6. ஜ்யார்ஜ் ஜோஸப் – TAMIL LEADERS – 6

Share

தனித்தமிழ் நெடுங்கணக்குக்கும் (எழுத்துக் கூட்டத்துக்கும்) தனித்தமிழ் ஒலிக்கும் கட்டுப்படாத, அந்நிய நாட்டுப் பெயரைக் கொண்ட ஜ்யார்ஜ் ஜோஸப் அவர்களும் தமிழரா, தமிழ் நாட்டுத் தலைவரா என்று சிலர் உறுமிக் கொண்டு கேட்கலாம்.

அப்படிப் பார்த்தால், 100 – க்குத் தொண்ணூறு தமிழ் நாட்டுத் தலைவர்களைத் தேசப்பிரஷ்டம் செய்ய வேண்டியதுதான். ராமசாமி நாயக்கர் கன்னடியர். வரதராஜுலு நாயுடு தெலுங்கர். சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் ரத்தத்தில் ஆரியம் கலப்பு ( ! ) என்று சொல்லிவிடலாம். திரு. வி. கலியாண சுந்தர முதலியார் என்னமோ, தப்பித்துக் கொள்வார். இதிலும் அவருக்கு அதிருஷ்டம்தான்.

ஆனால், ஜோஸப் அவர்கள் தமிழ் நாட்டுத் தலைவர் களில் தலைசிறந்து நிற்பவர்களுள் முன்னணியில் நிற்பவர். ஜோஸப் என்ற பெயரை, சரியாக உச்சரிக்க முடியாத குறையினாலோ, அல்லது அன்பு தவழும் அருமையினாலோ, மதுரை வாசிகள் ஜோஸப் அவர்களை ரோஜாப்பூ துரையாக்கி விட்டார்கள்.

ரோஜாப்பூவில் மேலே மலரும், அடியில் முள்ளும் இருக்கின்றன என்பது நான் சொல்லித் தெரிய வேண்டிய சங்கதியா? மலர் தனது மணத்தாலும் வனப்பாலும் கண்டவர்களைக் காந்த சக்தியுடன் இழுக்கும். அலட்சிய புத்தியுடன் தொட்டால் ரோஜா தனது முட்களால் குத்தும், தைக்கும். ஜோஸப் அவர்களுக்கு ரோஜாவின் இரண்டு தன்மைகளும் உண்டு என்று கூசாமல் கூறலாம்.

ஜோஸப் அவர்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தில் செங்கனச்சேரி என்ற ஊரில், சிரிய கிருஸ்தவ வகுப்பில் பிறந்தார். இவருடைய தகப்பனார் இன்னும் உயிருடனிருக்கிறார். சென்னை மில்லர் காலேஜ் என்று சொல்லப்படும் கிருஸ்தவக் கல்லூரியில், பி.ஏ, வரையில் படித்துவிட்டு ஜோஸப் சீமைக்குப் போய், ஸ்காட்லாந்து தேசத்தில், எடின்பர்க் நகரில், எம்.ஏ, பட்டம் பெற்று, பின்னர் பாரிஸ்டர் ஆனார். சென்னை கவர்னர் நிர்வாக சபை அங்கத்தினராயிருந்த கர்டியூதுரை அவர்கள், ஸப் ஜட்ஜ் பதவி என்ற தூண்டில் முள்ளால் ஜோஸப்பை, சிலர் கோபிக்கிறார்கள். ஜோஸப் அவர்களின் நோய், மூளைக் குறைவால் ஏற்பட்டதல்ல; ஜோஸப்பின் நோய் அபரிமிதமான மூளையாகும்; அதன் கட்டுக்கடங்காத கொதிப்பாகும்.

