சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 3

Share

சுவாசக்கலை குறித்து இடைக்காடர் சித்தர்

மூக்காலே ஓடும் சுவாசக்கலை மூச்சு உண்ணாக்கு எனும் நாசியிலே நடக்கும் கலைவாசி, முன்னுக்கு நிற்கும் வாய்மூக்கு வழிவந்து பேச்சாகவும் மூச்சாகவும் நடப்பது வாசியே.

அது உண்ணாக்காலே சங்குதொண்டை வழியே உடலுக்குள் வந்து நடுமார்பின் நுரையீரலின் இருபக்கமும் விலாவில் நின்று சுழன்ற வாய்வு.

அதைப்பார்வையிலிருந்தே தானாகவே இழுத்து நொடிக்கு நொடி மூக்குவழி சிட்டுபோல பாய்ந்து வெளிப்போவதை அறிந்து கொண்டு வாசிரூபத்தை கண்டுகொள்ள வேண்டும்.

அதனை யூகத்தால் உணர்ந்துவெளியேறும் வாசி ரூபத்தை உள்முகமாகமாக திரும்பும் வகைதான் சாகாக் கலையான இந்தவாசி யோகம்.

இந்த யோகத்தைப் பெற்றுவிட்டால் அதன் பின்னே அடைவது ஞானமாகும். உச்சியில் நின்றிருக்கும் பிராணன் எனும் ஆன்மா அழிந்துபோவதில்லை.

அப்பிராணனை வாசியாக்கி இயக்கி சோதியில் சேரும் ஞானத்தினால் மனம் அழிந்துபோகும். அறிவானது உன்னைவிட்டு அகலாது.

உடலும் உறுதியாகி நிற்குமேயன்றி உடலில் நோய்நொடிகள் என்பதே பருத்தாது. உடலில் உள்ள கருவி கராணதிகள் யாவும் பரிசுத்தமாகி பிரகாசிக்குமேயன்றி அவற்றில் குறைவு தோன்றாது.

மெய்ப்பொருள் என்றும் அழியாது உடம்புதான் அழிந்து போகும். இப்படி அழிந்துபோகும் மாந்தரைப்போல இல்லாது இப்பிறவிப்பெருங்கடலில் இருந்து கரையேற அறிவையே ஆயுதமாக்கி ஞானத்தில் வெற்றிகொள்ளவேண்டும்.

இந்த மெய்யான வாசியோகத்தைக் காண்பதற்கே பெரியோர்கள் மூச்சுக்காற்றைக் கவனித்து கலையாக மாற்றும் சரம்பார்க்கநூல் சொல்லி வைத்தார்கள்.

மேலும் உடல் உயிர் உள்ளம் என்பதை அறியவும் உடம்பினில் உள்ள தொண்ணூற்றாறு தத்துவங்களையும் உடல் கூறாகச்சொல்லி வைத்தார்கள்.

இறவா நிலைபெற வேண்டும் என்ற ஞானதாகம் வந்ததால் இதனை எல்லாம் நன்கு ஆராய்ந்து உடம்பினிலே கூர்ந்து பார்த்து அறிந்துகொள்ளவேண்டும்.

இப்படிமெய் என்ற உடம்பால் மெய்ப்பொருளாம் வாசியில் நின்று சாதனைகள் செய்து சாதித்தால் அதன்பலனாய் மெய் ஞானம் அடையலாம்.

நாகம் தீண்டியவுடன் உடலைவிட்டு உயிர்வேறானதைப்போல ஞானத்தை தொட்டவுடன் மாயை யானது விலகிப்போகும்.

வேதத்தை உரக்க கூறுவதால் ஞானம் அடையமுடியாது. அகாரமே சொல்லாகும் அதுவே வேதமாகும்.

குருவாக மாற வேண்டும் என ஆசைப்பட்டால் மூக்கின் வழி ஓடும் உயிரை வாசியாக்கி நெற்றிமேலே ஏற்றிட கற்க வேண்டும்.

அந்நெற்றியான நடுவே திருவிளங்கும் வாசல் என அறிந்து இப்படியே தினந்தோறும் பார்த்தால் வாசியோகம் நாள் செல்லச்செல்ல வலுப்பெற்று யோகி எனும் பெயரை அடையலாம்.

