சிந்தனைக் களம் – 20 – Bamini Rajeswaramudaliyar

Share

அழகான ரம்மியமான சூழலில் பேத்தியுடன் நடைப்பயிற்சிக்கு வந்தேன்.

குளிர்மையான காற்றும், மெல்லிய சூரிய கதிர்களின் வெளிச்சமும், செயற்கையான நீர்விழ்ச்சியின் சலசலத்த சங்கீதம் போன்ற ஓசையும் தாலாட்டாகி விட எனது எட்டு மாதக் குழந்தையான பேத்தி விளையாடிய களைப்பும் சேர தூங்கி விட்டாள்.

செயற்கையாக உருவாக்கப்பட்ட அழகான lake இல் பலவிதமான பறவைகளும், மீன்களும், குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடலும், பெற்றோருடன், தாத்தா பாட்டியுடன், தாயுடன் தனியாக ,தந்தையுடன் தனியாக வந்திருக்கும் குழந்தைகளும், பெற்றோரை சக்கர நாட்காலியில் வைத்து தள்ளி வந்த முதிர்ந்த, வயோதிபத்தை நெருங்கும் பிள்ளைகள் என அந்த இடமே அன்பால் பெருகி வழிவது போல் உணர்ந்தேன்.

எனது சிந்தனை எம்மவர் பக்கம் திரும்பியது.

எங்கே எமது குழந்தைகளும் பெற்றோர்களும், வயோதிபர்களும் அவர்களின் பிள்ளைகளும் என கண்கள் தேடியது.

யாரையும் காணவில்லை.

கவலையாக இருந்தது.

குழந்தைகளுடன் இருப்பவர்கள் என்ன செய்வார்கள் என சிந்தித்தேன்.

வயோதிபர்கள், நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்லப்படுவார்களா?

தெரியவில்லை!!!

யாரையும் இங்கு நான் குறைகூறவில்லை. 35 வருடங்களுக்கு முன் இருந்த என் மனநிலைகளையும் ஆராய்கிறேன்.

சமையல், விருந்துபசாரம்,கல்வி, உறவினர்கள், நண்பர்கள் என்றே பலரது வாழ்க்கை நகர்கிறது.

அங்கேதான் பிரச்சனைகளும், மனப்பதட்டங்களும், மன இறுக்கங்களும் உருவாகிறது.

குறைகளும் குற்றங்களும் கண்டுபிடிக்கப்பட்டு, gossip பேசப்படுகிறது.

பொறாமைகள் உருவாக்கப்படுகிறது.

பணமும் கல்வியும் பண்பை விட முக்கியத்துவம் பெறுகிறது.

குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கங்கள் உருவாகிறது.

தமது பிள்ளைகள் மற்றவர்களின் பிள்ளைகள் போல் இல்லை என மன வேதனைகளுக்கு வித்திடப்படுகிறது.

உரிமை என்ற பெயரில் குழந்தைகளை தண்டிக்கும் அதிகாரத்தை பலரும் எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் பெற்றோர் அவர்கள் பேசும்படியாக ஏன் நடந்தாய் என குழந்தைகளை திட்டுகிறார்கள்.

சிந்திக்கவும். சிந்தித்தால் உண்மை புரியும்.

இதே நேரத்தை வித்தியாசமான சிந்தனைகளுடன் பிள்ளைகளின் மகிழ்ச்சியை, மூளை, மன வளர்ச்சியை கவனத்தில் கொண்டு, அவர்களுக்காக நேரத்தை செலவழிக்கும் போது பல நன்மைகளை காண்போம் அதேநேரம் அவசியமற்ற பிரச்சனைகளையும் தவிர்க்கறோம்.

பெற்றோர் தமது undivided attention ஐ பிள்ளைகளுக்கு கொடுப்பது குழந்தைகளை பாதுகாப்பு உணர்வுடன் வளர வழி செய்யும். அது பல எதிர்காலத்து பிரச்சனைகளை உருவாக்காமல் தவிர்க்க உதவும். சிந்திக்கவும்.

அக்காலத்தில் இவைகள் எனது தலைமுறையினரின் வாழ்க்கைமுறை என நம்புகிறேன் ஒரு சிலரைத் தவிர.

இன்றைய இளைய தலமுறையினர் பிள்ளைகளின் மூளை, மனம் வளர்ச்சி,நேர்மறை உணர்வுகளுக்கான வழிகாட்டிகளாக வாழ்வார்கள் என எதிர்பார்க்கிறேன்.

நன்றி

சிந்தனைக் களம் – 21 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply