அறிவெனும் ஆயுதம் – Fazil Freeman Ali

Share

இன்டெலிஜென்ஸ் (Intelligence) என்ற‌ ஆங்கில‌ வார்த்தைக்கு நாம் பொதுவாக‌ அறிவு அல்ல‌து புத்திசாலித்த‌ன‌ம் என்றுதான் பொருள் கொள்கிறோம், இல்லையா..?

ஆனால் உள‌விய‌லாள‌ர்க‌ளோ நாலெட்ஜ் (Knowledge) என்ற‌ வார்த்தைக்குத்தான் அறிவு என்று பொருள் கொள்கின்ற‌ன‌ர். இன்டெலிஜென்ஸ் (Intelligence) என்றால் நுண்ண‌றிவு என்று வ‌கைப்ப‌டுத்துகின்ற‌ன‌ர்.

அது என்ன‌ அறிவும் நுண்ண‌றிவும்..?

அறிவு என்ப‌து த‌க‌வ‌ல்க‌ளின் சேக‌ரிப்பு ம‌ட்டுமே. அந்த‌ த‌க‌வல்க‌ளை ப‌குப்பாய்வு செய்து புதிய‌ முடிவுக‌ளையும் அனுமான‌ங்க‌ளையும் எடுப்ப‌தையே நுண்ண‌றிவு என்கின்ற‌ன‌ர்.

நான் முனைவ‌ர் ப‌ட்ட‌ம் பெற்ற‌து பொருளாதார‌த்தில் என்றாலும் உள‌விய‌ல்துறை மாணவ‌ர்க‌ள் ம‌ற்றும் பேராசிரிய‌ர்க‌ளுட‌ன் அதிக‌ம் ப‌ழ‌குவேன். ம‌னித‌ ம‌ன‌ம், உற‌வுக‌ள், பிர‌ச்சினைக‌ளை நாம் எதிர்கொள்ளும் வித‌ம், நாமே ஒரேமாதிரி சூழ‌லுக்கு வெவ்வேறு மாதிரி ந‌ட‌ந்துகொள்வ‌து, இதெல்லாம் எப்போதும் என்னை ஆச்ச‌ரிமூட்டி சிந்திக்க‌ வைப்ப‌வை.

“அவ‌ளுக்கு பேய் புடிச்சிருக்கு” அல்ல‌து “இவ‌ன் பைத்திய‌மாய்ட்டான்” என்று ம‌சூதிக‌ளிலும் கோவில்க‌ளிலும் ம‌னித‌ர்க‌ள் ச‌ங்கிலிக‌ளில் க‌ட்டிவைக்கப்ப‌ட்ட‌து இப்போது பெரும‌ள‌வுக்கு குறைந்திருப்ப‌த‌ற்கு கார‌ண‌ம் இந்த‌ உள‌விய‌ல்துறை அடைந்திருக்கும் விஞ்ஞான‌ முன்னேற்ற‌மும் அது நேர‌டியாக‌வும் ம‌றைமுக‌மாக‌வும் ச‌மூக‌த்தில் ஏற்ப‌டுத்தியிருக்கும் தாக்க‌மும்தான்.

கிருஸ்த‌வ‌த்தை பொறுத்த‌வ‌ரை சென்ற‌ நூற்றாண்டுவ‌ரைகூட‌ சிலுவையை ப‌ழுக்க‌க்காய்ச்சி சூடு வைக்கும் ப‌ழ‌க்க‌ம் ஐரோப்பாவில் ப‌ர‌வ‌லாக‌ இருந்த‌து. இன்றும் சில‌ கிருஸ்த‌வ‌ போத‌க‌ர்க‌ள் பொதுமேடைக‌ளிலேயே பேயோட்டுவ‌தை பார்க்க‌லாம்.

சில‌ ஆண்டுக‌ளுக்குமுன் ஏர்வாடி த‌ர்காவில் ஏற்ப‌ட்ட‌ தீவிப‌த்தில் ச‌ங்கிலியால் பிணைக்க‌ப்ப‌ட்டிருந்த ப‌ல‌ர் த‌ப்பியோட‌ முடியாம‌ல் தீயில் க‌ருகி உயிரிழ‌ந்த‌தை நீங்க‌ள் ம‌ற‌ந்திருக்க‌மாட்டீர்க‌ள்.