இந்த யோகத்தால் மறுபிறவி இல்லை வீணாகிப்போகாதபடி உயிரையே பார்த்துக்கொண்டிருக்க பழகிட வேண்டும். உயிரை மேலே நோக்கி செலுத்த அங்கே உருவாக நின்ற சோதியில் சேர்த்தால் வாசிவலுவாகி பிறவாப் பெருவழிக்கு நம்மை இட்டுச்செல்லும் என்கிறார் இடைக்காடர் சித்தர்.

வாசியோகம் செய்பவருக்கு வைத்தியம் தேவையில்லை. நோயுற்றோருக்குதான் வைத்தியம் யோகியர்களுக்கு அவர்கள் செய்யும் யோகமே வைத்தியமாக செயல்படுகிறது.

யோகத்தினால் துன்பமும் உண்டு. அந்த துன்பத்திற்கும் யோகமே வடிகாலாகும். வாசி யோகம் செய்யும்போது கனலும் அனலும் கூடி அபானவாயுவின் இயக்கத்தால் தொல்லைகள் வந்து சேரும்.

வாசியானது உடம்பினில் உள்ளவாத பித்த சிலேத்துமங்களை வெளியேற்றி சமமாக வைத்திருக்கும். அது வைத்தியத்தை கொடுக்கும் பித்தத்தை ஒழித்து வெளிக்கொணரும்.

வாசியானது மூலாதாரத்தில் நின்ற தனஞ்செயன்வாய்வை எழுப்பி மேலேறும்போது மாயை என்றமும் மலங்களும், அழியும். அப்போதுதான் வாதபித்த சிலேத்துமங்கள் எனும் முப்பிணிகளும் அகலும்.

அவை நீங்கும்போது பித்தம் வெளிவரும்போது அத்துடன் சேர்ந்து அபானவாய்வும் மேலேறும் அது உடம்பினில் சேர்ந்து உபத்திரவங்களைக்கொடுத்து துன்பம் செய்யும்.

உயிர்காற்றில் கலந்து உயிரும் நொந்து உடலில் வலிகொடுக்கும். தலையிலும் வலிவந்து தொடர்ந்து ஊசியைப்போல குத்தும். இது அபானவாய்வு உடலிலும் உயிரிலும் கலப்பதால் ஏற்படுவது ஆகும். அதற்கு வைத்தியங்கள் செய்தால் நிவாரணம் கிடைக்காது.

யோகத்திற்கு யோகமே மருந்து இந்த அபான வாய்வு உடலில் வயிற்றில் உணவு செரித்தவுடன் பெருங்குடலில் உள்ள மலத்தை வெளித்தள்ள சத்தமாக உறுமி வெளியேறும்.

வாசியோகம் எளிதில் எல்லோர்க்கும் கிட்டி விடாது. அது உண்மையான அழியாத கற்பம் ஆகும். வாசியை அற்பபொருளாக எண்ணிவிட கூடாது.

வாசியோக சாதனையில் வாழ்வது என்பது மிகவும் கடினம். விட்டகுறை தொட்டகுறை உள்ளவர்க்கே வாசி வாய்க்குமேயன்றி மற்றவர்க்கு இதை அறியும் எண்ணமே தோன்றாது.

உடம்பினில் வரும் நோய்களை விலக்கி கவலைதரும் மனத்தை போக்கி துன்பம் அணுஅளவும் இல்லாமல் வாழ்வதற்குத்தான் இறைவன் நமக்கு வாசியை வைத்துள்ளான்.

இதனை உணர்ந்து வாசியை வலுவாக்கி காணாது நின்ற ஒரு பொருளில் சேர்ந்து ஓர்நிலையில் நிற்பவர்களுக்கு நான்காட்டும் இறவாநிலை கிடைக்கும்.

இந்த தவசாதனையில் நில்லாது போனால் நாடி நிலையாக நிற்காது. வேகமாக துடிக்கும் கண்களும் ஓரிடத்தில் நிலையாக நிற்காது. வாசியும் வாழ்நாள் முழுவதும் வீணாகி ஆயுளும் குறைந்துபோகும்.

