நேரம் நல்ல நேரம் – ஆதனூர் சோழனின் புதிய தொடர்

Share

குழந்தைகளும்.
படிக்கும் பழக்கமும்

புத்தகங்கள் படிப்பது நல்ல பழக்கம், இந்தப் பழக்கத்திற்கு ஒருவரை தயார் செய்வது நுணுக் கமான வேலையாகும்.

குழந்தைப பருவத்திலிருந்தே, பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை, அவர்களுடைய வயதுக் கேற்ற புத்தகங்களை படிக்கும் பழக்கத்திற்கு தயார் செய்ய வேண்டும்.

இந்தப் பழக்கம் அவர்களை அறிவு முதிர்ச் சியடையவும் ஆரோக்கியமான சிந்தனைகளை பெறவும் உதவி செய்யும்.

உங்கள் குழந்தைகளுக்கு அன்பைத் தாருங்கள். அறிவைத் தாருங்கள். ஆனால். அவர்களை அவர்களாகவே இருக்க விடுங்கள் என்று கலீல் ஜிப்ரான் கூறுவார்.

எல்லாம் சரி. டி.வி., இண்டர்நெட்,, கம்ப்யூட்டர் சி.டி. என பல்வேறு வகைகளில் புத்தகம் படிக்கும் பழக்கத்திற்கு சவால்கள் எழுந்துள்ளன.

எனினும், இந்தச் சவால்களையெல்லாம் மீறி, புத்தகங்கள் தங்களுக்குரிய இடத்தை பாதுகாப்பாக தக்கவைத்துள்ளன.

உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் புத்த கண்காட்சிகள் இதை நிரூபித்துள்ளன.
குழந்தைகளுக்கான புத்தகங்கள் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு வளர்ந்துள்ளன. ஆனால், நல்லமுறையில், சிறந்த ஆசிரியர்களால் எழுதப்பட்டவை மிகவும் குறைவு.

இந்த புத்தக கண்காட்சிகளில், அச்சமூட்டும் கதைகள், அறிவியல் கதைகள், கார்ட்டூன் படங்கள் அடங்கிய காமிக் கதைகள் போன்றவை வைக்கப்பட்டிருந்த ஸ்டால்களில் குழந்தைகள் கூட்டமாக மொய்த்திருத்தனர்.

மாயாஜாலம் மற்றும் கற்பனைக் கதைகள் எல்லாம் குழந்தைகளுக்கானவை என்கிற காலம் போயே போய்விட்டது.

இப்போது அவை இளம் பருவகத்தினரின் விருப்பமாகிவிட்டன.

இன்றைய குழந்தைகளின் முன், பன்முக வாய்ப்புகள் சிதறிக் கிடக்கின்றன.

அவற்றிலிருந்து விடுபட்டு, புத்தகங்களில் கவனம் செலுத்த முடியாமல் குழந்தைகள் திணறுகின்றன.

காமிக்ஸ் புத்தகங்களை படிக்க அதிகம் கவனம் செலுத்த தேவையில்லை. எனவே குழந்தைகள் அவற்றை தேர்வு செய்கின்றன.

இன்றைய அவசர கதி உலகத்தில், பெரும்பாலான குடும்பங்களில், பெற்றோர்கள் இருவருமே வேலைக்குப் போகின்றனர். அப்படியான சூழலில், படுக்கும்போது குழந்தைகளுக்கு கதை சொல்ல அவர்களுக்கு ஏது நேரம்.

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கென உயர்தரமுள்ள புத்தகங்களை வாங்குவார்கள். ஆனால், அவை பெரும்பாலும் புத்தக அலமாரிகளை அடைத்து தூசுபடிந்து கிடக்கும்.

குழந்தைக்கு மூன்று வயதாகும் போதிருந்தே அதை படிக்கும் பழக்கத்திற்கு தயார் செய்ய வேண்டும்.

அதற்காக பெரிய பெரிய ஆசிரியர் எழுதிய புத்தகங்களை உங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

இதோ வயது வாரியாக குழந்தைகள் படிக்க எந்த வகையான புத்தகங்களை படிக்க சிபாரிசு செய்யலாம் என்று இங்கே சில யோசனைகள் தரப்படுகின்றன.

