முதுமையும் சுய‌ம‌ரியாதையும் – Fazil Freeman Ali

Share

ப‌ல‌ முறை போல‌ந்து வ‌ந்திருக்கிறேன், ஒரே வ‌ருட‌த்தில் மூன்று முறை வ‌ந்த‌தெல்லாம்கூட‌ உண்டு. ஜோன்னாவுக்கு எப்போதுமே இது visiting back home, என‌க்கோ ஒவ்வொரு முறையும் விடுமுறைதான்.

எங்க‌ள் விமான‌ம் எப்போதும் த‌ரையிற‌ங்குவ‌து கிடானான்ஸ்க் (Gdansk) ந‌க‌ர‌த்தில். அங்குதான் ஜோன்னாவின் இளைய‌ ச‌கோத‌ரி மீர்க்க‌ல‌வ்சிகா வீடு. நாங்க‌ளே ஒரு டாக்சி எடுத்து வீட்டுக்கு வ‌ந்துவிடுகிறோம் என்றாலும் கேட்காம‌ல் எப்போதும் ஏர்ப்போர்ட்டுக்கு வ‌ந்துவிடுவார் இந்த‌ பாச‌க்கார‌ முன்று குழ‌ந்தைக‌ளின் தாயார்.

இங்கு சில‌ நாட்க‌ள் த‌ங்கிவிட்டு மால்போர்க் (Malbork) ந‌க‌ருக்கு செல்வோம். சுமார் 110 மைல்தூர‌ ப‌ய‌ண‌ம். அங்குதான் ஜோன்னாவின் தாயார் வாழ்கிறார். ஓராண்டுக்குமுன் க‌ண‌வ‌ர் இற‌ந்த‌பின் பெரிய‌ வீட்டில் ஒரு வேலைக்காரியின் துணையுட‌ன் த‌னியாக‌ வாழ்ப‌வ‌ர். பிள்ளைக‌ள் ஒவ்வொருவ‌ரும் த‌ன்னோடு வ‌ந்து வாழ‌ அழைத்த‌போதும், “இல்லை என் க‌ண‌வ‌ர் வாழ்ந்த‌ வீட்டிலேயே வாழ்ந்து இற‌க்க‌ விரும்புகிறேன்” என்ற‌ ஒற்றை வாக்கிய‌த்தில் உரையாட‌லை முடித்துவிடுவார்.

என் மீது மிகுந்த‌ அன்பும் ம‌ரியாதையும் கொண்டிருப்ப‌வ‌ராதலால் என்னிட‌ம் ப‌ல‌முறை அவ‌ரிட‌ம் பேசிப்பார்க்க‌ச் சொல்லியிருக்கிறார்க‌ள். நான் பொதுவாக‌வே பிறருடைய‌ த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கை முடிவுக‌ளில் அவ‌ர்க‌ளே க‌ருத்து கேட்காம‌ல் மூக்கை நுழைக்காத‌வ‌னாத‌லால் தொட‌ர்ந்து ம‌றுத்துவ‌ந்தேன். இம்முறை எல்லோரும் சேர்ந்து என்னை கேரோ செய்து திரும‌தி. த‌னுஷ்கியாவோடு (Ms. Dhanushkiya) உரையாடும்ப‌டி நிர்ப‌ந்தித்தார்க‌ள். சென்ற‌ சில‌ மாத‌ங்க‌ளாக‌வே இவ‌ருடைய‌ உட‌ல்நிலையும் தொட‌ர்ந்து பாதிக்க‌ப்ப‌ட்டிருந்ததால் என்னால் இம்முறையும் எளிதில் த‌ட்டிக்க‌ழித்திட‌ முடிய‌வில்லை. ச‌ரி, உங்க‌ள் நிர்ப‌ந்த‌ம் தாங்க‌முடியாத‌தால், நான் ஊருக்கு கிள‌ம்புமுன் அவ‌சிய‌ம் பேசிப்பார்க்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.

