நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 13 – ஆதனூர் சோழன்

Share

முதுமையை எதிர்கொள்ள சில வழிகள்

முதுமையை வெல்ல முடியுமா?

மரணத்தைக் கண்டு பயப்படாத மனிதன், முதுமையைக் கண்டு அஞ்சுகிறான்.

மரணம் விசுக்கென்று உயிரை காவு வாங்கிவிடும்.

ஆனால், முதுமை…?

நாள்தோறும் நரக வேதனையாய் தொடரும். கண்ணா டியைப் பார்க்க விருப்பமில்லாமல் போகும். ஒவ்வொரு நாளும் யுகமாக கழியும்.

முதுமையை தவிர்த்து நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு மனிதன் படாதபாடு படுகிறான். சாகாவரம் கேட்கும் புராண கதாபாத்திரங்களை நாம் அறிந்திருக்கிறோம். என்றும் இளமையாய் இருக்கும் வரம் பெற்ற மார்க்கண்டேயனை நமக்கு தெரியும்.

முதுமையை வென்று ஆயுளை நீட்டிக்கும் நெல்லிக் கனியைப் பற்றி படித்திருக்கிறோம்.

சீனர்கள் நீண்டகாலம் வாழ்வதற்காக தயாரித்த மூலிகை மருந்துகளைப் பற்றியும் வரலாறு கூறுகிறது.

ஆனால்…நிஜம் என்ன? முதுமையை தவிர்க்க முடியுமா? அதன் வேதனைகளில் இருந்து மீள முடியுமா?

முதுமை இயற்கையானது என்பதை முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும்.

மனிதன் முதுமை அடைவதைத் தவிர்க்க முடியாதது.
முதுமையடைவது குறித்து நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. அது உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கிய சரித்திரத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். நீங்கள் தேர்வு செய்த வாழ்க்கை முறையுடனும் அது சம்பந்தப்பட்டிருக்கலாம்.

நீங்கள் எப்போது முதுமையடையத் தொடங்குகிறீர்கள் என்பது முக்கியமில்லை.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்துப் பாருங்கள். அதன்பிறகு, நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதற்கும் உங்களால் என்ன செய்ய முடியும் என்பதற்கும் இடையே, நிறைய வேறுபாடுகளை காணமுடியும்.

முதுமை உடலியல் ரீதியில் மட்டும் வருவதல்ல. மனநிலை ரீதியாகவும் முதுமை வரலாம்.

உடலியல் ரீதியிலான முதுமை தவிர்க்க முடியாததாக இருக்கும். அதே சமயம்,. மனநிலை ரீதியிலான முதுமையை நாம் தள்ளிப்போடலாம். அல்லது, கடைசி வரையில் அத்தகைய ஒரு முதுமையே வராமலும் தடுத்து விடலாம்.

நமது மனதை எப்போதும் ஆரோக்கியமாகவும் இயல்பாகவும் இறுக்கம் இல்லாமலும் வைத்திருப்பதன் மூலம் அது சாத்தியமாகும்.

உடல் ரீதியிலான முதுமை பற்றி முதலில் நாம் அறிந்து கொள்வோம்.

உடலியல் ரீதியிலான முதுமை என்பது நமது குடும்பத்தில், முன்னோர்கள் முதுமை அடைந்ததன் அடிப்படையில் அமைகிறது. அதாவது, மரபணு தொடர்பானது. சிலருக்கு 40 வயதிலேயே தலை நரைத்து விடும். சிலருக்கு 50ஐக் கடந்தபிறகு நரைக்கும். இதுபோல முதுமையின் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும்.

40 வயதிலேயே தலை நரைப்பவரின் சந்ததிக்கு அதே போல 40 வயதில் தலை நரைக்க அதிக வாய்ப்பு உள்ளது. முதுமையின் வருகை, அதன் வேகம், இயல்பு போன்றவை நமது பெற்றோர் அவர்களது பெற்றோர் என்று நமக்கு முந்தைய தலைமுறைகளில் இருந்து நமக்கு வருகிறது.

நாம் தேர்ந்தேடுக்கும் வாழ்க்கை முறைக்கும் நமது முதுமைக் கும் மிக முக்கியமான பங்கு உண்டு. நமது வாழ்க்கை முறை சுறுசுறுப்பானதாகவும் சோர்வு இல்லாததாகவும் சந்தோஷமாக வும் அமைந்து விட்டால், பரம்பரை காரணமாக வரக்கூடிய முதுமை, நம்மை தாக்காமல் தள்ளிப்போகவும் வாய்ப்பு உண்டு.