பெஸண்டு அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கக் காலத்தில், அதில் தீவிரமாய்க் கலந்து கொண்டு, இங்கிலாந்துக்குச் சென்ற தூதர்களில் ஜோஸப் ஒருவர். அப்பொழுது ஐரோப்பிய போர்க் காலம். கப்பல் ஜிப்ரால்டர் வரையிலும் சென்றது. ஹோம் ரூல் தூதர்கள் சீமைக்கு வரலாகாது என்று இங்கிலீஸ் துரைத்தனத்தார் தடுத்துவிட்டார்கள். ‘‘மனிதன் எப்பொழுது மிருகப் பிராயம் அடைகிறான்’’ என்பது தெரியுமா என்று என்னை ஜோஸப் கேட்டு விட்டு, ஜிப்ரால்டர் நகரில் (ஸ்பெயின் தேசத்தில்) ஹோம்ரூல் தூதர்கள் யாவரும் – ஜோஸப் உள்பட – மிருகப்பிராயம் அடைந்த வினோதத்தை ஜோஸப் வர்ணிப்பதைக் கேட்டால், மயிர்க்கூச்செறியும் தோல்விக் காலத்தில் சஞ்சலமும் மிருகப் பிராயமும் மனிதனுக்குச் சாதாரணமாய் வரக்கூடியவை என்று ஜோஸப் சொல்லி முடித்தது, அட்சரம் பிசகாமல், என் நினைவில் இன்றைக்கும் இருந்து வருகிறது.

மனவருத்தத்துடன் தாய் நாட்டுக்குத் திரும்பி வந்த ஜோஸப் முதன் முதலாக, ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரை, சீரங்கம் (கொடியாலம்) ரங்கஸ்வாமி அய்யங்காரின் வீட்டில் ஏனைய நண்பர்களின் மத்தியில் சந்தித்தர். சந்தித்தது முதல், ஜோஸப்புக்குச் ‘‘சனியன்’’ பிடித்தது என்றே சொல்லலாம். அது முதல் சுமார் பதினைந்து வருஷ காலம் வரையில் ஆச்சாரியார் – ஜோஸப் நட்பு, மூக்கின் மேல் விரல் வைத்துத் திகைக்க வேண்டிய சங்கதியாயிருந்தது. ஆச்சாரியாரின் ‘‘தர்க்க’’ மூளையும், ஜோஸப்பின் ‘‘தாக்கு’’ மூளையும் ஒன்று சேர்ந்து உறவாடின.

இருவர் கலந்து யோசித்ததே, பெரும்பாலும், நமது ஹிந்துஸ்தானத்தில் காங்கிரஸ் வேலை திட்டமாய் அமையப் பெற்றது என்றும் சொல்லுவதற்கு இடமுண்டு. சீரங்கக் கூட்டத்தில், ஆச்சாரியார் சொன்னதை, மற்றவர்கள் எளிதிலே ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் ஜோஸப்போ வாக்கியத்துக்கு வாக்கியம் வாதம், சண்டை குஸ்தி போட்டார். எல்லாம் வாயால்தான். கடைசியில் சமாதானம். ஆச்சாரியாரின் தெள்ளறிவு ஜோஸப்பின் மேதையை ஒப்புக்கொண்டது. ஜோஸப்பின் கட்டுக்கடங்காத கருத்துக்கள், ஆச்சாரியாரின் தர்க்க பாதுகாப்புகளை வேண்டின. பொன் மலர் நாற்றமுடைத்தது போல. இருவரும் ஒன்று சேர்ந்து, தமிழ்நாட்டில், பிரகாசத்துடன் ஜொலித்தார்கள்.

சென்னை மாகாணத்தில் ஜஸ்டிஸ் இயக்கம் தோன்றிற்று. தமிழர்களை வகுப்புகளாகப் பிரிப்பது பாபம். தர்மமல்ல, ராஜ தந்திர மல்ல என்று அழுத்தமாய் ஆட்சேபித்தவர்கள் மூவர். திவான் பகதூர் கேசவப் பிள்ளை, வரதராஜுலு நாயுடு, ஜ்யார்ஜ் ஜோஸப். இவர்கள் மூவரிலும் ஜோஸப்பே, தமது உணர்ச்சியைத் திருத்தமாகவும் தீவிரமாகவும் காண்பித்தவர். கர்டியூ அவர்களின் தயவை எட்டத் தள்ளினார்; ஜஸ்டிஸ் கட்சியினருடன் உறவாட, ஜோஸப் சிறிதும் மனங் கொள்ளவில்லை. பாரிஸ்டர் தொழிலிலும் எதிர்பார்த்த வருமானம் வராத காலம். தகப்பனாருக்கும் இவரது அரசியல் கொள்கைகள் கொஞ்சங் கூடப் பிடிப்பதில்லை.

