சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 3

Share

சுவாசக்கலை குறித்து இடைக்காடர் சித்தர்

தொடர்ச்சி

மனநிலை சூனியப்பட்ட நேரத்தில் யோகிகளும் சித்தர்களும் உடலையும் உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்த சிறுமூளையின் தொடர்பு கொண்ட செயலாற்றும்போது தாவரங்களின் மனதோடு தன் மனதைத் தொடர்புபடுத்தி பேசிக்கொண்டிருப்பார்கள்.

ஞானிகளும் யோகிகளும் பூமிக்கடியிலுள்ள அஷ்டமா உலோகங்களையும் நவரத்தினங்களையும் 32 பாஷாணங்களையும் 108 விதமான கற்களையும் பலவிதமான மண்களையும் மண்ணுக்கடியிலிருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் இருந்த இடத்திலேயே இருந்து ஆராய்ந்து கண்டெடுக்க ‘ஞானதிருஷ்டி’ என்னும் ஈர்ப்புத்தன்மையைப் பயன்படுத்தினர்.

இதேபோல ஆகாயத்தில் உள்ள சூரியன் சந்திரன் கிரகங்கள், 41 கோடி நட்சத்திரங்கள் ஐந்து வகையான மேகங்கள் இவையனைத்தையும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே அறிபவன்தான் ஞானி ஆவான்.

அவனால் கூட்டப்பட்ட கணக்குகள் மற்றவர்களுக்கு புதிதாக உள்ளது. குண்டலினி யோகத்தில் வித்தியாசமான ஒரு பகுதிதான் ‘ஸ்தம்பன சித்தி’ எனப்படும் குளுமைக்காற்றை நாபியில் நிறுத்தி சிறுமூளையின் தன்மையை ஏகாந்த நிலையில் உடல் முழுவதும் உள்ள அணுதாவரங்களை முழுமையாக கட்டுப்படுத்தி, தண்ணீரில் மிதக்கும் சமயம், பெருமூளை இயக்கத்துடன் தண்ணீருக்கடியிலும் தண்ணீருக்கு மேல் உள்ள தாவரங்கள் உயிரினங்களிடத்தில் பழக அவற்றின் தன்மையை அறிய பயன்படுத்துகின்ற ஒருவிதமான கட்டுத்தொழிலாகும்.

இதனால் பல உயிரினங்களையும் தாவரங்களையும் எளிதில் கண்டறியலாம். உடலைக்கட்டுப்படுத்தி நாபியைச் சுத்தம் செய்யாமலும் மேலும் பஞ்சபூதங்களைச் சுத்தம் செய்யலாமலும் இச்செயல்களைச் செய்யமுடியாது.

ஞானி என்பவர்கள் உடலையும் உயிரையும் செம்மையாக்க ‘பிராணயாமம்’ என்னும் மூச்சுப்பயிற்சிகளைச் செய்து கொண்டு உடலில் உள்ள காற்றைத்திசை மாற்றி மனதைச் செம்மைப்படுத்தி ‘சூன்யம்’ என்னும் பிரம்மத்தை உணர்ந்து ஏகாந்த நிலையில் இருப்பார்கள்.

உடலில் உள்ள பித்தங்களை கட்டுப்படுத்த ‘சந்திரகலை’ என்னும் கலையை பயன்படுத்துவார்கள்.

உடல் செம்மையானபிறகு ‘அக்னி’ என்னும் ‘ஜுவாலமுகி’ யைக் கண்டு வாழநாள் முழுவதும் ஏகாந்த நிலையில் அமருவார்கள்.

இப்படிப்பட்டவர்களை விருப்பு, வெறுப்பு, நித்திரை, சோர்வு போன்ற எந்தநிலைகளும் நெருங்குவதில்லை. அந்த நிலையில் உலக நன்மைக்காகவும் உயிர் நன்மைக்காகவும் சிறு சிறு நன்மைகளைச் செய்வார்கள், அதுவும் முதல் நிலையில் உள்ளவர்களை மட்டுமே இதனைச் செய்வார்கள்.

இதையும் தாண்டி ஏகாந்த நிலையை வலுவடையச் செய்தவற்காக பலகாலங்கள் காத்திருப்பார்கள்.

இரண்டாவது நிலையில் உள்ளவர்கள் உடலை வருத்தி உயிரைச் செம்மையாக்கி பெருமூளை நடுவிலுள்ள தாய் நீரை நிலைப்படுத்த பாடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.

மனித உடலுள்ள ஜுவாலமுகி என்ற அக்னி உடலிலுள்ள சப்தஸ்வரங்களையும் சுத்தப்படுத்தும் அப்போதுதான் மனித உடலிலுள்ள கல்லீரலும், நாடியும் முழுமையாக சுத்தமடைந்து பிரம்ம ஞானி எனப் பெயர்பெறுவர்.

சூரிய கலையில் 63 அவங்களும் செயல்பட்டு சித்துக்களை புரிந்து சிவத்தை கட்டுப்படுத்திய பிறகு உடல் ஒருநிலைப்பட 60 ஆண்டுகளாகும். 63 கலைகளையும் பயன்படுத்தாமல் 64 வது கலையான சந்திரகலை எனும் ஜ்வாலாமுகியைக் காணலாம்.

அண்டத்தில் இருக்கும் சூரியனின் நடுமையத்தில் குளுமைநீரான தாய்நீர் எனப்படும் அமிர்தம் உள்ளது. அதுபொண்மையின் உடலில் உள்ள சுரோணிதம் என்னும் தன்மை படைத்தது.

