நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 12 – ஆதனூர் சோழன்

Share

நீங்கள் நல்ல அப்பாவா?

அம்மா என்றால் அன்பு. அப்பா என்றால் அறிவு.

குழந்தைக்கு அன்பையும் அறிவையும் தருவது பெற்றோர் மட்டுமல்ல. சுற்றுச்சூழலும்தான்.

எல்லா அம்மாக்களும் குழந்தைகள் மீது அன்பைப் பொழிவதும் இல்லை. எல்லா அப்பாக்களும் குழந்தைக்கு நல்லறிவைத் தருவதும் இல்லை.

தாயுமாகி குழந்தையை கவனிக்கும் தந்தையும் உண்டு. தந்தையுமாகி குழந்தையைக் கவனிக்கும் தாயும் உண்டு.

இருவரில் ஒருவரது அன்பு அல்லது அரவணைப்பு குறைந்தாலும் மனோரீதியாக பாதிக்கப்படும் குழந்தைகள் ஏராளம்.

இன்றைய அவசரமான உலகில் குழந்தைக்கு நல்ல அப்பாவாக நீங்கள் இருக்கிறீர்களா?

நல்ல அப்பாவுக்கு அளவுகோல் என்ன?

இங்கே பத்து வழிகள் தரப்பட்டுள்ளன. இவற்றைக் கடைப்பிடித்தால் நீங்கள் ஒரு நல்ல அப்பாவாக மட்டுமின்றி நல்ல குடும்பத் தலைவனாகவும் இருக்க முடியும்.

1. உங்கள் குழந்தையின் தாயை மதியுங்கள்
ஒரு நல்ல அப்பாவுக்கு மிக முக்கியமான தகுதி என்ன தெரியுமா? அவர் தனது மனைவியை மதிக்க வேண்டும். உங்கள் திருமண உறவை வலுவாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் விவாகரத்து ஆனவராக இருந்தாலும், உங்கள் குழந்தையின் தாய்க்கு உரிய மரியாதை தர வேண்டும்.

கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். இது தங்கள் குழந்தைகளுக்கு தெரியும்படி நடந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் தங்களுக்கு பாதுகாப்பான சூழல் இருப்பதாக கருதும்படி செய்ய வேண்டும்.

தங்களுடைய தாயும் தந்தையும் ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதையைப் பார்க்கும் குழந்தைகள், இருவரையும் மனதார ஏற்று அவர்களை மதிக்க கற்றுக் கொள்வார்கள்.

2. குழந்தைகளுடன் நேரம் செலவிடுங்கள்
“உங்களுடன் கொஞ்ச நேரமாவது செலவழிக்க வேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி” என்று குழந்தைகளிடம் சொல்லுங்கள். அதைவிட்டு, எப்போதும் பிஸியாக இருப்பதுபோல அலைந்து கொண்டிருந்தால், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உங்கள் குழந்தைகள் நினைத்து விடக்கூடும். நீங்கள் என்னதான் காரணம் சொன்னாலும் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள்.

குழந்தைகள் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால், குழந்தைகளுடன் நீங்கள் நேரம் செலவழிப்பது மிகவும் அவசியம். குழந்தைகள் வேகமாக வளரக்கூடியவர்கள். அவர்கள் இழக்கும் சந்தோஷங்களை எப்போதும் திரும்பப் பெற முடியாது என்பதை உணருங்கள்.

3. குழந்தைகளின் பிரச்சனைகளை கேளுங்கள்
“ஒங்க அப்பா ஏதோ சொல்லனும்னார்” “அப்பா வரட்டும் பேசிக்கலாம்” என்று குழந்தைகளிடம் அம்மா கூறுவதைக் கேட்டிருக்கிறோம். சிறுவயதில் தவறுகள் செய்வது குழந்தைகளின் இயல்பு. நீங்களும் உங்கள் சிறு வயதில் தவறுகள் செய்தவர்தான்.

எனவே, உங்கள் குழந்தைகள் தவறு செய்யும்போது, அவர்களுக்கு எளிதில் புரியும்படி பிரச்சனைகளை விளக்குங்கள். தங்கள் செயலுக்கு அவர்கள் சொல்லும் நியாயங்களைக் கேளுங்கள். அவர்களை நேர்ப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு குழப்பிவிடாதீர்கள்.

4. அன்பு கலந்த ஒழுங்கு அவசியம்
எல்லா குழந்தைகளுக்கும் ஒழுங்கு கட்டுப்பாடு அவசியம்தான். தங்களை வழிநடத்த வேண்டும் என்று குழந்தைகள் விரும்புவார்கள். குழந்தைகளிடம் அன்பு செலுத்தும் அதேசமயத்தில், அதற்கு ஒரு வரம்பு வைத்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகளின் ஒவ்வொரு காரியத்திற்கும் பின் விளைவு களை விளக்குங்கள். அவர்களுடைய விரும்பத்தக்க நடத்தை களை அர்த்தத்துடன் பாராட்டுங்கள். குழந்தைகளிடம் கட்டுப் பாட்டுடனும், அமைதியான விதத்திலும் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

