நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 18 – ஆதனூர் சோழன்

Share

நீண்டநாள் வாழ….

மருத்துவ வளர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.

இறந்தவர்களை பிழைக்க வைக்க முடியவில்லையே தவிர, மரணத்தை தள்ளிப் போட முடிகிறது. பழுதடைந்த உடல் உறுப்புகளை, எந்திரத்துக்கு உதிரி பாகங்களை மாற்றுவதைப் போல, புதிய உறுப்புகளை மாற்ற முடிகிறது.

ஆண் பெண் சேர்க்கையின்றி ஆய்வுக்கூடத்திலேயே உயிரைப் படைக்க முடிகிறது. அல்லது உருவாக்க முடிகிறது.

மனிதனின் வாழ்நாள் அதிகரித்துள்ளது. அதிலும், ஜப்பானில் 100 வயதைத் தாண்டியும் நிறைய பேர் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார்கள்.

உறுப்புகள் பழுதடைந்து நீண்ட நாள் வாழ்ந்து என்ன பயன்?

நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்காக உடலின் ஒவ்வொரு பகுதியையும் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதற்கு மருத்துவ நிபுணர்கள் சில வழி முறைகளை வகுத்துள்ளனர். .

1. மூளை
மூளையை எப்போதும் புத்துணர்வாக வைத்திருக்க வேண்டும். மூளை செல்களுக்கு தினமும் வேலை கொடுக்க வேண்டும். அப்போதுதான் அது சுறுசுறுப்பாக இருக்கும். மாற்றுக் கைகளால் பற்களைத் துலக்கலாம். கைப்பையை திறந்து பார்க்காமல் பைக்குள் இருந்து நமக்குத் தேவையான பொருள்களை தேடி எடுக்கலாம். குறுக்கெழுத்துப் போட்டிகளில் கலந்துகொள்ளலாம். இந்த பயிற்சிகள் நமது மூளை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.

2. தோல்
நாள்தோறும் நமது தோலில் சூரியஒளி படும்படி செய்ய வேண்டும். முக்கியமாக கழுத்து, உடலின் பின்பக்கம் ஆகியவற்றின் மீது சூரியஒளி படுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது தோல் நோயைத் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்..

3. இணைப்புகள்
எலும்பு இணைப்புகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இனிப்புகளை சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அதிகரிக்கும்போது, உடல் இணைப்புத் திசுக்களில் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே உள்ள வலியையும் அதிகரிக்கும். எனவே, உடலில் சர்க்கரை அதிகமாகாமல் தடுக்க வேண்டியது அவசியம்.

4. கண்கள்
உடலில் வைட்டமின் சி மற்றும் இ போதிய அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இது, முதுமையில் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும். இதற்காக சி மற்றும் இ வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடலாம்.

5. இதயம்

தினந்தோறும் சரியானபடி பற்களைத் துலக்குங்கள். இது, பல்லின் வேர்களைக் பாதுகாக்க உதவும். அத்துடன், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

6. எலும்புகள்
பச்சை இலைகளிலிருந்து நாள்தோறும் கே2 வைட்டமின் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது நமது உடலுக்கு நாள்தோறும் 90 மைக்ரோகிராம் அளவுக்கு கே2 வைட்டமின் தேவைப்படுகிறது. இந்த கே2 வைட்டமின் உங்கள் ரத்தத்திலிருந்து போதிய அளவு கால்சியத்தை எலும்புகளுக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது.

நல்ல ஆரோக்கியமான உடல் இருந்தால் மட்டுமே நீண்ட நாள் வாழ முடியும். இதற்காக நமது உடலின் ஒவ்வொரு பாகமும் அவசியம் என்பதை உணர்ந்துகொண்டு உடலைப் பேணுவதில் கவனம் செலுத்துங்கள்.

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 19 – ஆதனூர் சோழன்

Leave A Reply