யாழிற்கு இந்தியாவிலிருந்து ஒரு விமானத்தையாவது கொண்டு வாருங்கள்

Share

“யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்துக்காக எமது தரப்பில் இருந்து செய்யக்கூடிய அனைத்தையும் செய்துவிட்டோம். ஆனால் விமானங்கள் வருவதில்லை.

எனவே, இந்தியாவிலிருந்து ஒரு விமானத்தையாவது கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுங்கள்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் துறைசார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து எவரும் கொண்டு செல்லப்படவில்லை. ’விரைவில் விமான நிலையத்தைத் திறவுங்கள், விமானங்கள் அனுப்படும்’ என்று சில விமான சேவை நிறுவனங்கள் உறுதியளித்திருந்தன. ஆனால், இதுவரையும் எந்தவொரு விமானமும் அங்கு வரவில்லை. தேவையான ஏற்பாடுகளை நாம் செய்துகொடுத்துள்ளோம்.

இந்திய எயார் லைன் விமானம் வரும் எனக் கூறப்பட்டது. அதுவும் வரவில்லை. தூது அனுப்பினோம். தீர்வு இல்லை.

பிரச்சினைகள் இருந்தால் எம்முடன் பேச்சு நடத்தலாம். அதற்கான கோரிக்கையும் விடுக்கப்படவில்லை.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்காக பெருமளவு நிதி செலவிடப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. எனவே, இந்தியாவுக்குச் சென்று பேச்சு நடத்தி, ஒரு விமானத்தையாவது கொண்டு வாருங்கள். எமது தரப்பில் செய்யக்கூடிய அனைத்தையும் செய்துள்ளோம்” – என்றார்.

Leave A Reply