இன்று, ஞாயிற்றுக்கிழ‌மை காலை உண‌வுக்குப்பின் த‌ன் க‌ண‌வ‌ரின் க‌ல்ல‌றைக்கு அனைவ‌ரையும் அழைத்துச் சென்றார். வீட்டிலிருந்து இர‌ண்டு மைல் தூர‌ம்தான். கோடைகால‌ம் முடிந்து இலையுதிர்கால‌ம் ஆர‌ம்பித்துவிட்ட‌தால் இத‌மான‌ குளிரோடு சுள்ளென்று வெயில‌டித்த‌து. புற்க‌ளின்மேல் ப‌னித்துளிக‌ளில் சூரிய‌க்க‌திர்க‌ள் வான‌வில் வ‌ண்ண‌ம‌டித்து விளையாடிக்கொண்டிருந்த‌து. ஆங்காங்கே ப‌ற‌வைக‌ளின் கொண்டாட்ட‌ ச‌ப்த‌ங்க‌ள். முதுகில் கோடுக‌ள‌ற்ற‌ அணில்க‌ள் அங்குமிங்கும் ஓடித்திரிந்த‌ன‌. க‌ல்ல‌றைத்தோட்ட‌த்தின் ப‌ராம‌ரிப்பாள‌ர் காய்ந்த‌ இலைக‌ளை பெருக்கிக்கொண்டிருந்தார். த‌ம் இணைய‌ரை பிரிந்து வாழும் சில‌ர் அவ‌ர்க‌ள் க‌ல்ல‌றைக்க‌ருகே அமைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ பெஞ்ச்க‌ளில் க‌ண்மூடி அம‌ர்ந்திருந்த‌ன‌ர், சில‌ர் பைபிள் வாசித்துக்கொண்டிருந்த‌ன‌ர். ப‌ல‌ க‌ண்க‌ளில் வெறுமை குடிகொண்டிருந்த‌து.

ஆயிர‌க்க‌ண‌க்கில் க‌ல்ல‌றைக‌ள், மெழுகுவ‌ர்த்திக‌ள், வ‌ண்ண‌வ‌ண்ண‌ பூக்க‌ள் என்று சுமார் 15 ஏக்க‌ரில் ப‌ர‌ந்து விரிந்து கிட‌ந்த‌து ம‌யான‌ம். நாங்க‌ளும் கொண்டுவ‌ந்திருந்த‌ பூங்கொத்துக‌ளையும் பூச்செடிக‌ளையும் நினைவிட‌த்தில் வைத்துவிட்டு மெழுகுவ‌ர்த்தி ஏத்தி சில‌ நிமிட‌ங்க‌ள் அமைதியாக‌ அவ‌ரின் நினைவுக‌ளை அசைபோட்டுவிட்டு அங்கிருந்து கிள‌ம்புகையில், “நீங்க‌ள் கார்க‌ளில் கிள‌ம்புங்க‌ள், நானும் உங்க‌ள் தாயாரும் ஆற்றோர‌ம் ந‌ட‌ந்து வீடு வ‌ந்து சேர்கிறோம்” என்றேன். ச‌ரி இவ‌ன் அம்மாக்கிட்ட‌ பேச‌ப்போறான் என்ப‌தை புரிந்துகொண்டு ஓக்கே சொல்லி கிள‌ம்பின‌ர் ச‌கோத‌ரிக‌ள்.

த‌ன் க‌ண‌வ‌ர் திரு அந்தோனி (Mr. Antony) ப‌ற்றிய‌ ம‌ல‌ரும் நினைவ‌ர்க‌ள் சில‌வ‌ற்றை அசைபோட்ட‌ப‌டி ந‌ட‌க்க‌த்துவ‌ங்கிய‌வ‌ர் ஒரு தேனீர்க்க‌டைக்க‌ருகே வ‌ர‌வும், என்னைப்பார்த்து, “napijemy się kawy..?” என்றார். (போலிஷ் மொழியில் ஒரு காப்பி குடிப்போமா..?)

ச‌ரியென்று அவ‌ரை இருக்கையில் அம‌ர‌ச்சொல்லிவிட்டு இர‌ண்டு காப்பி வாங்கி வ‌ந்தேன். இனிப்பும் பாலும‌ற்ற‌ க‌ட்ட‌ங்காப்பி அவ‌ருக்கு, இர‌ண்டும் க‌ல‌ந்த‌ காப்பி என‌க்கு.