5. முன்மாதிரியாக இருங்கள்
அப்பாக்களுக்கு தெரியுமோ தெரியாதோ, குழந்தைகளுக்கு அவர்கள்தான் முன்மாதிரியாக இருக்கிறார்கள். தந்தையின் பாதிப்பு இல்லாத குழந்தைகள் மிகவும் அரிது. அப்பாவுடன் நிறைய நேரத்தை செலவிடும் பெண்குழந்தை வளரும்போது, பையன்களால் மதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். தந்தையின் குணாம்சத்தை கணவரிடமும் எதிர்பார்க்கிறாள். வாழ்க்கையில் எது முக்கியம் என்பதை மகனுக்கு தந்தை புரியவைக்க வேண்டும். நேர்மையையும் பொறுப்புணர்வையும் கற்றுத்தர வேண்டும். உலகம் முழுவதும் நாடக மேடை. அதில் ஒரு அப்பாவுக்கு முக்கிய பாத்திரம் இருக்கிறது. அந்தப் பாத்திரத்தை அவர் செம்மையாக செய்ய வேண்டும்.

6. ஆசிரியராய் இருங்கள்
கற்றுக் கொடுப்பது அடுத்தவருடைய வேலை என்று அப்பாக்களில் பலர் நினைக்கிறார்கள். ஆனால், நல்லதையும் கெட்டதையும் பற்றி தனது குழந்தைகளுக்கு கற்றுத்தரும் அப்பா, தனது குழந்தைகள் மிகச் சிறந்த காரியங்களை செய்ய ஊக்குவிக்கும் அப்பா, தனது குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார். அன்றாட நிகழ்வுகளை உதாரணமாக்கி தனது குழந்தைக்கு வாழ்க்கையின் அடிப்படையை புரியவைக்க ஒரு அப்பாவால் முடியும்.

7. குடும்பத்துடன் சாப்பிடுங்கள்
மூன்று வேளைகளில் ஏதேனும் ஒரு வேளை குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுங்கள். இது ஆரோக்கியமான குடும்ப உறவுக்கு மிகவும் முக்கியமானது. பரபரப்பான வாழ்க்கையில் இந்த பகிர்தல் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும். தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம். என்ன செய்யப்போகிறோம் என்பதை உங்களிடம் கூறுவார்கள். அவர்கள் கூறுவதைக் கேட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அப்பாக்க ளுக்கு நேரம் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக குடும்பத்தி னர் அனைவரும் ஒருசேர அமர்ந்து சாப்பிடுவதில் கிடைக்கிற சந்தோஷம் ரொம்பவும் முக்கியம்.

8. குழந்தைகளுக்கு படித்துக் காட்டுங்கள்
இன்றைய உலகில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இணைய தளங்களும் குழந்தைகளின் வாழ்க்கையை ஆக்கிர மித்து விட்டன. இத்தகைய சூழலில் அவர்களுக்காக படித்துக் காட்டுவதற்கு அப்பாக்கள் முயற்சி செய்ய வேண்டும். காரியங்களில் ஈடுபடும்போதும், படிக்கும்போதும், பார்க்கும் போதும், கேட்கும்போதும் குழந்தைகள் நிறைய கற்றுக் கொள்கி றார்கள். சிறு குழந்தையாக இருக்கும்போதே அவர்களுக்கு படித்துக்காட்டி படிக்கும் பழக்கத்திற்கு தயார்படுத்துங்கள். அவர்கள் பெரியவர்களாகும்போது, தாங்களாகவே படிப்பதற்கு ஊக்குவியுங்கள். படிப்பின் மீது காதல் கொள்ளும் வகையில் உங்கள் பிள்ளையை தயார்படுத்தி விட்டால், அவர்களுடைய வாழ்க்கை வளமாகிவிடும். தனிப் பட்ட வாழ்க்கை முன்னேற் றத்திற்கும், தொழில்ரீதியான முன்னேற்றத்திற்கும் படிப்பு மிகச் சிறந்த துணையாகும்.

9. பிரியத்தோடு இருங்கள்
தாங்கள் விரும்பப்படுகிறோம். தங்கள் குடும்பத்தினரால் அன்பு செலுத்தப்படுகிறோம். அவர்களால் அங்கீகரிக்கப்படு கிறோம் என்பது தெரியும்போதுதான் குழந்தைகள் பாதுகாப் பாக உணர்கின்றன. குழந்தைகளிடம் பேசுவதையும் அவர்களை அணைத்து முத்தமிடுவதையும் அப்பாக்கள் விரும்பவேண்டும். தினந்தோறும் குழந்தைகளை அணைத்து கொஞ்சிப் பாருங்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளை விரும்புகிறீர்கள் என்பதை தெரியப்படுத்திப் பாருங்கள். குழந்தைகளிடம் மிகப்பெரிய மாறுதலை காண்பீர்கள்.

10. அப்பாவுக்கு நிகர் அப்பாதான்
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானாலும் அப்பாவின் ஆலோசனைக்கும், அறிவுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நிலையில்தான் இருப்பார்கள். பள்ளிப் படிப்பை தொடர்வ தாகட்டும், புதிய வேலையில் சேருவதாகட்டும், திருமணமா கட்டும் குழந்தைகள் வளர்ந்து திருமணம் செய்து, தங்களுடைய சொந்த குடும்பத்தை உருவாக்கும் வரையில் அப்பாவின் பங்கு மிகவும் அவசியமானது. எனவே, நீங்கள் நல்ல அப்பாவாக மாறுங்கள்.

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 13 – ஆதனூர் சோழன்

Leave A Reply