இப்ப‌டியான‌ பிற‌ள்வுக‌ள் ஒருவித‌ அறிவின் குறைபாடு என்று ம‌க்க‌ளுக்கு புரிய‌வைக்க‌வே விஞ்ஞானிக‌ளுக்கு நீண்ட‌கால‌ம் ஆயிற்று. கார‌ண‌ம் இவ‌ற்றை இறைச் சாப‌ங்க‌ள் என்று ம‌த‌ங்க‌ள் நீண்ட‌கால‌மாக‌ ம‌க்க‌ளை ந‌ம்ப‌ வைத்திருந்த‌தே.

இந்த‌ அறிவை, குறிப்பாக‌ நுண்ண‌றிவை உளவியலாளர்கள் மூன்று வகையாக‌ பிரிக்கிறார்க‌ள்:

1)Intelligence Quotient (IQ) நுண்ணறிவு அளவு
2) Emotional Quotient (EQ) உணர்ச்சி அளவு
3) Social Quotient (SQ) சமூக அளவு

1. நுண்ணறிவு அளவு (Intelligence Quotient) (IQ): ஐன்ஸ்டைனுடைய‌ IQ அவ்வ‌ள‌வு, இன்னாருடைய‌ IQ இவ்வ‌ள‌வு என்று ம‌னித‌ர்க‌ளின் நுண்ண‌றிவை த‌ர‌ நிர்ண‌ய‌ம் செய்வ‌தை பார்த்திருப்பீர்க‌ள். இது ஒருவ‌ரின் புரிதல், நினைவாற்ற‌ல் ம‌ற்றும் க‌ணித‌த் திற‌னை குறிக்கும் அள‌வீடு. பொதுவாக‌ உய‌ரிய‌ IQ கொண்ட‌வ‌ர்க‌ள் க‌டின‌மான‌ பிர‌ச்சினைக்குக்கூட‌ எளிதான‌ தீர்வை எட்டுப‌வ‌ர்க‌ளாக‌வும் த‌ற்க‌ரீதியாக‌ சிந்திக்க‌க்கூடிய‌வ‌ர்க‌ளாக‌வும் இருப்ப‌ர்.

2. உணர்ச்சி அளவு (Emotional Quotient) (EQ): இது வெறும் அறிவு சார்ந்த‌த‌ல்ல‌, உண‌ர்வு சார்ந்த‌து. நாம் மற்றவர்களுடன் எப்ப‌டி ப‌ழ‌குகிறோம், அமைதியை பேணுகிறோம், எந்த‌ அள‌வுக்கு நேரம் தவறாமையை கடைபிடிக்கிறோம் போன்ற‌வை இது சார்ந்த‌வை. எந்த‌ அள‌வுக்கு நாம் பொறுப்புடன் ந‌ட‌க்கிறோம், நேர்மையாக இருக்கிறோம், பிற‌ருடைய‌ எல்லைகளுக்கு மதிப்பளிக்கிறோம், பணிவுட‌ன் ப‌ழ‌குகிறோம் என்ப‌தும் ந‌ம் EQ-வின் அள‌வை பொறுத்த‌து. பெரிய‌ அறிவாளிக‌ள் சில‌ருக்கு மேற்சொன்ன‌ த‌ன்மைக‌ள் அற‌வே இல்லாம‌லோ குறைவாக‌வோ இருப்ப‌தன் கார‌ண‌ம் அவர்க‌ளுக்கு IQ அதிக‌மிருந்தும் EQ குறைவாக‌ இருப்ப‌தே.

மிக‌ முக்கிய‌மாக‌, பிர‌ச்சினைக‌ள் அல்ல‌து க‌ருத்துமுர‌ண்க‌ள் ஏற்ப‌டும்போது அவ‌ற்றிலிருந்து த‌ன்னை வில‌க்கி நிறுத்தி பிர‌ச்சினையை objective-ஆக‌ அணுக‌ இது அத்தியாவ‌சிய‌ம். பொதுவாக‌ ந‌ல்ல‌ நிர்வாகிக‌ளுக்கு இது அதிக‌மாக‌வும் க‌தாசிரிய‌ர்க‌ள் போன்றோருக்கு இது குறைவாக‌வும் இருக்கும் என்கிற‌து உள‌விய‌ல்.

3. சமூக அளவு (Social Quotient) (SQ): இது ந‌ம் ச‌மூக‌ வாழ்க்கை சார்ந்த‌து. நண்பர்களின் வலையமைப்பை உருவாக்கி அதை நீண்ட காலத்திற்கு பராமரிக்கும் ந‌ம் திறனை அளவிடும் அளவீடு இது. குடும்ப‌ உற‌வுக‌ளில் ச‌ம‌நிலை பேண‌வும் இது உத‌வும். இது வாசித்த‌லாலோ, சிந்திப்ப‌தாலோ வ‌ருவ‌த‌ல்ல‌.