ஸ்ட்ரோக்கிற்கு பின்னான‌ என் வாழ்க்கை மாற்ற‌ங்க‌ள், ஊரில் என் தாயாரின் உட‌ல்நிலை ப‌ற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். மெல்ல‌ அவ‌ருடைய‌ உட‌ல்நிலை, பெரிய‌ வீட்டில் த‌னியே இருப்ப‌து ப‌ற்றி பேச்சு திரும்ப‌, என் க‌வ‌லையையும் அவ‌ருடைய‌ ம‌க‌ள்க‌ளின் ஆத‌ங்க‌த்தையும் தெரிவித்தேன். “உங்க‌ள் ஒவ்வொரு ம‌க‌ளும் வெவ்வேறு ந‌க‌ரில் வாழ்கிறார்க‌ள். உங்க‌ளுக்கு ஒன்றென்றால் ஒவ்வொருவ‌ருவ‌ரும் ப‌தைப‌தைத்துப் போகிறார்க‌ள். யாராவ‌து ஒருவ‌ருட‌ன் நீங்க‌ள் இருந்தால் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு ச‌ற்று ஆறுத‌லாக இருக்குமே. கொஞ்ச‌ம் யோசித்து முடிவெடுங்க‌ளேன்..” என்றேன்.

“புரியுது ஃபாஸ், ஆனால் இந்த‌ அன்பும் நேச‌மும் இப்ப‌டியே தொட‌ர‌ணும்னுதான் நான் என் சிர‌ம‌ங்க‌ளையும் பார்க்காம‌ல் த‌னியாக‌ வாழ்கிறேன்” என்றார்.

“அவ‌ர்க‌ளுக்கும் குடும்ப‌ம் குழ‌ந்தைக‌ள் இருக்கு, அவ‌ர்க‌ளுக்கும் த‌னியான‌தொரு வாழ்க்கை இருக்கு. நான் எந்த‌ ம‌க‌ளுட‌ன் போய் த‌ங்கினாலும் ஆர‌ம்ப‌த்தில் எல்லாம் ந‌ன்றாக‌த்தான் இருக்கும். நாளாவ‌ட்ட‌த்தில் அது இய‌ல்பாக‌வே எங்க‌ள் இருவ‌ருக்குமே சில‌ அச‌வுக‌ரிய‌ங்க‌ளை ஏற்ப‌டுத்தும். யாராவ‌து ஒருவ‌ர் ம‌ற்ற‌வ‌ரைப்பார்த்து ஒரு சுடுசொல் சொன்னாலும் போதும், உற‌வில் சின்ன‌ விரிச‌ல் விழுந்துவிடும். அப்ப‌டியொரு விரிச‌ல் ஏற்ப‌ட்டுவிட்டால் அது உடைந்த‌ க‌ண்ணாடியாக‌ மாற‌ நீண்ட‌கால‌ம் ஆகாது…”

“என்னைபோன்று சுய‌ம‌ரியாதை உடைய‌வ‌ர்க‌ள்தான் என் பிள்ளைக‌ளும். யாரேனும் ஒருவ‌ரோடு போய் த‌ங்கி, க‌ருத்துவேறுபாடு ஏற்ப‌ட்டு, அத‌னால் நான் மீண்டும் மார்ல்போர்க் திரும்பிவிட்டால் அது இருவ‌ரின் உற‌விலும் வ‌டு ஏற்ப‌டுத்திவிடும். அது ஏற்ப‌ட்டுவிட‌க்கூடாது, அத‌னால்தான்…” என்றார்.

“நீதான் அவ‌ர்க‌ள் ம‌ன‌து நோகாம‌ல் இதை அவ‌ர்க‌ளுக்கு புரிய‌வைக்க‌ வேண்டும்” என்று அவ‌ர் பேசிமுடிக்கும்போது அவ‌ர் க‌ண்க‌ள் ப‌னித்திருந்த‌து. மெல்ல‌ அவ‌ரை அணைத்து ஆறுத‌ல்கூறி தேற்றிய‌பின் வீட்டை நோக்கிய‌ எங்க‌ள் ந‌டையை தொட‌ர்ந்தோம். இந்த‌ 78 வ‌ய‌து சுய‌ம‌ரியாதைக்கார‌ரின் த‌ள்ளாடிய‌ ந‌டையே க‌ம்பீர‌மாக‌ தெரிந்த‌து என‌க்கு.

நோகாட் ந‌தி (Nogot river) எங்க‌ள் உரையாட‌லை கேட்ட‌ப‌டி அமைதியாக‌ ச‌ல‌ன‌மில்லாம‌ல் பால்டிக் க‌ட‌லை நொக்கி ஓடிக்கொண்டிருந்த‌து…

Leave A Reply