தமிழ்நாட்டின் எல்லைச் சாமிகள் – ஆதனூர் சோழன்

Share

ருள் கவியத் தொடங்கிய நேரம். அந்தக் கிராமத்தின் எல்லைக்குள் ஒருவன் மூட்டை முடிச்சுகளுடன் நுழைந்தான். அவனை ஒரு உருவம் வழிமறித்தது..

“யார் நீங்க? எந்த ஊர்? இங்கே எதுக்காக வர்றீங்க?” என்றது.

“ஐயா, நான் பக்கத்து ஊருதானுங்க. அங்க இருக்கிற மனுஷங்க எல்லோரும் கெட்டவங்களா இருக்காங்க. வாழப் பொறுக்காதவங்களா இருக்காங்க” என்றான் அவன்.

அவனை அப்படியே திருப்பி அனுப்பியது அந்த உருவம்.

அடுத்தநாள், இதேபோல இன்னொருவன் அந்தக் கிராமத்து எல்லைக்குள் நுழைந்தான். அவனையும் அந்த உருவம் வழிமறித்தது…

“யார் நீங்க?” என்று விவரம் கேட்டது.

“எங்க ஊரு நல்ல செழிப்பாத்தான் இருந்துச்சு. மக்களும் நல்ல உழைப்பாளிகதான். மழை தண்ணி இல்லாம விவசாயம் கெட்டுப்போச்சு. பிழைப்பு தேடி வெளியூர் போக வேண்டிய அவசியமுங்க” என்றான் அவன்.

“அப்டியா? ரொம்ப நல்லது. இந்த ஜனங்களும் நல்ல உழைப்பாளிகதான். போ… போய் நல்லா உழைச்சு பிழைச்சுக்க” என்று வழிவிட்டது.

கிராமத்து எல்லைச் சாமிகளைப் பற்றி இப்படி கதை சொல்வார்கள். ஊர் மக்களுக்கு எது நல்லது. ஊருக்குள் யாரை விடனும், யாரை விரட்டனும் என்று அந்தச் சாமிகளுக்கு தெரிந்திருந்து. இது அந்த ஊர் மக்களுக்கே தெரியாது. ஆனால், தங்கள் ஊரை எல்லைச் சாமிகள் காப்பாற்றும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது.

தமிழ்நாட்டில் ஆரிய வந்தேறிகளால், பூர்வகுடி தமிழர்கள் புழுவைக்காட்டிலும் கேவலமாக, சாதிகளாய் பிரிக்கப்பட்டு, உரிமைகள் பறிக்கப் பட்டுக்கிடந்த காலத்தில், அவர்களுடைய உரிமைகளை பாதுகாக்க எல்லைச் சாமியாய் வந்து நின்றவர்தான் தந்தை பெரியார்.

தமிழக மக்கள் தலைநிமிர்ந்து வாழ, அவர்கள் கல்வி அறிவைப் பெற வேண்டும் என்றும், சாதிகளின் அடிப்படையில் எல்லா மட்டத்திலும் வகுப்புவாரி உரிமை வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.

அவருக்கு முன்னும் சில தலைவர்கள் குரல் கொடுத்திருந்தார்கள். ஆனால், அவர்கள் தங்களு டைய நிலைமைக்கு எது காரணமோ அதைக் கண்டறிந்து எதிர்க்க மறந்தார்கள்.

பெரியார்தான், சமூக இழிவுக்கு அடிப்படை யான காரணங்களை கண்டறிந்து அவற்றை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்.

சொந்த வாழ்க்கையில் நேர்மையை கடைப் படித்த அவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பொதுவாழ்க்கைக்கு வந்தார். எந்த நிலையிலும் சுயமரியாதை உணர்வை மதித்தார்.

தனக்கு சரியென்று பட்டால் அதன் விளைவு களை பார்க்காமல் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். அதேசமயம் தனக்கு பிடிக்கவில்லை என்றால் தயவுதாட்சண்யம் பார்க்காமல் மல்லுக்கு நிற்பார். இதுதான் தந்தை பெரியாரின் குணம்.

காங்கிரஸ் தலைவராக இருந்தபோதுதான், திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் உள்ள வைக்கம் நகரில் உள்ள கோவிலைச் சுற்றிய தெருக்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கக்கூட உரிமை மறுக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து அந்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஒரு கட்டத்தில் போராட்டத்தை நடத்தக்கூட ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது.

