மன்யோஷு (Manyoshu)

Share

மன்யோஷு என்பது ஜப்பான் நாட்டின் பழமையான இலக்கியங்களில் ஒன்று. “பத்தாயிரம் இலைகளின் தொகுப்பு” என்று அதற்குப் பொருள். கிட்டத்தட்ட நமது சங்க இலக்கியப் பாடல்களைப் போன்றது. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சீன மொழி கலந்த எழுத்துருவில் எழுதப்பட்டது.

அதற்கு முன்பு வாய்மொழிப் பாடல்களாக இருந்த மன்யோஷுப் பாடல்கள், ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இலக்கியமாதலால், இன்றைய ஜப்பானியர்கள் அதைப் புரிந்து கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. “The Origin of Japanese Language” என்ற ஆய்வு நூலை எழுதிய ஜப்பானியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சுசுமு ஓனோ, தங்கள் மொழியில் படிக்கப்படாமல் இருந்த மன்யோஷுப் பாடல்களை இன்றைய ஜப்பான் மொழியில் (நிஹோங்கோ) மொழி பெயர்த்தார்.

இதனால் மொழியைப் படிக்க முடிந்தாலும், பாடலின் கருத்துகள், உள்ளுறைச் செய்திகளைப் புரிந்து கொள்வதில் சிக்கல் எழுந்தது. நமது சங்க இலக்கியப் பாடல்களை இன்றைய மாணவர்கள் நேரடியாகப் படித்துப் பொருள் விளங்கிக் கொள்ள முடியாது. அதற்கான திணை, துறை, காதல் பாடல்களாக இருந்தால் அகத்திணை மரபு, கவிதை இலக்கணம் ஆகிய இவ்வளவையும் பேராசிரியர்கள் விளக்கிச் சொல்லும் போதுதான் அதன் முழுமையான விழுமியங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அதே சிக்கல் ஜப்பானிய மொழி இலக்கியமான மன்யோஷுவுக்கும் நிகழ்ந்தது.

நமது சங்க இலக்கிய அகத்திணை மரபுகளை ஜப்பானிய இலக்கியமான மன்யோஷுவுக்கும் பொருத்திப் பார்த்தால் அதிலிருக்கும் நுட்பமான செய்திகளை மிகத் தெளிவாகவும், எளிமையாகவும் புரிந்து கொள்ள முடியும். தமிழில் இப்படி ஒரு மரபு இருக்கிறது என்று கேள்விப்பட்ட சுசுமு ஓனோ, தமிழ்நாட்டுக்கு வந்து சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பொற்கோவிடம் தமிழ் கற்றார். இலங்கை, தமிழ்நாடு பகுதிகளின் பிற தமிழ்ப் பேராசிரியர்கள் மூலம் சங்க இலக்கியம், அகத்திணை மரபு பற்றி அறிந்தார்.

இவர்களை ஜப்பானுக்கு அழைத்துச் சென்று அங்கு பல கருத்தரங்கங்களையும், ஆய்வுகளையும் நிகழ்த்தினார். இதன் விளைவாக ஜப்பான் மொழியின் தொகை நூல்களான மன்யோஷு, கோஜிகி, ஜென்ஜி உள்ளிட்ட இலக்கியங்களை ஜப்பான் மக்கள் கற்றுத் தேர்ந்தும், புரிந்தும் கொண்டனர். ஜப்பான் – தமிழ் மொழி உறவு குறித்தும், ஜப்பான் மொழியில் உள்ள தமிழ் சொற்களைப் பற்றியும் ஆய்வுகள் நடத்தி, அந்த ஆய்வு முடிவுகளையும் மக்கள் அறிய வைத்தார் ஓனோ.

பேராசிரியர் ஓனோ 1919 ஆம் ஆண்டில் பிறந்தார். 1957 ஆம் ஆண்டில் “ஜப்பானிய மொழிகளின் தோற்றம்” என்ற நூலை வெளியிட்டார். பின்னர் 1980 ஆம் ஆண்டு வரை ஜப்பான் மொழியின் தோற்றம், ஒப்பியல் நோக்கில் ஜப்பான் – கொரிய மொழிகள், ஒப்பியல் நோக்கில் ஜப்பான் – தமிழ் என்று பல ஆய்வுகளை மேற்கொண்டார்.

இவர் தமிழகத்தில் செய்த களப்பணிகளில் கண்டு பிடிக்கப்பட்ட உண்மைகள், தரவுகளின் அடிப்படையில் நிகழ்த்திய ஆய்வுரைகளின் தொகுப்பினை ஜப்பான் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதை ஜப்பானிய மக்கள் பெருமளவில் பார்த்து ரசித்தனர்.

1981 ஆம் ஆண்டில் ஓனோ பிரிதொரு பேராசிரியருடன் இணைந்து “ஜப்பானிய ஒரு பொருட் பன்மொழி அகராதி” ஒன்றை உருவாக்கினார். இம்முடிவுகளைக் கொண்டு, 1981 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொண்டு “ஜப்பானிய – தமிழ் மொழி தொடர்பு ஒப்பியல் ஆய்வு” என்ற கட்டுரையை வழங்கினார். அவருடைய இந்தப் புதிய ஆய்வு, தமிழர்கள் பலருக்கும் புதிய ஆய்வுக் களங்களை அறிமுகம் செய்ததுடன், தூரக் கிழக்காசிய நாடுகளில் தமிழ் மொழி உறவு, தமிழ்ப் பண்பாட்டுத் தாக்கங்கள் போன்ற வெளியுலகம் அறியாத செய்திகளை அறிய வைத்தது.

மொழியியல் பேராசிரியர் சுசுமு ஓனோ (1919-2008) அவர்களின் பிறந்த நாள் (22.08.1919) இன்று.

Leave A Reply