நேரம் நல்ல நேரம் – 9 – ஆதனூர் சோழன்

Share

குழந்தையின் பல் பாதுகாப்பு

அடுப்படியில் அரக்க பறக்க அம்மா வேலை பார்த்துக் கொண்டிருப்பாள். அந்த சமயம் பார்த்து கைக் குழந்தை வீறிட்டு அழும்.

பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை பாதியில் விடமுடியாது. குழந்தையின் அழுகையையும் சாந்தப்படுத்த வேண்டும்.

உடனே பால் பாட்டிலை எடுத்து குழந்தையின் வாயில் திணித்துவிட்டு தனது வேலையை தொடருவாள்.

இதுசரியல்ல என்கின்றனர் ஆய்வாளர்கள். அது ஏன்?

எளிதில் சேதப்படக்கூடிய குழந்தைகளின் பற்களுக்கு இது ஆபத்தாக அமையுமாம்.

கைக்குழந்தைகளுக்கு முதல் பல் முளைக்கும்போது. அதை பால் பற்கள் என கூறுவார்கள்.

இந்த பால் பற்கள் எளிதில் சேதப்படக் கூடியவை. குழந்தையில் பல் சேதப்பட்ட பிறகு அதை ஒன்றும் செய்ய முடியாது.

எனவே, துவக்கத்திலிருந்தே குழந்தையின் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வழிகளை இங்கே தருகிறோம்.

– ஒவ்வொரு முறையும் பால் கொடுத்த பிறகு குழந்தையின் பல் மற்றும் ஈறுகளை சுத்தமான ஈரத்துணி அல்லது மெல்லிய வலைத் துணியால் துடைத்துவிட வேண்டும். இதன் மூலம் கறை நீக்கப்படும். அமில தாக்குதலில் இருந்து பல்லுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.

– குழந்தைக்கு முதல் பல் முளைத்தவுடனேயே பிரஷ் கொண்டு தேய்க்கத் துவங்க வேண்டும். பல் முளைக்காத ஈறு பகுதிகளையும் பல்லையும் தொடர்ந்து சுத்தம் செய்வதும் அழுத்திவிடுவதும் நல்லது.

– சர்க்கரை மிகுந்த திரவ உணவு வகைகளை மழலைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு தொடர்ந்து அளிப்பது, பற்கள் சேதமடைய முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

பால் டின்னில் அடைக்கப்பட்ட சத்துணவு, பழச்சாறு மற்றும் இதர இனிப்பு மிகுந்த திரவங்களை குழந்தைகளுக்கு அடிக்கடி புகட்டக் கூடாது.

குழந்தைகள் என்ன குடிக்கின்றன என்பதுகூட முக்கியமல்ல. ஆனால், இவற்றில் குழந்தைகளின் பற்களை சேதப்படுத்தும் அமிலங்கள் எந்த அளவுக்கு உள்ளன என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். தொடர்ச்சியான அமிலத் தாக்குதலே பற்கள் சேதமடைய காரணமாகின்றன.

உதாரணமாக குழந்தையின் அழுகையை நிறுத்தி அதை சாந்தப்படுத்துவதற்காக அடிக்கடி இனிப்பு திரவத்தை புகட்டுவது. பால் பாட்டிலை சுவைத்தபடியே குழந்தையை தூங்க அனுமதிப்பது ஆகியவை அமில தாக்குதலை அதிகரிக்கும்.

அதே சமயம் தண்ணீர் நிரப்பப்பட்ட பாட்டிலை குழந்தையின் கோபந்தணிக்கும் கருவியாக பயன்படுத்தலாம். தேனிலோ, சர்க்கரையிலோ மூழ்கடித்த பண்டங்களை குழந்தைகளுக்கு அடிக்கடி தரக்கூடாது.

நேரம் நல்ல நேரம் – 10 – ஆதனூர் சோழன்

Leave A Reply