விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 12 – ஆதனூர் சோழன்

Share

விண்வெளியில் ஒரு நாள் (ஆகஸ்ட் 06, 1961)

2 மணி நேரம், 15 நிமிடங்கள் என விண்வெளியில் தங்கியது பெரிய சாதனையாக கருதப்பட்டது.

முதன்முறையாக ஒரு நாள் முழுவதும் விண்வெளியில் தங்கிவிட்டு பூமிக்குத் திரும்பினார் ரஷ்ய வீரர்.

அவர் பெயர் கெர்மன் டிட்டோவ். 25 வயது நிரம்பிய இந்த ரஷ்ய வீரர் 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி வோஸ்டாக்-2 ராக்கெட்டில் விண்வெளிக்குப் புறப்பட்டார். ஒருவர் மட்டுமே இருக்கக்கூடிய அந்த ராக்கெட்டில் அவர் பூமியைச் சுற்றத் தொடங்கினார்.

“நான் வசதியாக இருக்கிறேன்” என்று ஒவ்வொரு கண்டத்திற்கும் அவர் செய்தி அனுப்பினார்.

தனது விண்கலத்தில் பூமியை 20 முறை சுற்றி வந்தார். பின்னர் தரையிறங்கினார்.

தூங்குகிற நேரம் வந்தபோது ரேடியோ தொடர்புகளை அணைத்துவிட்டு ஏழரை மணிநேரம் நன்றாகத் தூங்கி எழுந்தார். பிறகு ரேடியோ தொடர்புகளை இணைத்தார்.

“எனக்குள் நிரம்பி வழியும் மகிழ்ச்சிகரமான உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. ஒரு பொறுப்பு மிக்க கவுரவமிக்க கடமையை நான் மேற்கொண்டு இருக்கிறேன்”

பைக்கானூர் ஏவுதளத்திலிருந்து வோஸ்டாக்-2 விண்கலம் புறப்படுவதற்கு முன் டாஸ் செய்தி நிறுவனத்தின் மூலம் டிட்டோவ் விடுத்த செய்தி இது.

அந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற இருந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநாட்டுக்கு தனது பயணத்தை அர்ப்பணிப்பதாக அவர் கூறினார்.

சோவியத் அரசாங்கத்திற்கும் அதன் தலைவர் குருஷேவிற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தனது மதிப்பிற்குரிய நண்பர் யூரி காகரினுக்கு தனது வாழ்த்துக்களை அனுப்பினார்.

விண்வெளியில் இருக்கும் சமயத்தில் குருஷேவிற்கு ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பினார் டிட்டோவ். அதற்கு குருஷேவ் பதில் செய்தி அனுப்பியிருந்தார்.

“சோவியத் யூனியனில் மக்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். உங்களுடைய வெற்றி அவர்களை கர்வம் கொள்ளச் செய்துள்ளது. நீங்கள் பூமிக்குத் திரும்புவதை எதிர்பார்த்து இருக்கிறோம்”

அதிபரின் வாழ்த்துக்களை பெற்ற டிட்டோவ் விண்வெளி யில் உடற்பயிற்சிகளை செய்தும் எடைக்குறைவால் ஏற்படும் பாதிப்புகளை கண்காணித்தும் நேரத்தை கழித்தார்.

வோஸ்டாக்-2 விண்கலத்தின் இந்த சாதனையை அமெரிக்க விஞ்ஞானிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதினார்கள்.

ஆகஸ்ட் 7ஆம் தேதி பூமிக்குத் திரும்பியபோது சுமார் 25 மணி நேரம் டிட்டோவ் விண்வெளியில் தங்கியிருந்தார் என கணக்கிடப்பட்டது.

இரண்டு மிகப்பெரிய தேசங்களுக்கு இடையிலான போட்டியில் இது மிக முக்கியமான வெற்றியாக கருதப்பட்டது.

மேஜர் டிட்டோவ் இளைஞர்களின் முன்மாதிரியாக திகழ்ந்தார். சோவியத் யூனியனின் மிக உயரிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டது.

கி.பி. 2000ம் ஆவது ஆண்டு தனது 65வது வயதில் டிட்டோவ் மரணமடைந்தார்.

விண்வெளி ஆராய்ச்சி வரலாறு – 13 – ஆதனூர் சோழன்

Leave A Reply