திரையில் மிரட்டிய திகில் படங்கள் – 1 – சீமராஜா

Share

கிட்டத்தட்ட 120 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் சில சகோதரர்களின் பயோஸ்கோப் என்று சொல்லப்பட்ட சினிமா என்ற கலைச் சாதனம். அந்த ஆலமரத்தின் ஆயிரக்கணக்கான விழுதுகள் இன்று வெவ்வேறு பாணிகளில், கதையோட்டங்களில் டெக்னிக் பலத்தில் மொத்த மக்களையும் சொக்குப்பொடி போட்டது போல் மயங்க வைத்திருக்கிறது. இந்த மயக்கத்தில் தமிழ் சினிமாவின் காலச் சக்கரத்தைப் பின்னோக்கி ஒரு சாம்பிளாக “திரையில் மிரட்டிய திகில் படங்கள்” என்ற தலைப்பில் முன் வைத்திருக்கிறோம்.

1931ம் ஆண்டு ‘காளிதாஸ்’ படத்தின் மூலம் பேசத் தொடங்கிய தமிழ் சினிமாவில் பல மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்பட்டன. திரையில் கதை செல்வதிலும் வகை பிரித்தார்கள். ராஜாராணிக்கதை, புராணக்கதை, கர்ண பரம்பரைக் கதை, நாடகங்களாக அரங்கேறிய கதை என்று தரம் பிரித்து படங்களைத் தயாரித்தார்க்ள்.

பின்னாளில், இது குடும்பப் படம், கமர்ஷியல் படம், காமெடிப் படம், திகில் படம் என்று மேலும் காலத்தின் மாற்றத்திற்கும் புதிய ரசனைக்கும் உட்பட்டு படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள். இதில் மற்ற வகையான படங்கள் அதிகமாகத் தயாரிக்கப் பட்டன.

ஆனால் திகில் படங்கள் மட்டும் குறிப்பிட்ட அளவில்தான் தயாரிக்கப்பட்டன. காரணம் இதற்கான ரசிகர் கூட்டம் ஒரு குறிப்பிட்ட அளவில்தான் இருக்கும். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் திரும்ப வரும் ஆடியன்சும் இருக்காது. முதல் முறை பார்க்கும் போது வரும் கூட்டம்தான் இதுபோன்ற திகில் படங்களை வெற்றி பெறச் செய்யும். அதனால்தான் தமிழில் மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் திகில் படங்களின் தயாரிப்பு குறைவாக இருந்தன.

இதுபோன்ற படங்களை உருவாக்குவதற்கு அதிபுத்திசாலித்தனமும் தொழில் நுட்ப ஞானமும் நிறைந்தவர் களால்தான் முடியும். அப்படிப்பட்டவர்களே தமிழில் திகில் படங்களை உருவாக்குவதற்கு முயற்சித்தார்கள். தமிழ் சினிமாவின் ஆரம்பத்திலேயே குறிப்பாக மர்மம், சஸ்பென்ஸ் கலந்த துப்பறியும், திகில் படங்களில் முறையே ராஜாராணி படங்களிலேயே கையாளத் தொடங்கினார்கள்.

உதாரணமாக ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’, ‘மர்மயோகி’, ‘தகம்பரசாமியார்’, ‘பாலாமணி’ அல்லது ‘பாக்தாத் திருடன்’, ‘ராஜாம்பாள்’, ‘மோகனசுந்தரம்’, ‘சந்திரகாந்தா’, ‘மரகதம்’, ‘நல்லத்தீர்ப்பு’, ‘மேனகா’, ‘பார்த்திபன்கனவு’ போன்ற படங்களிலும் மர்மம், துப்பறியும் தன்மை, திகில் கலந்த படங்களாக இருந்தன.

இதற்கு முக்கியக் காரணமாக விளங்கியவர்கள் அன்றைய துப்பறியும் நாவலாசிரியர்கள் வடவூர் துரைசாமி ஐயங்கார், திகம்பரசாமியார் மேனகா, ஜே.ஆர். ரங்கராஜூ, சந்திரகாந்தா, ராஜாம்பாள், சிரஞ்சீவி, ஆரணி குப்புசாமி முதலியார் போன்றவர்கள்தான்.

‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ அருமையான மர்மப்படம். ஒருவித துப்பறியும் கதையும் கூட. மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்தது. டி..ஆர். சுந்தரம் இந்தப் படத்தை இயக்கினார்.
சிந்தாமணி கேட்கும் மூன்று கேள்விகளுக்குப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் பதில் கூற வேண்டும்.

