவித்தது.

2015 முதல் 2020ஆம் ஆண்டுகளுக்கு இடையே தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் பெரும்பகுதி வட மாநிலங்களில் பா.ஜ.க. ஆளும் அல்லது ஆண்ட மாநிலங்களில் நடந்துள்ளன. சென்ற மாதம் மத்திய பிரதேசத்தில் ஒரு பட்டியலின குடும்பம் கோவிலில் நுழைந்தனர் என்பதற்காக கடுமையாக தாக்கப்பட்டனர். பெண்களும் தாக்குதலிலிருந்து தப்பவில்லை. இந்த கொடூரச் சம்பவங்களை ஏன் ஆளுநர் குறிப்பிடவில்லை? உத்தரப் பிரதேசமும் மத்தியப் பிரதேசமும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் என்பதாலா?

பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள்
2021ஆம் ஆண்டு தலித் மற்றும் பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்த பல விவரங்களை தேசிய குற்ற ஆவண அமைப்பு வெளி யிட்டுள்ளது. அவற்றில் சில முக்கிய அம்சங்கள்:

ஒட்டு மொத்தமாக தலித் மக்கள் மீது தாக்குதல்கள் தொடர்பாக 2,63,512 வழக்குகளும் பழங்குடியின மக்களுக்கு எதிராக 42,512 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 25.82 சதவீதம், ராஜஸ்தானில் 14.7சதவீதம், மத்தியப் பிரதேசத்தில் 14.1சதவீதம் நடக்கின்றன.

பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் அதிகபட்சமாக 29.8 சதவீதம் மத்தியப் பிரதேசத்தில் நடக்கின்றன.

2021ஆம் ஆண்டு முடிவில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான வழக்குகள் 96 சதவீதம் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான வழக்குகள் 95 சதவீதம் விசாரணை கட்டத்தை தாண்டவில்லை. தீண்டாமை என்பதும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்களும் தமிழகப் பிரச்சனை மட்டுமல்ல; அது ஒரு அகில இந்திய பிரச்சனை. இந்திய ஒட்டு மொத்த சமூகத்தில் நிலவும் சாபக்கேடு. தமிழகத்தைவிட கர்நாடகத்திலும் பா.ஜ.க. ஆளும் வடமாநிலங்களிலும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்கள் அபரிமிதமாக நடக்கின்றன. இந்த பிரச்சனையின் முழு பரிணாமத்தையும் மறைத்து தமிழகத்தை மட்டும் குறிவைத்து ஆளுநர் பேசுவது ஐயத்தை கிளப்புகிறது.

வர்ண பேதத்தை ஆளுநர் கண்டிப்பாரா?
இந்திய சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு வர்ணபேதம் ஒரு முக்கியக் காரணி என்பதை எவரும் மறுக்க இயலாது. வர்ண பேதமும் அதன் தொடர்ச்சியாக உருவான சாதிய படிநிலைகளும்தான் பட்டியலின மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கு அடிப்படை காரணம். வர்ண பேதத்தை வலுவாக ஆதரித்தவர்கள் கோல்வால்கரும் சாவர்க்கரும் என்பது மறுக்க முடியாத உண்மை. 1969ஆம் ஆண்டு நவாகல் எனும் பத்திரிகைக்கு பேட்டி அளித்த கோல்வால்கர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

“வர்ண முறை என்பது கடவுளின் படைப்பு. எவரும் அதனை அழிக்க முடியாது. மனிதன் நினைத்தாலும் அதனை அகற்ற இயலாது.” இந்துத்துவாவை விளக்கும் தனது நூலில் சாவர்க்கர் கூறுகிறார்: “வர்ண முறை என்பது நமது (இந்து) தேசியத்தின் முக்கிய அடையாளமாக ஆகியுள்ளது.” “எந்த தேசத்தில் நால்வர்ணம் இல்லையோ அந்த தேசம் மிலேச்சர்களுடையது. ஆரியவர்த்தம் என்பது முற்றிலும் வேறுபட்டது”

வர்ண பேதங்களும் அதன் தொடர்ச்சியாக உருவான சாதிய பேதங்களும் ஒட்டு மொத்த இந்தியாவின் பெரும் சாபக்கேடுகளாக உள்ளன. இவற்றை இந்து மதத்தின் பிரிக்க முடியாத கோட்பாடுகள் என புகழுரைத்த கோல் வால்கரையும் சாவர்க்கரையும் சங்பரிவாரங்கள் இன்றளவும் தமது பிதாமகர்களாக கருதுகின்றன. பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கவலைப்படும் எவர் ஒருவரும் இந்த அம்சங்கள் குறித்துப் பேசாமல் இருக்க முடியாது. ஆனால் ஆளுநர் இது குறித்து பேசமாட்டார்.

ஏனெனில் அவரது கவலை தலித் மக்கள் மீதான தாக்குதல் அல்ல; தமிழக அரசாங்கத்தை மட்டம் தட்டுவது; ஒன்றிய அரசாங்கம் தனக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றுவது. அதே சமயத்தில் தமிழகத்தில் உள்ள தீண்டாமை வடிவங்களை எவரும் நியாயப்படுத்த இயலாது. தமிழ்ச் சமூகம் தனித்துவம் வாய்ந்தது என்பதும் முற்போக்கானது என்பதும் நிலை நிறுத்தப்பட வேண்டும் எனில் தீண்டாமை முற்றிலும் அகற்றப்படுவது அவசியத் தேவை! எனினும் “தேர்ந்தெடுக்கப்பட்ட பாரபட்சமான நீதி அநீதிக்கு சமமானது” என்பது போல தமிழகத்தில் நிலவும் தீண்டாமையை மட்டும் பேசும் ஆளுநரின் கவலை உள்நோக்கம் கொண்டது எனும் முடிவுக்கே வர வேண்டியுள்ளது.

Leave A Reply