நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 4 – ஆதனூர் சோழன்

Share

இலக்கை தீர்மானியுங்கள்

குழந்தையை படிக்க வைப்பது ஒரு இலக்கு நோக்கித்தான்.

நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது ஒரு இலக்கு.

பொறியியல், மருத்துவம், தகவல் தொழில் நுட்பம், நீதிமன்றம், அரசு வேலை, ஆசிரியர் என்று எத்தனையோ இலக்குகள்.

ஒவ்வொரு இலக்குக்கும் ஒவ்வொரு படிப்பு.

குழந்தையை எந்த படிப்பு படிக்க வைப்பது? எந்த தொழிலில் ஈடுபடுத்துவது? போன்ற இலக்குகளை குழந்தைக்காக பெற்றோர்களாகிய நாம்தான் தீர்மானிக்கிறோம்.

அப்படி தீர்மானித்து, அந்த இலக்கை நோக்கி குழந்தையை செலுத்துவது நமது கடமை.

ஆனால், இலக்கை தீர்மானிக்கும் போது அது குழந்தைக்கு பொறுத்தமானதா என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்றார்போல தீர்மானிக்க வேண்டும்.

எதை படிக்க வேண்டும் என்பதை தானாக தீர்மானிக்கும் பக்குவம் வரும் வரையில், குழந்தைக்கு நாம்தான் முடிவெடுக்க உதவ வேண்டும்.

அதே சமயத்தில் அந்த முடிவு குழந்தைகளுக்கு உறுத்தாததாகவும் பிடித்தாகவும் அமைய வேண்டும். ஏனெனில் உங்களது முடிவை செயல்படுத்தப் போவது குழந்தைதானே.

எங்கே படிக்க வைப்பது?
ஒரு குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு பின் வரும் கேள்விகளுக்கு விடைகாண வேண்டும்.

இந்தப்பள்ளி நமது குழந்தையை என்னமாதிரியான நபராக உருவாக்கும்?

நமது குழந்தையின், சமூக தேவை என்ன, படிப்பு தேவை என்ன, உணர்வு தேவை என்ன அவற்றை இந்தப் பள்ளி பூர்த்தி செய்யுமா?

மேற்கண்ட தேவைகளில் குறுகிய அல்லது நீண்டகால அவகாசத்தில் எந்தெந்த தேவைகளை இந்தப்பள்ளி பூர்த்தி செய்யும்?

நமது குழந்தையின் வளர்ச்சியை இந்தப்பள்ளியின் சூழ்நிலை எந்த அளவுக்கு வளர்க்கும் அல்லது தடுக்கும்?

இந்தப்பள்ளியின் சில முடிவுகள் நம்மோடு ஒத்துப்போகாத சூழ்நிலை வருமானால், அப்போது நமக்கு இருக்கும் மாற்று ஏற்பாடுகள் என்னென்ன?

படிப்பில் நமது குழந்தைக்கு எந்த அளவு ஈடுபாடு அல்லது கவனம் தேவைப்படுகிறது? அந்த கவனத்தை அல்லது ஈடுபாட்டை இந்தப்பள்ளி உருவாக்குமா?

இந்தப்பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் நான் என்ன எதிர்பார்க்கிறேன்? அந்த எதிர்பார்ப்பு சரியானதுதானா?

இந்த கேள்விகளுக்கான பதில்களை பெற சிலநேரங்களில் சிரமம் ஏற்படலாம். ஆனால் பதில்களை பெறுவது பலன் தரும். உங்கள் குழந்தைக்கு நல்ல படிப்பை தருவதற்கான முதல் அடி இதுதான்.

தரமான குழந்தை

தரம் என்றால் என்ன?
ஒரு செயலை எப்படி செய்கிறீர்கள் என்பதுதான் தரம்.

எந்த ஒரு தொழிலிலும் தரம் முக்கியம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை விட எப்படி செய்கிறீர்கள் என்பதுதான் தரம். தரம் மதிக்கப்படும். எதிர்பார்க்கப்படும்.

ஒரு செயல் இப்படித்தான் அமையும். ஒரு பொருள் இப்படித்தான் இருக்கும் என்னும் இயல்பைக்காட்டிலும் சிறப்பாக அமைவது தரம்.

உங்களது குழந்தையின் நடவடிக்கைகள் தரமாக அமைய நீங்கள் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தரமான நடவடிக்கைகளை கொண்ட குழந்தை சிறந்த மனிதனாக வளரும். வாழ்க்கையில் வெற்றி பெறும்.

அவர்கள் இளமையாக இருக்கும்போதே அவர்களை தரமானவர்களாக பண்படுத்த துவங்க வேண்டும்.

ஒரு குழந்தை தரமாக வளர்வதற்கு பள்ளி சூழ்நிலை முக்கியமான காரணியாக விளங்குகிறது.