வாசியை தனக்குள் தானொடுக்கி மனதினை கட்டி மண்ணாலான உடம்பினில் வரும் நோய்களை விரட்டிடலாம். இந்த அறிவை அறியாதுபோனால் எப்போதும் மனதிலும் உடம்பிலும் துன்பங்களே உற்பத்தியாகும்.

யோக துன்பத்தை வாசியினால் கடந்து அப்பாலே சூட்சமமாய் இருக்கும் சொல்ல வொண்ணாத ஞானப்பதம் எனும் மெய்ப் பொருள் பற்றி அறியவேண்டும் என்கிறார் சித்தர் பெருமான்.

வாசி ஏறி ஒடுங்கும் இடம் ஞானக்கண்ணாகும். இந்த ஞானக்கண்ணை அறிந்துபார்த்து வந்தாலும் தினமும் வாசிப் பழக்கம் செய்து தியானம் செய்துவர வேண்டும்.

வேர்த்தாலும் குளித்தாலும் உடம்பில் நிர்முத்துக்கள் போல சொரிந்திருக்கும் அதனைத்துடைக்க வேண்டும் இல்லையென்றால் சளிபிடிக்கும். பெண்களுக்கு எப்போதும் பொருமை வேண்டும். அதுபோல சாதகர்கள் எந்தக் கோபத்தையும் சகிப்பதற்கு விடா முயற்சியுடன் கூடிய சாந்தகுணம் வேண்டும்.

இதுபோன்று தினமும் இருந்துபார்த்துவர இறை நாட்டமும் பொருமையும் வேண்டும். வாசியை ஏற்றிஒளியில் சேர்த்து உறைந் திருப்பதே ஞானமுடிவு. எப்போதும் ஒளியில் நின்று ஒளியை காண்பதே மோட்சமாகும்.

இவ்வுடம்பில் நின்ற ஆன்மாவை வாசியாக்கி அதை முதுகுத்தண்டின் எலும்பினூடே செலுத்துவதே வாசியோகம். அது எலும்பின் நடுவே மெல்லிய ஊசியைப்போல் மேலேறி பத்தாம் வாசல் கதவைத்தட்டும்.

இப்படி எலும்பினுள் ஊசிமுனை துவாரமாக ஓடும் வாசியே அப்பத்தாம் வாசல் பாதைவழி ஏறும். அங்கே இருக்கின்ற காற்றுதான் பிரானை ஆகும்.

எலும்பினுள்ளே ஓடுகின்ற வாசியே ஆன்மாவாகும் அதுதான் ஏறியும் இறங்கியும் முனைமுக்கு எனும் சுழுமுனையில் நடக்கும்.

இப்படி எலும்பிற்குள் காற்றாகிய ஆன்மாவாசியாகி வந்தால் அது அப்படியே புருவமத்தி எனும் நடுவில் ஏறும் என்பதை நன்குணர்ந்து பார்க்கவேண்டும்.

புருவமத்தியில் ஏறிவரும் வாசியானது உடலின் ஆதாரத்தின் இடையில் சென்று அந்த ஆறு சக்கரங்களின் இடைநடுவே உள்ள ரோட்டுவழி பாதையாக தலை உச்சிக்கு செல்லும்.

அவ்வாறு ஏறுகின்ற காற்று மண்டை நடுவி சென்று தலை உச்சியில் நின்றது. இப்படி ஏறி அந்தப் பாதைவழி மண்டை ஓட்டின்மேல் உள்ள உச்சித் தோலில்படர்ந்து மண்டையெல்லாம் உரோமமாக ஆனது.

அப்படி மேலே ஏறி அக்காற்றே உடம்பில் இறங்கியதால் உடம்பின் மேல் கை கால்களெல்லாம் அங்கங்கே இயல்பக ரோமம் முளைத்து சேர்ந்தது.

உடம்பினில் ரோமத்திலிருந்து எலும்புவரை உருவாக காரணமாக இருந்த வாசியினால்தான் காயசித்தி அடையமுடியும். காயசித்தி கண்டுவிட்டால் தலையில் நரைத்து வெள்ளையாய் ஆனமுடிகள் எல்லாம் கருமையாக மாறிவிடும்.

