கருணாநிதி எனும் கலைஞர்! – கிள்ளை ரவீந்திரன்

Share
நாகப்பட்டிணம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள, திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும்.
அழகிரிசாமி காரணம்
கலைஞர், தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூண் என்று வர்ணிக்கப்பட்ட, பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கலைஞர், தனது 13வது வயதில் அரசியலில் அடியெடுத்துவைத்தார். இதைத்தான் கட்சி தொண்டர்கள் சிலர் அழகிரியால்தான் கலைஞர் அரசியலுக்கு வந்தார் என்பார்கள்.
சாதனை தலைவர்
12 முறை எம்.எல்.ஏ. 5 முறை முதலமைச்சர், 10 முறை தி.மு.க. தலைவர் என்ற சாதனையை, இந்தியாவில் இது வரை யாரும் செய்ததில்லை. கலைஞருக்கு மட்டுமே உரியது இது.
தோல்வி அறியாதவர்
பொது வாழ்க்கையில், தோல்வியே அறியாதவர் கலைஞர். 1957ம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக சட்ட மன்றத்தில் அடியெடுத்து வைத்தார். 1957ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டும் போட்டியிடவில்லை. போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். தோல்வி என்பதையே காணாதவர்.
காப்பிய தலைவர்
கலைஞருக்கு பிடித்த தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம். எப்போதும் மேசையில் வைத்திருப்பது திருக்குறள் புத்தகம். மஞ்சள் துண்டை ஒரு அடையாளத்துக்காக அணிந்திருப்பதாக கூறுவது வழக்கம்.
தொடர் ஓட்டம்
தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினரான கலைஞர், 1957 ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார்.
கடைசி வாக்கியம்
‘ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’என்று தனது கல்லறையில் எழுத வேண்டும் என்று தனது விருப்பத்தை தனது குடும்பத்தினரிடமும், கட்சி நிர்வாகிகளிடமும் தெரிவித்துள்ளார்.
சுத்த சைவம்
ஆரம்ப காலத்தில் அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்ட கலைஞர், நாளடைவில் செரிமான பிரச்னை ஏற்படவே, சைவத்திற்கு மாறிவிட்டார். தினமும் தனது சாப்பாட்டில் ஏதாவது ஒரு வகைக் கீரையை சேர்த்துக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இருபக்கமும் ஷார்ப்
பரவலாக மனிதனுக்கு மூளையின் இரு பக்கங்களில் ஏதாவது ஒன்றுதான் சிறப்பாக செயல்படும் என்பார்கள். ஆனால் இரண்டுமே மேன்மையாகச் செயல்படுவது கலைஞருக்குத்தான் என பிரபல நரம்பியல் நிபுணர் ராமமூர்த்தியே ஒரு முறை தெரிவித்திருந்தார்.
நினைவாற்றல்
எந்த ஊருக்கு சென்றாலும் சரி, அல்லது தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றாலும் சரி, கடந்த முறை அங்கு வந்த போது, தான் பார்த்த நபர்கள் பற்றியோ அல்லது பேசிய பேச்சுக்கள் பற்றியோ அப்படியே எடுத்துக் கூறும் அசாத்திய திறமை படைத்தவர். அந்த அளவு நினைவாற்றில் கொண்ட பெரும் அரசியல் தலைவர்.
எம்ஜிஆரை ஆண்டவர்
கலைஞரை, ஆண்டவரே என்றுதான் முன்பெல்லாம் எம்.ஜி.ஆர் அழைப்பார். அதேபோல மூனாகானா என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் அழைப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
தங்கம் அணியா தங்கத்தலைவர்
தி.மு.க. தேர்தல் செலவுக்கு யாரும் எதிர்பாராத வகையில் ரூ.11 லட்சம் ரூபாய் வசூலித்துத் தந்துள்ளார் கலைஞர். அப்போது ரூ.11 லட்சம் என்பது பெரிய தொகை என்பதால், கலைஞரின் திறமையை பாராட்டி, அறிஞர் அண்ணா அணிவித்த மோதிரத்தைக் கலைஞர் கழற்றியதே இல்லையாம். ஆனால், இதுவரை அவர் ஒரு முறை கூட , தங்க சங்கிலியை தனது உடலில் அணிந்ததில்லையாம்.
மிக மூத்த பத்திரிகையாளர்
14 வயதில் மாணவ நேசன் என்ற கையெழுத்து பத்திரிக்கையை துவக்கியவர் கலைஞர். இன்று தன்னுடைய 92 வயதிலும் முரசொலி பத்திரிகையை அவர் திருத்துவது வழக்கம். ஆன்மீக சீர்திருத்தவாதி ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றையும் காவியமாக படைத்து, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப செய்துள்ளார் கலைஞர்.
பெயரை கேட்டதும் அதிரும்
திரையில் திரைக்கதை வசனகர்த்தா பெயர் வரும்போது ரசிகர்களின் பெரும் கைதட்டல் வரவேற்பை பெற்ற ஒரே எழுத்தாளர் கலைஞர் மட்டுமே என்கிறார்கள் திரைத்துறை பற்றி அறிந்தவர்கள். கலைஞரின் வசனங்களுக்காகவே திரைப்படங்கள் மக்கள் மத்தியில் சென்றடைந்த காலகட்டங்கள் இருந்தனவாம்.

Leave A Reply