இந்தக் காலத்தில், ‘‘தேசமே பெரிது; விடுதலைதான் உண்மை; நாட்டாரை வகுப்புகளாகப் பிரித்து, கட்சி சேர்ப்பது தவறு’’ என்று சொல்லக் கூடிய ஆற்றல் ஜோஸப்புக்கு எங்கிருந்து வந்தது? மனிதனுக்கு அவன் சொந்த வலிமை எவ்வளவு இருந்த போதிலும், நெருக்கடியில், மனம் ஒடிந்து போவான். அந்தச் சமயத்தில் கை கொடுப்பவர்கள் கடவுளும் கற்பரசியான மனைவியும்தாம். இவர்கள் இருவருமே, ஜோஸப்புக்கு அக்காலத்தில் துணை நின்றவர்கள்.

ஜோஸப்பின் தர்ம பத்தினியாரைப் பார்க்காதவர்கள், ஜோஸப்பின் தியாகத்தின் மூலத்தை அறிய முடியாது. ஜோசப் ஏக்கமடைந்த போதெல்லாம், ஊக்கம் கொடுத்தவர் அந்த உத்தமியே. மதுரையில் வரதராஜுலுநாயுடு வழக்குக் காலத்தில், ரோஜாப்பூ துரை பங்களாவில், வந்தவர்களுக்கெல்லாம் விருந்து. இரவிலே கண் விழித்து, வழக்கைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தவர்கள் யாவருக்கும் – இரவில் இரண்டரை மணிக்குக்கூட – தமது கையால் காபி கொடுத்து, உற்சாகமளித்த அந்த உத்தமி, நாட்டுக்கு எவ்வளவு நலம் செய்தார் என்று சொல்லுவதற்கு இது காலமல்ல.

ஜோஸப்பின் தீவிரமான கொள்கைகளுக்கு – தியாகமொன்றையே வேண்டும் கொள்கைகளுக்கும் – உற்ற துணையாக, சலிக்காத மந்திரியாக, அலுப்பில்லாத தோழியாக அமைந்த ஸ்ரீமதி ஜோஸப் அவர்களை இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடாமல் இருக்க முடியாது. நாட்டு விடுதலையில் அந்த அம்மாளுக்கு இருந்த உற்சாகமே ஜோஸப்பின் உற்சாகம் என்று சொன்னாலும் பொருந்தும்.

ரௌலட் சட்ட இயக்கம். காந்தி சென்னைக்கு 1919-ஆம் அண்டு பிப்ரவரி மாதம் வந்திருக்கிறார். தமிழ் நாட்டிப் பிரயாணத்திட்டம் போட்டாகிவிட்டது. மதுரையிலே, காந்தி எங்கு தங்குவது? நிச்சயமாய் ஜோஸப் பங்களாவில்தான். ரௌலட் சட்டத்தை ஆட்சேபித்து, சிறை செல்லத் தயாராயிருப்பவர்களின் ஜாப்தா எடுக்கப்பட்டது. ஜோஸப் சிறை செல்ல, அப்பொழுது கையெழுத்துப் போடவில்லை. மதுரையில் காந்தி தங்கின அன்றையதினம், ஜோஸப்புக்கு கோர்ட்டில் அலுவல். கச்சேரியிலிருந்து பிற்பகலில் ஜோஸப் பங்களாவுக்குத் திரும்பி வந்தார். வரும் பொழுதே, ஜோஸப் காந்தியைச் சந்திக்கும்படி நேர்ந்தது.

