நேரம் நல்ல நேரம் – 15 – ஆதனூர் சோழன்

Share

உள்ளத்தின் கதவுகள் கண்களடா!

உள்ளத்தின் கதவுகள் கண்கள் என்கிற முதுமொழி முற்றிலும் நிஜம் என்று சமீபத்திய ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

ஒருத்தரோட முகத்தைப் பார்த்தே அவர் நல்லவரா அல்லது கெட்டவரா என கூறிவிடுவேன் என்று நாமே பல சமயங்களில் கூறியிருப்போம்.

ஆனால் ஒருவர் உண்மை சொல்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா? என்பதை கண்டறிய பெரும்பாலோர் முகத்தில் தவறான பாகத்தை கவனிக்கின்றனர்.

ஒருவர் பொய் சொல்கிறாரா என்பதை கண்டுபிடிக்க வேண்டுமென்றால் அவரது கண்கள், புருவங்கள் மற்றும் அவரது நெற்றியை கவனிக்க வேண்டும்.

அதற்கு மாறாக முகத்தின் கீழ்ப்பகுதியையே பெரும்பாலானோர் கவனிப்பதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆக்லிஹோமா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் காலின் புரேடன் ‘உள்ளத்தின் கதவுகள் கண்கள்தான் என்கிற முதுமொழி சரியானது’ என கூறியுள்ளார்.

சிறு குழந்தைப் பருவத்திலேயே சமூக சூழல்களுக்கு ஏற்ப முகமாறுதல்களை மனித இனம் கற்றுக் கொள்கிறது. இதன் அடிப்படையிலேயே சமயத்துக்கு ஏற்றபடி அவர்கள் பிறரை ஏமாற்றும் வகையில் செயல்பட முடிகிறது.

உதாணத்திற்கு ஒன்றை சொல்லலாம்.

சம்பளத்தை உயர்த்த மறுக்கிற மேலதிகாரி மீது ஒருவருக்கு கோபமான கோபமாக இருக்கும். என்றாலும் கூட சம்பளத்தை உயர்த்த வேண்டும் என அவரிடம் முகத்தைச் சுண்டி சிடுசிடுப்பாக கேட்க மாட்டார். அதற்கென ஒரு குழைவுப் புன்னகையை அவர் ஒளித்து வைத்திருப்பார். அந்தப் புன்னகையுடன் கேட்டுவிட்டு வெளியே வரும் போது மனசுக்குள் திட்டிக் கொண்டே வருவார்.

முகத்தில் தோன்றும் உணர்ச்சிகள் குறித்து மூளையின் நினைவாற்றலை நன்கு புரிந்து கொள்ள ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

பல கோணங்களில் மனித முகத்தை வரைந்து அந்தப் படங்களை சுமார் 30 பேரிடம் ஆய்வாளர்கள் காட்டினர்.

இந்தப் படங்கள் மனித முகத்தின் மேல் பகுதி மற்றும் கீழ்ப்பகுதிகளில் உருவாகும் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவையாக இருந்தன.

சந்தோஷம். வருத்தம், கோபம், அச்சம் மற்றும் வியப்பு உணர்ச்சிகளை அவை வெளிப்படுத்தின.

ஆய்வில் பங்கேற்றவர்கள் தங்கள் மூளையின் வலது அல்லது இடது பகுதியைப் பயன்படுத்தி மேற்படி படங்களை பார்த்தனர். இதன் மூலம், தகவல்களை பெற்று முடிவெடுக்கும் மூளையின் இருவேறு பகுதிகளின் திறன் குறித்த பல விபரங்களை ஆய்வாளர்கள் சேகரிக்க முடிந்தது.

பெரும்பாலோர் தங்களிடம் தரப்பட்ட படத்தின் கீழ்ப் பகுதி உணர்ச்சியை மட்டும் காட்சிப்பரப்பை பொருட்படுத்தாத அளவில் கவனித்தனர்.

ஆனால், படத்தில் உள்ள முகத்தன் மேல்பகுதியை கவனிக்கும்படி அவர்களிடம் அறிவுறுத்தி படங்களை அவர்களது இடது காட்சிப் பரப்புக்கு காட்டினர், இந்த காட்சியை மூளையின் வலது பகுதி செயல் முறைக்குள்ளாக்குகிறது.

எனினும், பெரும்பாலோர் தங்கள் வலது காட்சிப் பரப்பின் மூலம் மேற்படி படங்களில் இருந்த முகங்களின் கீழ்ப் பகுதி உணர்ச்சிகளை பார்வையிட்டனர். இந்தக் காட்சியை மூளையின் இடது பகுதி செயல்முறைக்குள்ளாக்குகிறது.

மூளையின் இடதுபகுதி, கற்றுக் கொண்ட நடத்தைகளை கவனிக்கக் கூடியது. இந்தப் பகுதிதான் முகத்தின் கீழ்ப் பகுதி உணர்ச்சிகளை செயல்முறைக்குள்ளாக்குகிறது.

அதேசமயம், முகத்தின் மேல்பகுதி உணர்ச்சிகளை மூளையின் வலது பகுதி செயல்முறைக்குள்ளாக்குகிறது. இந்தப் பகுதி இயல்பாய் அமைந்த, தன்னுணர்ச்சிகளை கவனிக்கிறது.

எங்கள் ஆய்வுகளின் முடிவுகளில் இருந்து ஆற்றல்மிக்க தகவல் தொடர்புக்கான நரம்பியல் அடிப்படையை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. இதன்மூலம் பக்கவாதம், மனத்தளர்வு போன்ற நோய்களால் மூளையின் இயக்கத்தில் ஏற்படும் மாறுதல்களை டாக்டர்கள் எளிதில் கணிக்க முடியும் என டாக்டர் புரோடன் தெரிவித்தார்.

முகத்தின் கீழ்ப்பகுதியை கவனிப்பது உரையாடலின் போது பேச்சின் பொருளை உள்வாங்க உதவுகிறது. குறிப்பாக, இரைச்சலான சூழலில் இவ்வாறு கவனிப்பதுதான் பேச்சை புரிந்து கொள்ள உதவுகிறது என புரோடன் கூறினார்.

முகத்தின் கீழ்ப்பகுதியை கவனிப்பதற்கு சமூக காரணங்களும் உள்ளன.

அதாவது பல்வேறு கலாச்சார அமைப்புகள் எதிரில் இருப்பவரின் கண்களை நேரடியாக பார்த்து பேசுவதை ஒப்புக் கொள்வதில்லை. குழந்தைப் பருவத்தின் துவக்கத்திலேயே முக உணர்ச்சிகளை படிக்கும் திறனை வளர்க்கத் துவங்க வேண்டியது அவசியம்.

அதிலும் முகத்தின் மேல் பகுதி உணர்ச்சிக்குறிப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த நாம் பயிற்சி பெற்றால், ஒருவரது உணர்ச்சியின் உண்மையான தன்மையை புரிந்து கொள்ள உதவும் என்கிறார் புரோடன்.

நேரம் நல்ல நேரம் – 16 – ஆதனூர் சோழன்

Leave A Reply