முடியாவிட்டால் மந்திரவாதியின் வாளால் தலைகள் வெட்டப்படும். அவர்களுக்காக கதாநாயகன் தன் தோழனோடு விடைகளையும் விடைகளின் மர்மத்தையும் தேடிச் செல்வது பிரதான கதை. இந்த பிரதான கதைக்குள் இன்னொரு கதையும் உண்டு. அந்த இன்னொனரு கதைக்குள் நுழைந்தால் மற்றொரு கதை தலை நீட்டும். அதாவது கதைக்குள் கதை. மொத்தத்தில் கதைக்குள் கதையாக ஒரே பிரதான கதை!

பல உட்கதைகள் கதாநாயகனை, தன் எல்லா கதைகளோடும் தொடர்பு படுத்துகிறது. மர்மத்தைக் கண்டறிய புறப்பட்ட கதாநாயகன் பல கதைகளினிடையே இழுத்துச் செல்லப்படுவது அபூர்வ சிந்தாமணியின் கதை.

இதுபோல மர்மத்தைக் கோர்வையாக எடுத்துச் சென்று அது தானாகவே உரிய தருணத்தில் உடைந்து வெளியாகி திகிலூட்டுவதும் சிறந்த கதையோட்டம்தான். இந்த பாணியை ஜூபிடர் பிலிம்ஸ் தயாரித்த மர்மயோகி படத்தில் பிலிம்ஸ் தயாரித்த மர்மயோகி படத்தில் அருமையாக செய்திருக்கிறார்கள். இந்தப் படம் திகிலையும் சூட்சமத்தையும் வெளிப்படுத்தியது. திகில் நிரம்பிய காட்சிகளுக்காகவே மர்மயோகி படம் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற சான்றிதழ் பெற்றது. இதில் கதாநாயகனாக பட்டையைக் கிளப்பியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி,ஆர்.
அடுத்து ‘மேனகா’ படம். இதில் நடித்தவர்கள் டி.கே.எஸ் சகோதரர்கள். மேனகா படம் குறைந்த பட்ச மர்மக்காட்சி களுக்காகவும் துப்பறியும் கதைக்காகவும் ஓடியது.

எம்.என். நம்பியார் நடித்த ‘திகம்பரசாமியார்’ படமும் மிகச் சிறந்த திகில், மர்மம் மற்றும் துப்பு துலக்கும் படமாகவும் அமைந்து வெற்றி பெற்றது.

இந்த இரு படங்களின் துப்பறியும் கதையை வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதியிருந்தார். பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் படமும் மர்மம் நிறைந்த ஒரு துப்பறியும் கதைப்படம். ஜே.ஆர். ரங்கராஜூவின் கதையான ‘சந்திரகாந்தா’வும் மர்மம் நிறைந்த ஒரு துப்பறியும் கதைதான்.

உண்மையான இளவரசனை மறைத்து வைத்து போலி இளவரசனை உருவாக்கி சிற்றரசை அபகரிக்கத் திட்டமிடும் கும்பல் ஒரு பக்கம். பல்வேறு பெண்களை இரவில் வரவழைத்து காமவிழா நடத்தும் போலி பண்டாராச்சாமியார்கள் ஒரு புறம். இப்படிப்பட்ட அயோக்கியர்களை பல்வேறு மாறுவேடங்களில் வந்து துப்பறிந்து உண்மையான இளவரசனைக் கண்டறிந்து அநியாயங்களை தடுத்து நிறுத்தும் துப்பறியும் நிபுணராக ஆயிரம் முகம் ராம்குமார் என்ற நடிகர் நடித்திருந்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்தபடம் ‘மரகதம்’ அல்லது ‘கருங்குயில்’ ‘குன்றத்து கொலை’ என்ற படமும் அப்படிப்பட்ட மர்மமும, திகிலும் நிறைந்த துப்பறியும் படங்கள். கதையே இந்தியாவிற்கும், இலங்கைக்கும் தாவக் கூடியது.

ஜே.ஆர். ரங்கராஜூவின் மற்றொரு நாவல் ‘மோகனசுந்தரம்’ என்ற பெயரில் படமானது. சொத்துக்காக முதலாளி ஒருவர் கடத்தப்பட்டு ஒளித்துவைத்து சித்ரவதை செய்து அவனது பெண்ணையும் சொத்தையும் அபகரிக்க முயற்சிக்கும் மானேஜர் கொலை செய்யப்படுகிறார். இதை கண்டுபிடிக்க துப்பறியும் நிபுணர் டி,ஆர். மகாலிங்கம் முயற்சிக்கிறார். அப்பொழுது ஏற்படும் திடுக்கிடும் திருப்பம் நீடிக்கும் மர்மம், திகில் காட்சிகளாகக் காட்டப்பட்டன.

Leave A Reply