‘‘ஜோஸப்! உமது வீட்டை வெடிகுண்டு வைத்துத் தகர்க்க எத்தனிக்கிறேன்’’ என்றார் காந்தி. ஜோசப்புக்கு விளங்கவில்லை; விஷயம் என்னவென்றால், சற்று முன்னர்தான், காந்தி, ஸ்ரீமதி ஜோசப்போடு, நீண்ட நேரம் வாதம் செய்து, சிறைக்குச் செல்லத் தயார் என்று அந்த அம்மாவினிடமிருந்து கையெழுத்து வாங்கின சமயம். ஜோஸப்பின் மனைவி கையெழுத்துப் போட்டதை, வெடிகுண்டாக வர்ணித்துக் கேலி செய்தார் காந்தி. மறுவார்த்தை பேசவில்லை ஜோஸப். உடுப்பைக்கூடக் களையாமல் (என்பது வதந்தி) ஜோசப் தாமும் சிறை செல்ல, கையெழுத்துப் போட்டார்; புருஷன் மனைவி என்றால், இப்படியல்லவா இருக்க வேண்டும்! காந்தியின் சந்திப்பு. ஜோஸப்பை அகில இந்திய மனிதனாகச் செய்துவிட்டது.

ஜோசப்பின் அன்பும் தியாகமும் எத்தன்மையது என்பதற்கு ஒரு சிறு கதை உண்டு. ஜோசப்பின் தோட்டக்காரன் ஒரு ஹரிஜனப் பையன். அவனுக்குத் தாய் தந்தை கிடையாது. ஜோசப் தம்பதிகள்தான் அவனது தாயும் தந்தையும். இவர்கள் இருவரும் சிறை செல்லப் போகிறார்கள் என்று கேள்விப்பட்டதும், அவன் காந்தியிடம் போய், அவர் காலைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு, ‘‘நானும் ஜெயிலுக்குப் போகிறேன். அம்மா, துரை இரண்டுபேரும் ஜெயிலுக்குப் போகிறது, நான் மாத்திரம் பங்களாவில் இருக்கிறதோ! முடியாது. உத்தரவு கொடுக்க வேண்டும்’’ என்று கண்ணீர் விட்டுக் கதறினான். காந்தி ஆட்சேபித்தார்; இந்த அதிசயத்தைக் கண்டு களித்தார். முடியாது என்றார். கடைசியாக, மதுரை ரயில்வே ஸ்டேஷன் வரையில் காந்தியைத் துரத்திக் கொண்டு போய், அவன் கையெழுத்துப் போட்டான், ஆனால் இடையே, அவன் இறந்து போனான். வேலைக்காரன் என்று எண்ணாமல், தாம் பெற்ற குழந்தையாகப் பாவித்த ஜோஸப் தம்பதிகளை உலகம் வாழ்த் தாமலிருக்க முடியுமா? ஜோஸப்பின் அன்பும் ஆத்திரமும் திடீரென்று பரவும் தொற்று நோயைப்போல.

பின்னர், அலகாபாத்தில் ‘இண்டிபெண்டன்ட்’ பத்திரிகையின் ஆசிரியராக அமர்ந்து நாட்டுக்கு ஜோஸப் தொண்டு செய்தது பழங்கதை. பெஸண்ட் அம்மையார் சத்தியாக்கிரக இயக்கத்தை வாய்கொண்ட மட்டிலும், தமது ‘நியூ இந்தியா’ பத்திரிகையில் திட்டினார். ஒருவராவது, அதற்குப் பதில் சொல்லத் தைரியமில்லா மலிருக்கிற சமயத்தில், பெஸண்ட் அம்மையாரின் மாஜிபக்தரான ஜோஸப் ‘‘இண்டிபென்டண்ட்’’ பத்திரிக்கையில், சரமாரியாகப் பதில் கொடுத்துவிட்டார். கொள்கை என்றவிடத்தில் ஆள் பெரிதல்ல என்பது ஜோஸப்பின் கட்சி. ‘‘அந்தக் கிழவியைக் (பெஸண்டு அம்மையாரை) கவனிக்கவேண்டாம். பதில் சொல்லாமல், நாம் காரியத்தில் கண்ணாயிருப்போம்’’ என்று காந்தி ஜோஸப்புக்கு எழுதினார். பிறகு, பெஸண்டு அம்மையாரைத் தாக்கி, ஒரு வார்த்தையேனும், ‘‘இண்டிபெண்டண்ட்’’ பத்திரிகையில் வரவில்லை. தலைவருக்குக் கீழ்ப்படியும் அருங்குணம், ஜோஸப்பினிடம் அபரிமிதமாகக் காணப்படும்.

