மாதம் ஒருமுறை மின் கட்டணம்… முதல்வருக்கு வேண்டுகோள்! – உதயமுகம் தலையங்கம்

Share

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்த வேண்டுகோளை முன் வைக்கிறோம்.

தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பானதுதான். நடுத்தர குடும்பத்தினர் திமுகவுக்கு வாக்களிக்க முக்கியமான காரணங்களில் ஒன்று, மின்சாரக் கட்டணம்தான்.

கண்டபடிக்கு மின்கட்டம் வசூலிக்கப்பட்டது. யாரிடம் புகார் அளிப்பது என¢றுகூட தெரியவில்லை. புகார் அளித்தாலும் எல்லாம் சரியாத்தான் கணக்கு போட்டிருக்கிறோம் என்று அலட்சியமாக பதில் வரும்.

இப்படிப்பட்ட நிலையில்தான், ஒவ்வொரு மாதமும் மின்கட்டணம் கணக்கிடப்பட்டு, கூடுதல் கட்டணம் தவிர்க்கப்படும் என்று திமுகவின் வாக்குறுதி பால்வார்த்தது.

ஆனால், கடுமையான கடன் சுமையோடு பொறுப்பேற்ற திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் சிலவற்றையும், சொல்லாத சிலவற்றையும் சேர்த்தே நிறைவேற்றியது.

சமூகநீதிக் காவலனாய் தொடர்ந்து தன்னை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் திமுக அரசுக்கு நிதிச் சுமை அளிக்கும் வாக்குறுதிகளில் மின்கட்டணம் செலுத்தும் முறையை மாற்றி அமைப்பது முக்கியமானது.

ஆனால், இந்த வாக்குறுதியையும், குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் வாக்குறுதியையும் இந்த ஆண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

கூடுதல் கடன் சுமையில்லாமல் அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்ற நோக்கம் நல்லதுதான். ஆனால், மக்களுடைய எதிர்பார்ப்பை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதே மக்களுடைய நல்லெண்ணத்தை பெற உதவும்.

இவை இரண்டோடு, அடுத்து அரசு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், ரேஷனில் போடப்படும் கருப்பு அரிசி. கோழிகள்கூட சாப்பிட மறுக்கும் இந்த அரசியை போடுவதற்கு போடாமலே இருக்கலாம்.

கிலோ 2 ரூபாய், அல்லது ஒரு ரூபாய் விலை வைத்து, சமைத்துச் சாப்பிடக்கூடிய நல்ல அரிசியை வழங்க முடிவு செய்தால் அதைக்கூட மக்கள் வரவேற்கும் நிலையில் இருக்கிறார்கள்.
மனதில் தோன்றியதை சொல்லிவிட்டோம். •

Leave A Reply