குழந்தை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைய வேண்டும். உங்களது குழந்தையின் கல்வி தரமாக இருப்பதும், உங்களது குழந்தைக்கு சிறப்பான ஒரு இலக்கை ஏற்படுத்தி தருவதும் உங்களது கடமை என உணருங்கள்.

கல்வி தரமாக இருப்பதும், சரியான இலக்கும் குழந்தை தான் மேம்படுவதற்குரிய வழிகளை கண்டறியும் திறனை அளிக்கும்.

எது எல்லாவற்றிலும் சிறந்ததோ அதை நோக்கி குழந்தையை உந்தித் தள்ள வேண்டும். இந்த அளவிற்கு இருந்தால் பரவாயில்லை என திருப்திப்பட்டுக்கொள்ளக் கூடாது.

ஒரு பொருளை நீங்கள் வாங்கும் போது தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக எப்படி அக்கறையுடனும் பொறுமையாகவும் தேர்வு செய்கிறோம்?

குழந்தையின் கல்வியும் நடவடிக்கையும் தரமாக அமைய அதே அளவு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாம் செய்யக் கூடிய காரியம் அல்லது உருவாக்கும் பொருள் தரமாகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் இதை மிகத் தாமதமாகவே புரிந்து கொள்கிறோம்.

நமது குழந்தைகளும் தாமதமாக புரிந்து கொள்ள விடக்கூடாது. இளமையில் இருந்தே குழந்தையின் வேலைகள் நேர்த்தியாக அமையும்படி கற்றுக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்யும்போது கவனியுங்கள்.
அடித்தல் திருத்தலோடு, கிறுக்கலான கையெழுத்தோடும் வீட்டுப்பாடத்தை செய்யலாம்.

அடித்தல் திருத்தல் இல்லாமல், அழகான கையெழுத்திலும் வீட்டுப்பாடத்தை செய்யலாம்.

கடமைக்கு வீட்டுப்பாடத்தை செய்யாமல், அதை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யும் பழக்கத்தை குழந்தைக்கு கற்றுக் கொடுங்கள்.

செல்போன் என்பது பேசுவதற்கும், பேசுவதை கேட்பதற்கும்தான்.

ஆனால், அதற்காக ஏதேனும் ஒரு செல்போனை வாங்கி விடுவதில்லை.

அதன் தரம், நேர்த்தி, வடிவமைப்பு சுருக்கமாக சொன்னால் அதனால் என்ன உபயோகம் என்று பார்ப்பதை விட, எப்படி செய்யப்பட்டிருக்கிறது என்பதைத்தான் நாம் அதிக அக்கறையோடு கவனிக்கிறோம்.

சிறப்பான வடிவமைப்பு நம்மை அந்தப்பொருளை வாங்க தூண்டுகிறது.

அப்படித்தான் நமது குழந்தைகளும்.

குழந்தைகளின் நடவடிக்கைகள் அல்லது அதன் செயல்கள் நேர்த்தியாக இருக்கும் போது எல்லோராலும் பாராட்டப்படும்.

அந்த பாராட்டு, குழந்தையின் மனதில் தனது காரியங்களை மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உந்துதலை கொடுப்பதோடு, குழந்தைக்கு தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.

இதோ பாருங்கள், எப்படி அழகாக செய்திருக்கிறேன் என்று பெருமையோடு சொல்லிக்கொள்ள ஆசைப்படும்.

குழந்தை தன்னை சிறந்தவனாக காட்டிக்கொள்ளவே விரும்ப வேண்டும். அத்தகைய விருப்பத்தை குழந்தைக்கு பயிற்றுவிக்க வேண்டும். அந்த விருப்பம் குழந்தையின் நடவடிக்கைகளை செயல்களை தரமாக மாற்றும்.

ஒரு பொருள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம். அந்தப் பொருள் தயார் செய்யப்படும் விதமும். தயார் செய்யப்படும் விதம் சரியில்லை என்றால் பொருளும் சரியாக இருக்காது.

உங்களது குழந்தை வீட்டுப்பாடத்தை சரியாக செய்கிறனா? செய்கிறாளா? என்பதை கவனியுங்கள்.

பரீட்சைக்கு தயாராகும் போது, நீண்ட நாட்களுக்கு முன்பிருந்தே படிக்க பயிற்றுவியுங்கள். தேர்வுக்கு முதல்நாள் வரை விளையாடிக் கொண்டிருந்து விட்டு, கடைசி நாளில் அவசர அவசரமாக படிப்பது சரியானதல்ல என புரிய வையுங்கள்.

கடைசி நேரத்தில் செய்யும் வேலை தரமாகவும் நேர்த்தியாகவும் அமையாது என உங்கள் குழந்தையை உணர வையுங்கள்.

நல்ல அம்மாவாக நல்ல யோசனைகள் – 5 – ஆதனூர் சோழன்

Leave A Reply