1924 ஆம் ஆண்டு மே மாதம், போராட்டக் குழுவினர் தந்தை பெரியாரின் உதவியை கேட்டு கடிதம் அனுப்பினார்கள். வைக்கம் நகருக்கு சென்ற. அவரை, திருவனந்தபுரம் ராஜாவே சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அதை பெரியார் புறக்கணித்தார். சில நாட்கள் தங்கியிருந்து பெரியார் மக்களிடையே பேசினார். அவர்கள் எழுச்சிபெற்றனர். இதையடுத்து, நகரில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறிப் பேசியதாக பெரியார் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

அவரைத் தொடர்ந்து அவர் மனைவி நாகம்மையாரும், சகோதரி கண்ணம்மாவும் வைக்கம் நகருக்கு வந்து போராட்டத்தை தொடர்ந்தனர். பிரச்சனை பூதாகரமாகி, காந்தியே திருவனந்தபுரம் வர நேர்ந்தது.

அவருடைய சமாதானத்தையும் பெரியார் ஏற்கவில்லை. முடிவில், தெருக்களில் நடக்கலாம் என்று, கோவிலுக்குள் நுழையக்கூடாது என்றும் ராஜா அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பெரியார் இருந்தபோது நடந்தது இது.

காங்கிரஸ் கட்சி செயலாளர் ஆனபோது ஒரு நிகழ்வு பெரியாரின் வாழ்க்கையில் முக்கியமானது. நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் வா.வே.சு. அய்யர் என்பவர் குருகுலம் நடத்தினார். அதற்கான செலவுக்கு காங்கிரஸ் கட்சியின் பிராமணர் அல்லாத தலைவர்கள் ஏராளமான பணம் உதவி செய்தனர். ஆனால், அங்கு பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு தனியாக பந்தி வைக்கப்படுவதாக ஓமந்தூர் ரெட்டியாரின் மகன் புகார் கூறினார். இதையடுத்து பெரியார் சினம் கொண்டு, இந்த பிரச்சனையை விவாதத்துக்கு உட்படுத்தினார்.

வாவேசு அய்யர் தனது செயலை நியாயப் படுத்தினார். குருகுலத்துக்கு நன்கொடை கொடுத் தவர்கள் அதைக் கைப்பற்றும் நிலைமையை பெரியார் உருவாக்கினார். ஆனால், வா.வே.சு. அய்யர் இடையிலேயே மரணம் அடைந்தார். அதையடுத்து அந்தக் குருகுலம் தேய்ந்து அழிந்து விட்டது.

காங்கிரஸில் பேசுவது ஒன்று, செய்வது ஒன்றாக இருப்பதை படிப்படியாக உணர்ந்த பெரியார், அதிலிருந்து விலகினார். தனது சமத்துவ உரிமைக்கான போராட்டத்துக்கு, பிராமணத் தலை வர்கள் முட்டுக்கட்டை போடுவதையும், அதற்கு பிராமணரல்லாத தலைவர்கள் சிலரே ஆதரவாக இருப்பதையும் அறிந்து வெளியேறினார்.

அதன்பிறகுதான், சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கி, தமிழக மக்களுக்கு எது தேவை என்று விரிவான பிரச்சாரத்தை நடத்தினார். மாநிலம் முழுவதும் பிராமணர் அல்லாத தலைவர்களை ஒருங்கிணைத்து, மாநாடுகளை கூட்டி புரட்சிகரமான திட்டங்களை தீர்மானங்களை நிறைவேற்றினார். இது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

1929 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செங்கல்பட்டு நகரில் நடந்த மாநாட்டிலேயே, 16 வயதுக்கு மேல்தான் பெண்களுக்கு திருமணம், பெண்களுக்கு விவாகரத்து உரிமை, விதவைகள் மறுமணம். குறைந்த செலவில் திருமணம். தாய் மொழியிலேயே கல்வி. பொதுப் பணத்தில் பிறமொழிக் கல்வி கூடாது. சிறுமிகளுக்கு ஆரம்ப கட்டாயக் கல்வி. ஆசிரியர் பணியில் பெண்களுக்கு அதிக இடம். தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் முழுவதும் பெண்களுக்கே வழங்கவேண்டும். மூடநம்பிக்கையை கற்பிக்கும் புத்தகங்களைப பாடமாக வைக்ககூடாது என்றெல்லாம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இவையெல்லாம் அன்றைய காலகட்டத்தில் யாருமே துணிச்சலாக கூற முடியாதவை.

தமிழக மக்களுடை வாழ்வு செழிக்க தேவை யான எல்லாவற்றையும் பெரியார் சிந்தித்தார். அவரை பின்பற்றியவர்கள் சுயமரியாதையின் மகத்துவத்தை உணர்ந்தார்கள்.

தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்திக்கு இங்கே இடமில்லை என்றவரும் பெரியார்தான். 1937ல் ராஜாஜியின் இந்தித் திணிப்பை எதிர்த்து இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை பெற்று, கர்நாடக மாநிலம் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

பெரியாரின் சுயமரியாதைச் சிந்தனைகளை ஏற்றாலும், புதிய அரசியல் அணுகுமுறைகளை பின்பற்ற விரும்பினார் அண்ணா. அய்யாவிடம் இருந்து பிரிந்து தனி இயக்கம் கண்டார். விடுதலை பெற்ற நாட்டில் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு, அய்யாவின் சிந்தனைகளை நிறைவேற்றும் இடத்திற்கு வர வேண்டும் என்ற லட்சியத்துடன் அந்த இயக்கத்தை வளர்த்தார்.