தாம் கிருஸ்தவன் என்று சும்மாயிருக்கலாகாதா? ஏன் வைக்கம் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு, தீண்டாமையை விலக்கப் பாடுபட வேண்டும்? ஜோஸப்பின் உள்ளத்தின் துடி துடிப்பை என்ன வென்று சொல்லுவது? சதா கர்மம் செய்வதில் அவருக்குத் தியானமும், திருஷ்டியும். ‘‘சோம்பல் மிகக் கொடிது பாப்பா’’ என்ற பாரதியாரின் திருவாக்கியத்தை, ஜோஸப் அவர்கள் முற்றும் உணர்ந்தார் போலும்.

மகாத்மா சிறையிலிருந்தபொழுது, அவரது ‘‘யங் இந்தியா’’ பத்திரிகையை ஜோஸப் எவ்வளவு அழகாக நடத்தி வந்தார்! ‘‘இந்தியன் ஸோஷல் ரிபார்மர்’’ பத்திரிகையின் ஆசிரியரான கீர்த்தி வாய்ந்த நடராஜன் அவர்கள், காந்தியைப் பற்றி மதிப்புக் குறைவாக எழுதிவிட்டு, வாதத்தில் ஜோசப் அவர்களிடம் அகப்பட்டுக்கொண்டு மூச்சுத் திணறிப் போனது பழங்கதை. இந்த தேசத்தில், அழகாகவும், சொல் வலிமையுடனும் அர்த்த புஷ்டி குறையாமல், நவீனக் கருத்துக்கள் குலுங்கும்படியாகவும் இங்கிலீஷ் எழுதக் கூடிய ஒரு சிலரில் ஜோஸப் ஒருவர் என்று அப்பொழுது எல்லோருக்கும் விளங்கிற்று.

ஜோஸப் அடிக்கடி மாறும் தன்மை கொண்டவர் என்று சிலர் இப்பொழுது அசட்டையாகப் பேசுகிறார்கள். உலகத்தில் தைல் கல்லும் மதியீனனும் தான் மாறாமல், இருந்த இடத்திலேயே, அசையாமல் நிற்கும். மனிதன் எப்பொழுதும் வளர்ந்து கொண்டே போகிறான். வளரும் பொழுது, மாறுதல் தோன்றுவது இயல்பு. ஜோஸப், அனுபவத்தோடு கூடிய மேதாவி. அவர் எவ்வாறு மாறாமல் இருக்க முடியும்? மேதையை ஒட்டி அனுபவமும், அனுபவத்தை ஒட்டி அறிவும் மாறத்தான் செய்யும்.

`உலகக் கத்தோலிக்கக் கிருஸ்தவர்களுக்குக் குரு போப் ஆவார். அவருக்கு அடுத்தபடியாக, கார்டினல் என்ற பட்டம். சீமையிலே, கார்டினல் நியூமன் என்ற மேதாவி இருந்தார். அவரை சஷணப்பித்துக் கொண்டவர் என்று சிலர் தூற்றியதுண்டு. ஆனால் அவருடைய மேதையையும் உண்மை உணர்ச்சியையும் எவராலும் மறுத்துப் பேச முடியவில்லை. ஜோஸப் பார்வைக்குப் பல போர்க்களங்களிலே தோற்றவர். ஆனால் நெஞ்சம் தளராதவர். அவருடைய தேசப்பற்றுப் பித்து அவரை எளிதிலே விட்டுவிட முடியுமா? மனச் சஞ்சல மடைந்தவர்களுக்குக் கத்தோலிக்க கிருஸ்தவ மார்க்கம் ஒருவாறு அமைதி கொடுக்கும் என்பது துணிபு. எனவே, ஜோசப் அவர்கள் கத்தோலிக்க கிருஸ்தவராக மாறினதில், எனக்கு வியப்பே இல்லை. ஜோஸப் எரிமலை.

