போரும் அமைதியும் – Fazil Freeman Ali

Share

இம்முறை போல‌ந்து ச‌ற்று வித்தியாச‌மான‌, கொந்த‌ளிப்பான‌ ம‌ன‌நிலையில் இருப்ப‌து தெளிவாக‌ தெரிகிற‌து.

சுவ‌ரெங்கும் ர‌ஷ்யாவுக்கு எதிரான‌, புடினுக்கு எதிரான‌ வாச‌க‌ங்க‌ள் எழுத‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஹிட்ல‌ரோடு ஒப்பிட்டு புட்டினை வ‌சைபாடும் சுவ‌ரொட்டிக‌ள் ந‌க‌ர்முழுக்க‌ நிறைந்திருக்கின்ற‌ன‌. சில‌ இட‌ங்க‌ளில் ஹிட்ல‌ரும், புடினும், ஸ்டாலினும் வில்ல‌ன்க‌ளாக‌ வ‌ரைய‌ப்ப‌ட்டிருக்கிறார்க‌ள். சாதார‌ண‌ தேனீர்க‌டைக‌ளில்கூட‌ பேச்சில் ர‌ஷ்ய‌ வெறுப்பு கொப்ப‌ளிக்கிற‌து.

செப்ட‌ம்ப‌ர் 1939-ல் சோவிய‌த் போல‌ந்தை ஆக்கிர‌மித்த‌லிருந்தே இந்த‌ வெறுப்பு துவ‌ங்கியிருந்தாலும், இர‌ண்டாம் உல‌க‌ப்போரின்போது போல‌ந்து வ‌ழியாக‌ சோவிய‌த் ப‌டைக‌ள் ஹிட்ல‌ரை வீழ்த்த‌ சென்ற‌போது த‌ம் கோப‌த்தையும்மீறி சோவிய‌த்தை போல‌ந்து ம‌க்க‌ள் ஆத‌ரிக்க‌வே செய்த‌ன‌ர். இலைம‌றை காய்ம‌றையாக‌ இருந்த‌ இந்த‌ புகைச்ச‌ல் ச‌மீப‌த்தைய‌ ர‌ஷ்ய‌-யுக்ரைன் போரால் மீண்டும் கொளுந்துவிட்டு எரிகிற‌து.

பிப்பிர‌வ‌ரி 2022-க்குப்பின் 3.37 மில்லிய‌ன் உக்ரேனிய‌ அக‌திக‌ள் போல‌ந்தில் ம‌ட்டும் த‌ஞ்ச‌ம் அடைந்துள்ள‌ன‌ர். இதில் அர‌சு காப்ப‌க‌ங்க‌ளில் ப‌திவு செய்திருப்ப‌வ‌ர்க‌ள் எண்ணிக்கை 1.2 மில்லிய‌ன். இவ‌ர்க‌ளுக்கு ஊண், உடை, வீடு வ‌ழ‌ங்கும் பெரும் பொறுப்பு சுமையாய் அழுத்துகிற‌து போல‌ந்தின் பொருளாதார‌த்தை. கூட‌வே உக்ரேனிய‌ சிறார்க‌ளின் ப‌ள்ளிக்கூட‌ அனும‌தியும் வ‌குப்ப‌றை ம‌ற்றும் ஆசிரிய‌ர் தேவையும் க‌ல்வித்துறையையும் விழிபிதுங்கி நிற்க‌வைத்திருக்கிற‌து.

இந்த‌ சுமை உள்ளூர் ம‌க்க‌ளின் தோள்க‌ளையும் ப‌த‌ம்பார்க்க‌ துவ‌க்கிவிட்ட‌தை க‌ண்கூடாக‌ பார்க்க‌முடிகிற‌து. என்ன‌தான் ஐரோப்பிய‌ ஒன்றிய‌த்தின் உத‌விக‌ள் கிடைத்தாலும் அது போதுமான‌தாக‌ இல்லை என்று சொல்கிற‌து அர‌சு.

சில‌ மாத‌ங்க‌ளில் குளிர்கால‌ம் துவ‌ங்க‌ இருக்கும் நிலையில் நாடெங்கும் நில‌க்க‌ரி (Coal) ப‌ற்றாக்குறை. வார்ஸா, க்ராக்கோ போன்ற‌ பெருந‌க‌ர‌ங்க‌ள் த‌விர்த்து பெரும்பாலான இட‌ங்க‌ளில் க‌ரியால் இய‌ங்கும் வெப்ப‌மூட்டும் அமைப்புதான் வீடுக‌ளில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து.