மார்பிலுள்ள ரோமங்களும் கருத்து உடல் வலிமை கட்டுண்டு சரீரங்கள் யாவும் தேஜஸ் விளங்கும்.

இவ்வான்மாவை இறைவனுடன் சேர்க்க உச்சியில் இருந்த மயிர்பாலம் என்ற நுண்ணிய வழியை அறிந்து வாசியை அதில் சேர்ந்தேறி நுணுக்கமாய் தொடர்ந்து பற்றி தவசாதனையில் நிற்கவேண்டும்.

இத்தவத்தில் பனிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து இருந்துவந்தால் சுவாசம் பனிரெண்டு அங்குல அளவு வெளிப்போகாது அவ்வுச்சி வாசலுக்குள்ளேயே ஓர் அங்குல அளவே வாசி நடந்துகொண்டிருக்கும் அதனால் பரகாயப்பிரவேசம் என்னும் ககன மார்க்கத்தில் உடம்போடு பறக்கலாம், என்கிறார் இடைக்காடர் சித்தர்.

வாசியோக சாதனையில் நிற்கும்போது சுழுமுனையில் முள்ளைப்போல் கூர்மையாகி வாசி உள்நுழையும் அந்நேரத்தில் முழி பிதுங்கி வெளிவருவதுபோல் தோன்றும் இது புருவப்பூட்டைத் திறப்பதற்கு நடக்கும் செயலாகும்.

அச்சமயம் மயங்கிடாமல் அவ்விடத்தைவிட்டு நீங்காமல் நிலை நிறுத்தவேண்டும். வாசியானது நாய்க்குமூச்சு இரைப்பதுபோல ஏறி இறங்கி ஓடிக்கொண்டிருக்கும்.

அதனை அவ்வாசலின் உள்ளே செலுத்த அங்கேயே நின்று அமைதிப்படுத்து. இச்சாதனையில் இருக்கும்போது மனைவியோடு கூடி சிற்றன்பம் அனுபவிப்பதை தவிர்க்கவேண்டும்.

பேரின்பத்தை அடையவேண்டுமெனில் வாலைக்குமரி அன்னையின் கரம்பற்றிடவேண்டும். அவள் அமுர்த நீரைவாரி வழங்கிடுவாள். அவள்தரும் அமுர்தநீரே பேரின்பம்.

வாசியோகத் அறியாவிட்டால் சித்திகிட்டாது. மெய்ப்பொருளையும் என்னையும் விட்டுவிட்டால் கெட்டுத்தான்போவார். அவர்கள் பொய்யான உடம்பை மெய்யாக்கி இறவாநிலையில் என்றும் இருப்பார்கள்.

குருவழியாக வந்தவர்கள் எவரும் உயிரை எமனிடம் கொடுக்க மாட்டார்கள் தெற்கும் அஞ்சமாட்டார்கள்.

உடம்பையும் உயிரையும் பற்றி அறியாதவர்கள் வாழ்வில் துன்பமே சூழ்ந்து கண்ணீர் சிந்துகின்றனர். ஏன் என்று கேட்டால் எல்லாம் ஊழ்வினை என்பார்கள். விதியை மாற்றத் தெரியாது வாசியை அறியாது வீணாக்கி விதி எனச் சொல்லி உயிர்துடிப்பை விட்டு மாண்டு போகின்றார்கள் என்கிறார் இடைக்காடர்.

கோபம் எனும் அக்கினியானது தேகத்தில் பற்றிக்கொண்டால் அது அவ்வுச்சியில் நின்ற உயிர்காற்றோடு கலந்து காமம் எனும் கொடுங்கனலாகி இந்திரியம் விந்தோடு வெளியேறும்.

அதையே வாசிக்கலையால் கோபத்தையும் காமத்தையும் அடக்கி வாசியினால் உச்சித்தீயாக விளங்கும் அனலை மூலாதாரத்தில் கனலாக விளங்கும் குண்டலினி சக்தியோடு கூட்டி ஒன்றாக்கி மேலேற்றினால் இந்திரியமானது ஆவியாகி சாம்பலாகும்.

(தொடரும்)

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 3

Leave A Reply