ஆம். பெரியாரின் சிந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்றால், ஆட்சி அதிகாரம் நமது கையில் இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை அண்ணாவிடம் இருந்தது. தேர்தல் அரசியலுக்கு ஏற்றபடி கட்சியின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்று நினைத்தார்.

அவருடைய எழுத்துகளும், உரைகளும் லட்சக்கணக்கான எழுச்சிபெற்ற இளைஞர்களை அவருடைய தம்பிகளாக சேர்க்க உதவியது. அவரும் தன்னுடைய தம்பிகளை மேடையேற்றினார். பட்டி தொட்டியெங்கும் திராவிட கருத்தியலும், பகுத்தறிவு பிரச்சாரமும் பரவியது.

இனமானமும், மொழிப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை அண்ணா கட்டியெழுப்பினார். மொழிக் காகவும், மாநில உரிமைக்காகவும் சிறைசெல்லவும் அஞ்சாத கூட்டத்தை உருவாக்கினார். ஆளும் அரசு திமுக என்ற இயக்கத்தை கண்டு பதறியது. பதற்றத்திலேயே பல தவறான முடிவுகளை எடுத்தது. அந்தத் தவறான முடிவுகளே, திமுகவுக்கு உரமாகியது.

புத்த, சமணப் பள்ளிகளுக்கு அடுத்தபடியாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டங்கள், கலை, இலக்கியம் வழியாக மக்களுக்கு அறிவை புகட்டியது. மக்களுக்கு அவர்களுடைய உரிமைகளை எளிமையாக கற்பித்தது. பத்தே ஆண்டுகளில் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது திமுக.

தந்தை பெரியார் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ, அதையெல்லாம் சட்டபூர்வமாக நிறைவேற்றத் தொடங்கி, தமிழ் நாட்டின் காவல் அரணாகியது. ஆம், மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப்பட்ட மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர்சூட்டினார். தமிழை ஆட்சிமொழியாக்கினார். ஆண்டான் அடிமை முறையை அடித்து நொறுக்கும் சட்டங்களை இயற்றினார்.

குறுகிய காலத்தில் அண்ணா மறைந்தாலும், அவருடைய தம்பி கலைஞர் தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்று, பெரியாரும், அண்ணாவும் கலந்த கலவையாக நவீன தமிழகத்தை வடிவமைத்த சிற்பியானார். இந்தியாவின் முதன்மை மாநிலம் என்று முத்திரை பதிக்கும் திட்டங்களை நிறை வேற்றினார். கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சமூகநீதியை நிலைநாட்டினார்.

ஆளுங்கட்சியாக இருந்தால் மக்கள்நலத் திட்டங்களையும், உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்களையும் பார்த்து பார்த்து நிறைவேற்றினார். எதிர்க்கட்சியானால், மக்கள் நலனையும், சமூகநீதியையும் பாதுகாக்கும் கேடயமாக செயல்பட்டார்.

கலைஞர் மறைந்தார். ஆனால், பெரியார், அண்ணா, கலைஞர் என மூவரின் கலைவையாக உருவெடுத்திருக்கிறார் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். கணிக்கவே முடியாத காரியங்களை செய்து இந்தியாவையே அதிர வைத்திருக்கிறார்.

பெரியார், அண்ணா, கலைஞரைப் போல எழுதிக்கொண்டோ, பேசிக்கொண்டோ இருக்கவில்லை ஸ்டாலின். ஆனால், அந்த மூவரும் எழுதியவற்றை, பேசியவற்றை செயல்படுத்துவதில் வேகமாக இருக்கிறார்.

தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் கனவை, நனவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றார் கலைஞர். ஆனால், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் அரசாணைகளை வழங்கி பெரியாரின் கனவை நிறைவேற்றினார் ஸ்டாலின்.

தமிழக மக்களின் பறிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டு உரிமையை உச்சநீதிமன்றம் வரை சென்று மீட்டதோடு, இந்தியா முழுமைக்கும் அதை உறுதி செய்திருக்கிறார்.

தமிழக மக்களுக்கு எது நல்லதென்று பெரியார், அண்ணா, கலைஞர் தடுத்தும் கொடுத்தும் செயல்பட்டார்களோ, அவர்களு டைய வழித்தோன்றலாக முதல்வர் ஸ்டாலினும் செயல்படத் தொடங்கியிருக்கிறார்.

தமிழ்நாட்டின், தமிழ் மக்களின் எல்லைச் சாமியாக திமுகவும் அதன் தலைவர்களும் தொடர்கிறார்கள்.

Leave A Reply