இந்து- முஸ்லிம்கள் இடையே வன்முறை: மற்றுமொரு இந்துக் கோவில் முற்றுகை

Share

பிரிட்டனின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸின் ஸ்மெத்விக் நகரில் உள்ள துர்கா பவன் கோவில் முற்றுகையிடப்பட்டிருந்த நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் துபாயில் இடம்பெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய- பாகிஸ்தான் அணிகள் மோதிய
போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து லீசெஸ்டர்ஷையர் இந்து – முஸ்லிம்கள் இடையே வன்முறை வெடித்தது. இதன் போது லீசெஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றின் இருந்த கொடி கிழிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் அந்த பகுதியில் பெருமளவு போலீஸார் குவிக்கப்பட்டதுடன் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் 47 பேர் வரையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்துக் கோவில் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு லண்டன் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே, வெஸ்ட் மிட்லாண்ட்ஸின் ஸ்மெத்விக் நகரில் உள்ள துர்கா பவன் கோயிலுக்கு வெளியே சுமார் 200 பேர் வரையில் ஒன்று கூடி குறித்த ஆலயத்தை முற்றுகையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து கலாசார வள மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் மீது திட்டமிடப்பட்ட போராட்டம் குறித்து அறிந்திருப்பதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து நிகழ்வு இரத்து செய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த ஆலயம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட 18 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தி வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார் என மிட்லாண்ட்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளதுடன், உள்ளூர் மற்றும் பிராந்தியம் முழுவதும் நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply