இந்தியாவின் எதிர்பார்ப்பு மையம் ஸ்டாலின் – உதயமுகம் கவர் ஸ்டோரி

Share

யாருமே எதிர்பாராத இடத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய கவுரவம் கிடைத் திருக்கிறது. இதுவரை யாருக்குமே கிடைக்காதது அந்த கவுரவம். ஏன், கலைஞருக்கே கிடைக்காதது அந்தக் கவுரவம்.

ஆம், இரண்டாம் உலகப்போரில் பாசிஸ்ட்டுகளை ஒழித்துக் கட்டிய சோவியத் அதிபர் ஸ்டாலினைப் போல, இந்தியாவை அச்சுறுத்தும் ஆர்எஸ்எஸ் பாசிசத்துக்கு முடிவுகட்ட மு.க.ஸ்டாலினை முன்மொழிந்திருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

எதிரெதிர் துருவங்களாக இருக்கும் அகில இந்தியக் கட்சிகளை ஒருங்கிணைத்து, 2024 மக்களவை தேர்தலில் பாசிச பாஜகவை வீழ்த்த ஸ்டாலினை தேர்வு செய்திருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

கேரளா மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற மாநில சுயாட்சிக் கருத்தரங்கில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்தது. கட்சியின் அகில இந்திய மாநாட்டின் ஒரு நிகழ்வாக இந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இத்தகைய கருத்தரங்கில் வேறொரு கட்சித் தலைவரை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க அழைத்ததே இதுதான் முதல்முறை. அந்த வகையிலும் ஸ்டாலினுக்கு அந்தக் கட்சி வழங்கிய கவுரவம்தான்.

தமிழ்நாட்டில் அவர் கட்டியமைத்த பாசிச எதிர்ப்பு கூட்டணியும், அந்தக் கூட்டணியை கட்டிக் காப்பாற்றும் அவருடைய அக்கறையும் அவருக்கு இந்தக் கவுரவத்தை கொடுத்திருக்கிறது.

ஆம், கூட்டணி அரசுகளை சிதறாமல் பாதுகாக்கும் கலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே சொந்தமானது.

மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் கொள்கை சார்ந்த கூட்டணியை அமைத்து, ஆட்சிக்கு வந்தாலும், வராவிட்டாலும் அந்தக் கூட்டணியை சிதறாமல் பாதுகாப்பதில் இன்றுவரை உதாரணமாக இருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

திமுகவும் இதில் சளைத்ததில்லை. தமிழ்நாட்டில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக ஒத்த கருத்துடைய கட்சிகளை இணைத்து, தொகுதிப் பங்கீடை சுமுகமாக முடித்து, முதன்முறையாக தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உருவாக்கியவர் அண்ணா. அந்தக் கூட்டணி கொள்கை சார்ந்த கூட்டணி அல்ல. ஆனால், ஒரு மோசமான அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக அமைக்கப்பட்ட கூட்டணி.

அந்தக் கூட்டணியில் இடம்பெற்ற எந்தக் கட்சியும் அரசாங்கத்தில் இடம்பெறவில்லை. அதுபோல திமுகவுடன் எந்தக் கட்சியும் தொடர்ச்சியாகவும் அணி சேர்ந்திருக்கவில்லை..

ஆனால், மக்கள் நலன்சார்ந்த கம்யூனிஸ்ட்டுகளுடன் திமுக என்றுமே முரண்பட்டதில்லை. மாறாக, கம்யூனிஸ்ட்டுகள் முன்வைக்கும் கோரிக்கைகளை திமுக அரசு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது.

2016 தேர்தலில் திமுக ஆளுங்கட்சிக்கு மூச்சுத் திணறும் வகையில் பெரிய வெற்றியை பெற்றது. ஆனால், தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் கம்யூனிஸ்ட்டுகள் இடம்பெறாத சட்டமன்றம் அமைவதை கவலையுடன் குறிப்பிட்டார் கலைஞர்.

1969ல் இந்திரா பிரதமராக ஆதரவளித்து உதவியதில் தொடங்கி, ஜெயலலிதாவால் அலைக்கழிக்கப்பட்ட வாஜ்பாய் பிரதமராக ஐந்து ஆண்டுகளை நிம்மதியாக நிறைவு செய்ய உதவியதுவரை மத்தியில் கலைஞரின் அரசியல் பங்களிப்பு சிறப்பாக இருந்தது.

அதேசமயம், பாஜக ஆட்சியை அகற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச்செயலாளர் சுர்ஜித் கலைஞரை சந்தித்தபோது, ஒப்புக்கொண்ட கலைஞர் போட்ட ஒரே நிபந்தனை, கூட்டணி அரசுக்கு காங்கிரஸை ஒப்புக்கொள்ளச் சொல்லுங்கள் என்பதுதான்.

கலைஞரின் நிபந்தனையை உடனே ஒப்புக் கொண்டார் சோனியா. அதுதான் அந்தக் கூட்டணி இருமுறை மத்தியில் ஆட்சி அமைக்க அடித்தளம் அமைத்தது. திமுக எப்போதுமே கூட்டணி தர்மத்துக்கு உண்மையாக இருக்கும். இது இந்தியாவுக்கே தெரிந்த உண்மை.

இதோ, தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் அமைத்த கூட்டணி மாடலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுள்ளது. பாசிசத்துக்கு எதிரான போரில் இந்தியாவின் எதிர்பார்ப்பு மையமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள தமிழ்நாடு மாடலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய அளவில் பின்பற்றும் என்று சீதாராம் யெச்சூரியும் கூறியிருக்கிறார்.

இதெல்லாம் மிகப்பெரிய கவுரவமாகும். மேற்குவங்கத்திலும் திரிபுராவிலும் பாசிச சக்திகளின் ஆட்டம்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இத்தகைய முடிவுக்கு காரணம் என்பதே உண்மை.
இந்த கருத்தரங்கின் உச்சகட்டம் என்னவென்றால், மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலினின் முழக்கம்தான்.

“ஆங்கிலேயர்களைக் காட்டிலும் கொடுமையாக நடக்கிறது பாஜக அரசு. இந்த அரசை தூக்கி எறிய கருத்து வேறுபாடுகளை மறந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். மத்தியில் குவிந்துள்ள அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும். மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் கொண்ட கூட்டாட்சியை உறுதிசெய்ய வேண்டும். அதற்காக இந்திய அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்Ó என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஆம், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு வீழ்த்தப்பட்டு, மத்தியில் கூட்டாட்சி மாநிலங்களில் சுயாட்சி என்ற திமுகவின் கனவு நிறைவேற்றப்படும். முதல்வர் ஸ்டாலின் இந்த சாதனையை நிகழ்த்துவார்.•

-ஆதனூர் சோழன்

Leave A Reply