சமூக நுண்ணறிவு என்பது தன்னையறித‌லிலும் ம‌ற்றும் த‌ன்னை சுற்றியிருப்ப‌வ‌ர்க‌ளை அறித‌லிலும் புரித‌லிலும் அட‌ங்கியிருக்கிற‌து. SQ அதிக‌ம் இருப்ப‌வ‌ர்க‌ள் பிற‌ரின் உண‌ர்வுக‌ளுக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌வ‌ர்க‌ளாக‌ இருப்பார்க‌ள். ச‌மூக‌ செய‌ல்பாட்டாள‌ர்க‌ள், சுற்றுச்சூழ‌ல் ஆர்வ‌ல‌ர்க‌ள்… ஏன் மானுட‌த்தை நேசிப்ப‌வ‌ர்க‌ள் அனைவ‌ருமே SQ த‌ழும்பி வ‌ழிப‌வ‌ர்க‌ளே.

B. எஃப்.ஸ்கின்னர் (F.Skinner) போன்ற‌ புக‌ழ்பெற்ற‌ உள‌ல‌விய‌லாள‌ர்க‌ள் கூற்றுப்ப‌டி அதிக IQ மற்றும் குறைந்த EQ, SQ உள்ளவர்களை விட அதிக EQ மற்றும் SQ உள்ளவர்கள் வாழ்க்கையில் மிக‌வும் முன்னேற்ற‌ம‌டைவ‌தோடு த‌ன் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்விலும் நிறைவோடு இருக்கிறார்க‌ளாம்.

துர‌திஷ்ட‌வ‌ச‌மாக‌ ந‌ம் ச‌ம‌கால‌ க‌ல்விமுறை மான‌வ‌ர்க‌ளின் IQ-வை அதிக‌ரிப்ப‌தற்கே அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் அளிக்கின்ற‌து. ந‌ம் பொதுப்புத்தியிலும் IQ அதிக‌ம் உள்ள‌வ‌ர்கள் மேதைக‌ள் என்ற‌ க‌ருத்தே ஆழ‌மாக‌ க‌ட்ட‌மைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.

சுருக்க‌மாக‌ சொல்வ‌தென்றால், உங்கள் IQ உங்கள் புத்திசாலித்த‌ன‌த்தை குறிக்கிறது; உங்கள் EQ உங்கள் குணாதிசயத்தைக் குறிக்கிறது, உங்கள் SQ உங்கள் வ‌சீக‌ர‌த்தன்மையை குறிக்கிறது.

இப்போது 4-வது ஒரு புதியவ‌கை ப‌ண்பை ந‌வீன‌ உள‌விய‌ல் அறிமுக‌ப்ப‌டுத்தியிருக்கிற‌து. அது…

4) Adversity Quotient (AQ) பாதக நிலை: இது வாழ்க்கையின் மிக‌க்கடினமான க‌ட்ட‌ங்க‌ளை கடக்கையிலோ அல்ல‌து ம‌ன‌தை உருக்குலைக்கும் நிக‌ழ்வுக‌ள் ந‌ட‌க்கையிலோ த‌ன்னை இழக்காமல் அதிலிருந்து வெளியே வருவதற்கான ந‌ம் திறனின் அளவுகோல்.

த‌ற்கொலை செய்யும் எண்ண‌ம் ஏற்ப‌டுவ‌தை இந்த‌ நிலையின்கீழ் உள‌விய‌ல் வ‌கைப்ப‌டுத்துகிற‌து.

பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது யார் பிர‌ச்ச‌னையிலிருந்து ஓடி ஒழிய‌ முய‌ல்வார்க‌ள்..? யார் தமக்கு நெருக்க‌மான‌வ‌ர்க‌ளைக்கூட‌ கைவிடுவார்கள்..? யார் தற்கொலை செய்து கொள்வார்கள்..? என்பதை AQ தீர்மானிக்கிறது.