எந்த ஒரு கிரகத்திலும் இல்லாத தனித்தன்மை சூரியனுக்கு மட்டுமே உள்ளது. மற்றப் பகுதிகள் அனைத்தும் பித்தத்தன்மை படைத்தது அதேபோல மனிதனின் கல்லீரலும் அதன் நடுவே உள்ளதாய் நீர் எனப்படும் அமிர்தமும் குளுமைத்தன்மை படைத்ததாகும்.

மனிதனுக்கு மரணம் ஏற்படும் சமயம் கல்லீரலின் நடுவில் உள்ளதாய் நீர் எனப்படும் அமிர்தம் வெளிப்படும். அது வாதநாடியில் நின்று உடலில் உள்ள உணர்வுகளை முழுமையாக அழித்துவிடும்.

ஞானிகளுக்கு மட்டுமே இந்தகாற்று பெருமூளை நடுவில் நின்று ஜோதியாக ஒளிர்ந்து கொண்டிருக்கும்.

இந்தக் காற்று அண்ட சராசரங்களையும் வலம் வரும் அளவிற்கு ஆற்றல் படைத்ததாகும். எதையும் தீண்டாத தன்மை கொண்டது. இது மரணம் நேரிடும் காலத்தில் ஞானியின் உடலைவிட்டுப் பிரிந்து நேராக சூரியனின் நடுவில் உள்ள குளுமை நீர் என்னும் அமிர்தத்தில் ஐக்கியமாகும். அந்த நீருக்கு எக்காலத்திலும் மரணம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

எது கண்ணுக்கு கண்ணாகவும் காதுக்கு காதாகவும் உயிருக்கு உயிரளிப்பதாகவும் உள்ளதோ, எது மனம் புத்தி இவற்றிற்கு புத்தொளி அளிப்பதாக உள்ளதோ எது சித்தம் அகங்காரம் முதலியவற்றுக்கு ஆதாரமாக உள்ளதோ அதுவே பிரம்மம்.

எதன் உதவியின்றி புலன்களும் பூததத்துவங்களும் பொருளின்றிபோய்விடுகின்றனவோ எது எல்லாத்தோற்றங் களுக்கும் காரணமாகின்றதோ, எது எல்லா மாற்றங்களையும் பார்த்துக் கொண்டு சாட்சியாக நிலைகொண்டிருக்கிறதோ அதுவே பிரம்மம்.

பிரம்மத்தை உணர்ந்தவன் மனிதரில் வேற்றுமை அறியான், கடவுள் என்ற பேதமும் தான் என்ற உணர்வும் தனியே பிரிந்து நிற்பதில்லை. படைப்பவன், படைக்கப்பட்டபொருள் இவற்றைக் காண்பவன் என்ற வேறுபாடு உணர்வுகள் அவனுக்கில்லை.

யோகிக்கும் ஞானிக்கும் சில வேற்றுமைகள் உள்ளன. சராசரிமனிதனைவிட ஒருபடி மேலாக யோகியையும் அதற்கும் மேலாக ஞானியையும் சொல்லலாம்.

பிரம்ம ஞானி என்பவன் முற்றுமுணர்ந்த ஞானி எனப்படுவர். இந்த வ¬கியல் சராசரி மனிதன் தனது ஆன்மிக வாழ்வின் ஏணிப்படிகளான யோகி ஞானி போன்ற நிலைகளைக் கடக்க வேண்டிய சாதனங்களாக பக்தி, தியானம், யோகம், போன்ற பலவகை உபாயங்களை நம்முன்னோர்கள் விட்டுச்சென்றுள்ளனர்.

திருமூலர் முதலான சித்தர்கள் பலர் உடலினை ஓம்பும் உபாயங்களே உய்த்துணர்ந்து ஓதியுள்ளார்கள்.

உடலாகிய இந்த ஆன்ம ஆலயத்தில் இறைவனை உணர்ந்து பலவழிபாடுகள் செய்து இந்த உடலாகிய சாதனத்தை ஒளிமயமாக்கி எல்லையையும் காலக்கணக்கையும் நிகழ்ச்சி வரம்பையும் கடந்து, எப்போதும் எங்குமாய்த்திரிந்தும் மறைந்தும் புலப்படும் நிலைத்து நிற்கக்கூடிய ஒரு சக்தியை அவர்கள் சித்தி செய்துகொள்வதுடன், உலகம் முழுவதும் தானாகவும் தனக்குள் உலகமாகவும் இருக்கும் நிலையை அடைகின்றனர்.

இவர்கள் இந்த உடலுக்குள் உறையும் இறைவனுக்கு ஏனையோர்களைப்போல புறபூஜை செய்வதில்லை. சித்தர்கள் செய்கின்ற பூசைகள் எல்லாமே ஆன்மாபூசைகள்.

தெய்வநிலைகளை உருவங்களிலே துதிக்கின்ற சித்தர்பாடல்கள் பல இருக்கின்றன என்றாலும் அவையெல்லாம் சாமான்யர் களுக்கான விளக்கமே தவிர மற்றபடி சித்தர்களுடைய தனிப்பட்ட வழிபாடு என்பது சில நுட்பமான இரகசியங்களை உள்ளடககிய ஆன்மச் செயல்களே!

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 4

Leave A Reply