ஒருவரை மதிப்பிடுவது எளிதான காரியமல்ல. ஜோஸப் காலமாகிவிட்டார். அவர் நாட்டுக்குச் செய்த தொண்டு என்ன என்ற கேள்வியை சுளுவாக யாரும் கேட்டுவிடலாம் ஆனால், அதற்கு விடை அளிப்பது தான் கஷ்டம். ஜோஸப் தமது வாழ்க்கையில், வெற்றியைக் கண்டாரா என்றும் கேட்கலாம்.

மனிதனைப் பணத்தைக் கொண்டு மதிப்பிடுபவர்கள் அற்பர்கள். வெற்றியைக் கொண்டு மதிப்பிடுபவர்கள் சிறியோர்கள். அடிமை நாட்டில், மக்கள் இறுதியாக விடுதலை அடையுமுன், பெரியார்களை அவர்களுடைய மகத்தான முயற்சிகளையும் தோல்விகளையும் கொண்டுதான் மதிப்பிட முடியும்.

தோல்வி என்பது தோல்வியே அல்ல என்றும் அது வெற்றிக்குத் தூண் நாட்டியது போலாகும் என்றும் ஓர் ஆசிரியர் கூறுகிறார். இதில் நூற்றுக்கு நூறு உண்மை பொதிந்து கிடக்கின்றது. ஊன்றிப் பார்த்தால்தான் தெரியும்.
ஜோஸப், மகத்தான முயற்சிகளைச் செய்து பார்த்தார். ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து, அதற்கென்று வேலைத் திட்டத்தையும் லசஷியத்தையும் அமைத்துக் கொடுக்க எவ்வளவோ முயன்று பார்த்தார். ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த பதவி வேட்டைக்காரர்கள் இதற்கு இடங்கொடுக்கவில்லை. எனவே, ஜோஸப் படுதோல்வி அடைந்தார். அதனால் என்ன? முயற்சி செய்து பார்க்க வேண்டியது உண்மையாளனுடைய கடமை என்பதை ஜோஸப் விளக்கிக் காண்பித்தது போதாதா?

ஜோஸப், சிறந்த தேசாபிமானி என்பது உண்மையானால் அவர் ஏன் காங்கிரசை விட்டு விலக வேண்டும் என்ற கேள்வி பிறக்கலாம்.

இந்தியா புனருத்தாரணம் பெறவேண்டுமானால் கிளர்ச்சிக்கான வெறும் அரசியல் திட்டம் மட்டும் போதாது என்பதை காந்தி வெட்ட வெளியாக்கினார். ஜாதிக் கொடுமை மிகக்கொடிது என்பதைக் காந்தி கண்டார். அதைத் தொலைக்க வழிதேடினார். ஆனால் வைதீக மனப்பான்மை கொண்ட காங்கிரஸ் வாதிகள். ஜாதி வித்தியாசம் பாராட்டத்தான் செய்தார்கள். கருங்கல்லைப்போல மாறாத மனப்பான்மையான இந்த அசட்டுத்தனத்தைக் கண்டு ஜோஸப் மனம் புழுங்கினார். கிருஸ்தவரான இவர் ஏன் மனம் புழுங்கவேண்டும் என்று கேட்பது யோசனையில்லாத கேள்வியாகும்.

இந்தியாவில், ஜனசமூக ஒற்றுமையை நிலை நாட்டும்படியான வேலைத் திட்டத்தைப்பற்றி சிந்தனை செய்வதும் சிரத்தை கொள்ளுவதும் தேபக்தர்களின் கடமை அல்லவா? எனவே, ஹிந்து ஜனசமூக ஊழல்களில் தலையிட ஜோஸப்புக்கு உரிமை இல்லையா? இல்லையென்று மதுரையில் சில வம்புக்கார காங்கிரஸ் வாதிகள் அழுத்திப் பேசி, ஜோஸப்புக்கு மனப்புண் உண்டாக்கி, அவர் காங்கிரசிலிருந்து விலகிக்கொள்ளும் படியான நிலைமையை உண்டாக்கினார்கள். ஜோஸப் மறைந்து போய் விட்டார். அவரிடம் குற்றம் கண்டு தூற்றுவது அற்பத்தனமாகும்.

Leave A Reply