த‌னிப்ப‌ட்ட‌ உற‌வில் சிக்க‌ல்க‌ள், பெரும் பொருளாதார‌ இழ‌ப்பு, உட‌லிய‌ல் சார்ந்த‌ ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற‌ நோய்க‌ள் முத‌ல் இய‌ற்கை பேர‌ழிவு, அர‌சிய‌ல் அனாச்சார‌ங்க‌ள் வ‌ரை எண்ண‌ற்ற‌ அக‌ ம‌ற்றும் புற‌ச்சூழ‌ல்க‌ளின் தாக்க‌த்தை நாம் எப்ப‌டி எதிர்கொள்கிறோம் என்ப‌து இந்த‌ AQ சார்ந்த‌து.

போதுவாக‌ நாம் நிறைய‌ புத்த‌க‌ங்க‌ள் ப‌டிப்ப‌தாலேயே அறிவாளி ஆகிவிட‌லாம் என்று நிகைக்கிறோம். பெற்றொர்க‌ளோ த‌ம் பிள்ளைக‌ளை ந‌ல்ல‌ க‌ல்லூரியில் ப‌டிக்க‌வைப்ப‌தாலேயே அவ‌ர்க‌ள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விடுவார்க‌ள் என்று நினைக்கிறார்க‌ள். இர‌ண்டுமே த‌வ‌று.

அறிவு என்ப‌து வெறும் ஏட்டுக்க‌ல்வி ம‌ட்டுமல்ல‌. இன்னும் சொல்ல‌ப்போனால் ந‌ம் ச‌ம‌கால‌ க‌ல்விமுறை குமாஸ்தாக்க‌ளை உருவாக்க‌வே பெரிதும் ப‌ய‌ன்ப‌டுகிற‌து.

சிந்திப்ப‌து எப்ப‌டி என்று க‌ற்றுக்கொடுக்க‌ வேண்டிய‌ க‌ல்வி, க‌டிவாள‌மிட‌ப்ப‌ட்ட‌ குதிரைக‌ளை உற்ப‌த்திசெய்யும் கூடார‌மாக‌ மாறி ப‌ல‌ ஆண்டுக‌ள் ஆகிவிட்ட‌து.\

இந்த‌ நிலை மாறி ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ளை உருவாக்க‌ வேண்டுமென்றால் ப‌ள்ளிக்க‌ல்வி க‌ட‌ந்து ந‌ம் குழ‌ந்தைக‌ளுக்கு அவ‌ர்க‌ள் வ‌ள‌ரும்போதே விளையாட்டு, இசை, த‌ற்காப்புக்க‌லை, உள‌விய‌ல் போன்ற‌ வெவ்வேறு ப‌ரிணாம‌ங்க‌ளை நாம் அறிமுக‌ப்ப‌டுத்த‌ வேண்டும்.

வ‌ள‌ர்ச்சிய‌டைந்த‌ நாடுக‌ள் இப்ப‌டித்தான் த‌ம் இள‌ம் த‌லைமுறையின‌ரை உருவாக்குகின்ற‌ன‌. இங்கு க‌ல்வி கேள்விக‌ள் கேட்க‌ க‌ற்றுக்கொடுக்கிற‌து, தூண்டுகிற‌து. ஒவ்வோராண்டும் ஆசிரிய‌ர்க‌ளுக்கு ப‌யிற்சிக‌ள் அளிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. சென்ற‌ ஆண்டின் புதிய‌ க‌ண்டுபிடிப்புக‌ளும் ஆய்வு முடிவுக‌ளும் ஆசிரிய‌ர்க‌ளுக்கு புதுப்பிக்க‌ப்ப‌டுவ‌தன்மூல‌ம் மாண‌வ‌ர்க‌ளின் திற‌ன் மேம்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து.

இறுதியாக… பெற்றோர்க‌ளே, உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை ப‌ய‌ண‌த்துக்கு உத‌வ‌ சாலையை தயார் செய்து அதில் அவ‌ர்க‌ளை விர‌ல்பிடித்து ந‌ட‌த்த‌ நினைக்காதீர்க‌ள். உங்கள் குழந்தைகளை அவ‌ர்க‌ள் தாமாக‌வே சாலைக‌ள் உருவாக்க‌வும், எந்த‌ சாலையிலும் ந‌ட‌க்கும் திற‌மும் திட‌மும் உள்ள‌வ‌ர்க‌ளாக‌வும் தயார்படுத்துங்கள். அதுதான் அவ‌ர்க‌ளை முழுமையான‌ ம‌னித‌ர்க‌ளாக‌, மானுட‌ நேச‌ம் கொண்ட‌ ம‌னித‌ர்க‌ளாக‌ உருவாக்கும்.

Leave A Reply