மூன்று வயதும் அதற்கு மேலும்…

இந்த வயதில் எந்த ஒரு குழந்தையும் வண்ணங்களால் ஈர்க்கப்படும். குழந்தையின் தொட்டு அறியும் உணர்வு நன்கு வளர்ந்திருக்கும். இந்த வயதில் குழந்தைகளுக்கு வண்ணப்படங்கள் அடங்கிய, தொட்டு உணரக்கூடிய. கனமான புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள். இவை வடிவத்தில் உறுதியானவையாகவும், எளிதில் கிழிந்து விடாதவையாகவும் இருக்க வேண்டும்.

நான்கு வயதும் அதற்கு மேலும்…

இந்த வயதில் குழந்தைகள் தங்களுக்கென செல்ல பிராணிகளையும், பொம்மைகளையும் தேர்வு செய்யும். அவற்றின் கற்பனை சிறகுவிரித்து முடிவே இல்லாமல் பறக்கும். இந்த வயதில்தான் குழந்தைகளுக்கு தப்பு எது, சரி எது என சொல்லிக் கொடுக்க வேண்டும்.
அவர்களுக்கு நீதிக்கதைகளை சொல்லித் தரலாம். படிக்கும்படி செய்யலாம். இதன் மூலம் குழந்தைகள் புத்தகத்தில் பார்த்தவற்றுடன் தங்கள் சொந்த அனுபவங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். குழந்தைகளின் நினைவில் தங்கும் பொருட்கள் அடங்கிய படங்களுடனான கதைகளை அவர்கள் விரும்பி படிப்பார்கள்.

5 முதல் 6 வயது வரை…

இந்த வயதில்தான் குழந்தைகள் முறைப்படியான பள்ளி வாழ்க்கையில் நுழைகிறார்கள். அவர்கள் முடிவற்ற சக்தியு டனும், அடிக்கடி மூர்க்கத்தனமாகவும் காணப்படுவார்கள்.
அவர்களுக்கு பிசாசுகள், ஓநாய்கள், அரக்கர்களை கதாபாத்திரங்களாக கொண்ட புனைகதைகளை அறிமுகப் படுத்துங்கள்.

இத்தகைய கதைகள், குழந்தைகளின் அச்சம் மற்றும் முரட்டுக் குணங்களை விரட்ட உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

7 வயதும் அதற்கு மேலும்…

இந்த வயதில்தான் குழந்தைகளுக்கு பல்வேறு செய்தி தாள்கள் மற்றும வார, மாத இதழ்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

சரித்திர கதாநாயகர்கள், புராண கதாநாயகர்கள் பற்றிய புத்தகங்கள் மற்றும் படக் கதைகளை படிக்கும்படி செய்யலாம்.

இதன்மூலம் தங்களைச் சுற்றிய உலகத்தை அவர்கள் அறிய முடியும். அவர்களது பொது அறிவுத் திறனும் வளரும்.

8 வயதும் அதற்கு மேலும்…

இந்த வயதில்தான் குழந்தைகள் கேள்வி கேட்கத் துவங்கும். அவற்றின் அறிவுப் பசியை தீர்க்கும் வகையில் ஏன். எப்படி, எங்கு, எப்போது என்கிற விபரங்கள் அடங்கிய புத்தகங்களை அறிமுகப்படுத்தலாம்.

குழந்தைகளின் பொழுது போக்குகள், சிறப்பு ஆர்வங்களை தூண்டும் புத்தகங்களை தரலாம்.

ஒரு குழந்தையின் மனம் என்பது, நகரக் கூடிய சுவர்கள் உள்ள அறைக்குள் அடைப்பட்டுள்ள மனிதனுக்கு ஒப்பானது. அந்த சுவர்களை அகற்றி விட்டு வெளியுலகை சரியானவிதத்தில் அவர்களுக்கு காட்ட வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.

அதே சமயம் குழந்தை பருவத்தில் அவர்களை அதிகமாக படிக்கும்படி நிர்ப்பந்தம் செய்வது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Leave A Reply