முதுமையின் அறிகுறிகள் என்ன?
பின்வரும் அறிகுறிகளில் சில, சிலருக்கு பொருத்தமாக இருக்கும். வேறு சிலருக்கு பொருந்தாமல் போகலாம்.

தோல்:
தோலின் பளபளப்பு குறைந்து தளர தொடங்கும். வரிவரியாய் சுருக்கங்கள் உருவாகும். தோலில் எண்ணை பசை குறைந்து வறட்சியாக தோன்ற ஆரம்பிக்கும். தோலை எப்போதும் ஈரப்பசையுடன் குளிர்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் இதை தள்ளிப்போடலாம். வெயில் படாமல் பாதுகாப்பாக இருக்கலாம். வெயிலுக்கு ஏற்ற பாதுகாப்பான ஆடைகளை அணியலாம். இதன்மூலம் தோலில் சுருக்கம் ஏற்படாமல் தவிர்க்கலாம். பொதுவாக, தோலின் ஆரோக்கியத் திற்கு குளிர்ச்சியும் நிழலும் நல்லது. என்னதான் பாதுகாப்பாக இருந்தாலும் சுருக்கம் விழுவதை முற்றிலுமாக தவிர்க்க முடியாது.

முடி:
தலையிலும் அக்குளிலும் பிறப்புறுப்பிலும் உள்ள முடியின் அடர்த்தி குறைந்து மெலியும். முடிக்கு கருமை நிறத்தை அளிக்கும் செல்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். நரைத்த முடி அதிகரிக்கும்.

உயரம்:
80 வயதில் பொதுவாக ஒரு மனிதனின் உயரம் 5.1 செ.மீட்டர் வரை குறையும். மூட்டு இணைப்புகள் இறுக்கம் அடையும். நிமிர்ந்து நிற்கும் முதுகு தண்டு அழுத்தப்பட்டு கூன் விழ ஆரம்பிக்கும்.

செவித்திறன்:
கேட்கும் திறன் குறைய ஆரம்பிக்கும். ஒலியோ, பேச்சோ தெளிவில்லாமல் கேட்க ஆரம்பிக்கும். இந்த மாற்றம் 55 வயதுக்குப் பிறகு மிக வேகமாக நிகழத்தொடங்கும்.

கண் பார்வை:
பெரும்பாலானவர்கள் 40 வயதில் பார்க்கும் திறன் குறைந்து கண்ணாடி அணிய துவங்கி விடுகின்றனர். மங்கலான வெளிச்சத்தில் இரவில் ஊடுறுவி பார்க்கும் திறன் குறைய ஆரம்பிக்கும். அடுத்து வரும் வருடங்களில் பகலில் கூட காட்சி தெளிவில்லாமல் பார்வை மங்கத் துவங்கும்.

எலும்புகள்:
வயது ஆக ஆக எலும்பில் உள்ள மினரல்கள் குறைந்து கொண்டே வரும். அதன் விளைவாக எலும்புகளின் அடர்த்தி யும் பலமும் குறையும். பெண்களுக்கு மாதவிடாய் நின்றதற்குப் பிறகு இந்த மாற்றம் விரைவாக நடக்கும். நடைப்பயிற்சி போன்றவற்றின் மூலம் எலும்புகளில் ஏற்படும் இந்த வயோதிகத்தை தள்ளிப்போடலாம். கார்பன் கலந்த பானங்கள், காபியில் உள்ள காஃபின் போன்ற நச்சுப் பொருட்கள் எலும்புகளை பலவீனப்படுத்தும். தினமும் “கால்சியம்” “வைட்டமின் டி” அடங்கிய உணவுகளை சேர்ப்பதன் மூலம் எலும்புகள் பலவீனமடைவதை தவிர்க்கலாம்.

