கொரியா வாழ் தமிழனின் பார்வையில் புரட்சிக் கவிஞரின் எழுச்சி வரிகள் – சகாய டர்சியூஸ் பீ

Share

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு தினமான இன்று அவரின் கவிதைகளில் எனக்கு பிடித்த, இன்றைய அரசியல் சூழ்நிலைக்கும் பொருத்தமாக இருக்கும் சில வரிகள்

“எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே,
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே
செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும்,
சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்”.
– என்று தமிழுக்கும் அமுதென்று பேர் நூலில் இடம்பெற்ற பாடலில் தமிழனாய் நிற்பவர்

இனப்பெயர் ஏன்”என்று பிறன்எனைக் கேட்டால்
மனத்தில் எனக்குச் சொல்லொணா மகிழ்ச்சியாம்.
“நான்தான் திராவிடன்” என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!

என்று திராவிட நாடு பற்றிய பாடல்களின் தொகுப்பில் இனப்பெயர் பற்றிய பாடலில், இனத்ததால் தான் ஒரு திராவிடன் என்று மகிழ்ந்து,

“தமிழோவும் தமிரிசயும் வேறு
த்ரமிளத் ரமில் எல்லாம் சாற்றின் – தமிழன்
திரிபே அவைகள்! செந்தமிழ்ச்சொல் வேர்தான்
பிரிந்ததுண்டோ இங்கவற்றில் பேசு

உரைத்த இவை கொண்டே உணர்க தமிழம்
திராவிடம்என் றேதிரிந்த தென்று! – திராவிடம்
ஆசிரியர்வாய்ப் பட்டுத் திரிந்தாலும் அந்தச்சொல்
ஆரியச்சொல் ஆமோ அறி”

என்று தமிழுக்கும் அமுதென்று பேர் நூலில், தமிழம் தான் திராவிடம் என்று திரிந்தது, தமிழும் திராவிடமும் ஒன்றே என்று சான்று பகர்ந்து,

“பெரியாரின் காலைப் பிடி
மரியாதை யாக நடி
பெரியாரை யேஒழிப்பாய் மறுபடி
பெருநாட்டில் நீதான்ஓர் உருப்படி ஆனால்
பெறப்போகின்றாய் இனிமேல் செருப்படி”
என்ற பாடல்களின் வரி வழியாக, ஒரு அரசியல் தீர்க்கதரிசியாக மின்னுகிறார்.

இன்றும் தமிழக அரசியலில் காலூன்ற சிலர் பின்பற்றுவது, முதலில் பெரியாரைப் படி; பின்பு அவருக்கு மரியாதை செய்வது போல் நடி; அதன்பின் அவரை இழித்துரைத்து இல்லாமல் செய்தால் இனி அடுத்து நம் கொடிதான் என்று கனவு காண்பர், ஆனால் அவர்கள் எப்போதும் தமிழக மக்களிடம் மறக்காமல் வாங்கிச் செல்கிறார்கள் தரமான செருப்படி… வாக்கு எனும் சீட்டால்,

பெரியாரை இகழ்பவர்களுக்கு, தமிழக மக்கள் என்ன தண்டனை கொடுப்பர்கள் என்பதை அன்றே தனது பாடலில் வழி சொன்னவர் நம் பாவேந்தர்.

அவரின் வழிநின்று, தமிழம் காக்க, யார் உண்மையான தமிழ் இன துரோகி என்பதை அடையாளம் கண்டுகொள்வோம்.

புரட்சி கவி அவர்களுக்கு வீரவணக்கங்கள்!

– சகாய டர்சியூஸ் பீ

Leave A Reply