சென்ற‌ ஆண்டு ஒரு டன் 275zl-க்கு விற்ற‌ நில‌க்க‌ரி இப்போது 2,500zl க‌ட‌ந்துவிட்ட‌து. அதுவும் சென்ற‌ சில‌ வார‌ங்க‌ளாக‌ “ஸ்டாக் இல்லை” என்று சொல்கிறார்க‌ளாம். பண‌வீக்க‌ம் ஒருபுற‌ம் க‌ழுத்தை நெரிக்க‌, ப‌ண‌ம் கொடுத்தால்கூட‌ வாங்க‌ முடியாத‌ பொருள்க‌ளின் ப‌ற்றாக்குறை இப்போது நில‌வுகிற‌து.

ச‌ரி மின்சார‌ வெப்ப‌த்துக்கு மாற‌லாமென்றால் அத‌ன் விலையும் ச‌ராச‌ரிம‌க்க‌ளின் கைக்கெட்டா தூர‌த்தில் தொங்கி நிற்கிற‌து. ம‌ட்டும‌ல்ல‌, நில‌க்க‌ரியிலிருந்து மின்சார‌த்துக்கு மாற‌ தேவைப்ப‌டும் உப‌க‌ர‌ண‌ங்க‌ளில் த‌ட்டுப்பாடும் விலையும் மிக‌ அதிக‌ம்.

பள்ளிக்கூட‌ங்க‌ளில் வெப்ப‌மூட்ட‌ போதிய‌ நிலைக்க‌ரி தேக்கிவைக்க‌ இய‌லாததால் குளிர்கால‌த்தில் ஆன்லைன் மூல‌ம் வ‌குப்புக‌ள் ந‌ட‌த்த‌லாமா என்று யோசிக்கிக்கிறார்க‌ளாம். இது, இரு பெற்றோரும் வேலைக்குச்செல்லும் வீடுக‌ளில் பெரும் சிக்க‌லை உருவாக்கும். சமூக‌ பொருளாதார‌த்தை மேலும் சிதைத்து சீர்குலைக்கும்.

அங்காடிக‌ளெங்கும் பொருட்க‌ள் ப‌ற்றாக்குறை, இருக்கும் பொருட்க‌ளின் விலையும் தாறுமாறாக‌ எகிறிக்கிட‌க்கிற‌து. ர‌ஷ்ய‌ பொருட்க‌ளின் இற‌க்கும‌தி ஏற‌க்குறைய‌ நின்றுவிட்டிருக்கிற‌து. ஏற்க‌ன‌வே ந‌லிந்திருந்த‌ பொருளாதார‌ம் ICU-வில் அனும‌திக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ நிலையில் இருக்கிற‌து.

இந்த‌ கோப‌ம் முழுவ‌தும் இப்போது ர‌ஷ்யா மீது திரும்பியிருக்கிற‌து. த‌ற்போதைய‌ போல‌ந்தின் வ‌ல‌துசாரி அர‌சும் த‌ன் கையாலாகாத‌த் த‌ன‌த்தால் ஏற்ப‌ட்டிருந்த சென்ற‌ சில‌ ஆண்டுக‌ளின் ச‌மூக‌-அர‌சிய‌ல்-பொருளாதார‌ தோல்விக‌ளனைத்தையும் ர‌ஷ்யாவின் உக்ரேன்மீதான‌ போர்மீது போட்டுவிட்டு அமைதியாக‌ வேடிக்கை பார்க்கிற‌து. ச‌ர்ச்சோ “பிரார்த்த‌னை மூல‌ம் ப‌ரிகார‌ம் தேடுவோம்” என்று வெந்த‌ புண்ணில் வேல் பாய்ச்சுகிற‌து.

விரைவில் அமேரிக்காவிட‌மும் நேட்டோவிட‌மும் கையேந்தி, ச‌ர‌ணாக‌தி அடைந்து நிற்கும் நிலைக்கு போல‌ந்து போகும். அது ஐரோப்பாவுக்கும் ந‌ல்ல‌த‌ல்ல‌, மானுட‌த்தின் எதிர்கால‌த்திற்கும் ந‌ல்ல‌த‌ல்ல‌.

போருக்குப்பின் அமைதி திரும்பும் என்கிறார்க‌ள் அர‌சிய‌ல்வாதிக‌ள். அது ம‌யான‌ அமைதியாக‌ இருக்குமோ என்ற அச்ச‌மும் வேத‌னையும் ம‌ன‌தை வாட்டுவ‌தை த‌டுக்க‌ இய‌ல‌வில்லை.

லியோ டால்ஸ்டாய் மீண்டும் எழுந்துவ‌ந்து இன்னோரு நாவ‌ல் எழுத‌வேண்டுமோ..?

Leave A Reply