முதுமையை யாராலும் தடுக்க முடியுமா?
முடியாதுதான்.
எனினும், இளம் வயதில் மேற்கொள்ளும் நடவடிக்கை களைப் பொறுத்தே, முதுமைப் பருவத்தில் உடல் மற்றும் மனநிலை இருக்கும் என்று பல்வேறு வல்லுநர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

முதிய வயதில் வாழ்க்கை சிறப்பாக இருப்பதற்காக, இளம் வயதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

அந்த வழிகள்…

1. முதுமைக்கு பரம்பரைதான் காரணம் என்று நினைத்திருக்கிறோம். ஆனால், முடி நரைப்பது, தோல் சுருக்கம் ஆகியவற்றுக்கு மூதாதையரின் ஜீன்கள் 25 சதவீதம்தான் காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனஅழுத்தம், சுற்றுச்சூழல், சத்தான உணவு, வாழ்க்கை முறை, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவை முதுமைக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன. இளம் வயதில் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட் டுக்குள் வைத்திருத்தல், கொழுப்பை குறைத்தல், உடல் எடையை சீராகப் பேணுதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், மது அருந்துவதைக் குறைத்தல், புகைபிடிக்காமல் இருத்தல் ஆகிய நடவடிக்கைகள் முதுமையைத் தள்ளிப்போட உதவும்.

2. முதுமையில் சிந்திக்கும் திறன் குறையும். மனதை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் தினமும் ஈடுபட்டால், முதுமையில் சிந்திக்கும் ஆற்றல் குறைவதைத் தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் நமது கடந்தகால வாழ்க்கையைப் பற்றி பேசலாம். 70 மற்றும் 80 வயதில் இருப்பவர்கள் கூட இப்படிப் பேசும்போது சிந்தனை ஆற்றல் அதிகரிப்பதை உணரமுடியும்.

3. நமது உடலில் போதுமான அளவுக்கு வைட்டமின் ‘டி’ இருக்க வேண்டும். அப்படி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். போதிய நோய் எதிர்ப்புத் திறன் பராமரிக்கப்படும். செல்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். சில வகையான புற்றுநோய், நீரிழிவு நோய், எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். முட்டை, மீன், பதப்படுத்தப்பட்ட பால் ஆகியவற்றிலும், சூரிய ஒளியிலிருந்தும் வைட்டமின் ‘டி’ யைப் பெற முடியும். தினமும் 20 நிமிடம் சூரியஒளியில் நடக்க வேண்டும்.

4. மனதில் எப்போதும் நம்பிக்கையான எண்ணங்களை நிரப்புங்கள். எதிர்மறையாக சிந்திக்காதீர்கள். நம்முடைய செயல்பாடுகளும், மீள் திறனும், பிரச்சினைகளை சந்திக்கும் விதமும் முதுமையில் நமது நிலையை தீர்மானிக்கின்றன. எல்லா விஷயங்களிலும் நம்பிக்கையுடன் இருந்தால், ஆரோக்கியமான வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த முடியும். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இது முதுமையை மகிழ்ச்சியாக கழிக்க வகைசெய்யும்.

5. நமது எண்ணத்தைப் பொறுத்தே செயல்படுகிறோம். ஒவ்வொரு தலைமுறையிலும் புத்தகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், இசை, கலாச்சாரம் ஆகியவற்றின் மூலம் வயதானவர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று அறிந்துகொள்கிறோம். நமக்குள் முதியவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பதிகிறது. ஆனால், இளமையான எண்ணத்தை நமக்குள் வளர்த்துக் கொண்டால், இளமையான மனநிலை உருவாகும். நடவடிக்கை களிலும் இளமை மிளிரும்.

6. தினமும் நீண்ட தூரம் நடைபயிற்சியில் ஈடுபடுங்கள். இது, வாழ்நாளை அதிகரிக்கும். தினமும் 4 அல்லது 5 மணி நேரம், நல்ல காற்றோட்டமான சூழலில், 6 முதல் 7 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சியில் ஈடுபட்ட 3 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வில் மற்றவர்களை விட இவர்கள் 5 ஆண்டுகள் அதிகமாக வாழ்ந்தது தெரியவந்தது. நல்ல காற்றோட்டமான சூழலில் துணையுடன் தினமும் நடைபயிற்சியில் ஈடுபடுவது வாழ்க்கைக்கு பயனளிக்கும்.

முதியவர்கள் என்றாலே மற்றவர்கள் ஒதுக்கும் நிலையை மாற்ற வேண்டும். முதுமையிலும் இளமையான எண்ணங்களுடன் வாழ வேண்டும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். இளமையிலேயே எதிர்காலத்தை சிறப்பாக அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 14 – ஆதனூர் சோழன்

Leave A Reply