தலித் வாக்காளர்களை குறைக்க எல்லையை விட்டுக்கொடுக்கும் ஆதனூர் ஊராட்சி!

Share

பக்கத்து நாடுகளுடன் பிரச்சனையை சுமுகமா தீர்க்க மனசில்லாம எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டு, ராணுவத்துக்கு செலவு செஞ்சுக்கிட்டு இருக்கு இந்தியா.

பாகிஸ்தான்கிட்ட ஒரு மாதிரியும், சீனாகிட்ட ஒருமாதிரியும் இந்திய அரசு அணுகுது… அருணாச்சல பிரதேசத்திற்குள் சீனா ஆக்கிரமிப்பை கண்டுக்காம விடுது இந்திய அரசு… ஆனால், பாகிஸ்தான் கிட்ட வம்புச்சண்டை இழுக்குறதும், பாகிஸ்தானை காரணம் காட்டி ஜம்மு காஷ்மீரை கூறுபோடுறதுமா இந்திய அரசு ஏட்டிக்குப் போட்டியா நடந்துக்குது…

நாடுகள் இடையே இப்படி என்றால் தேசபக்தி பொங்குது. ஆனால், நாட்டுக்குள் சாதாரண கிராமங்களுக்கு இடையில் என்ன நடக்குதுனு ஒரு உதாரணம் சொல்றேன்…

எனது ஆதனூர் ஊராட்சிக்கும் பக்கத்தில் உள்ள தேவசேரி ஊராட்சிக்கும இடையில் ஒரு ஓடைப் பாலம்தான் எல்லை… அந்த ஊராட்சி மிகச் சிறியது..

ஆதனூர் ஊராட்சியில் தண்ணீர் பிரச்சனை எப்போதும் வந்தது இல்லை. அதற்கு காரணம் ஊரையொட்டிய சிறு மலைக் கரடு. இங்கிருந்து தங்கள் ஊருக்கு போர் போட்டு தண்ணீர் எடுக்க தேவசேரி மக்கள் பேச்சு நடத்தினார்கள். ஆனால், அதற்கு ஆதனூர் மக்கள் சம்மதிக்கவில்லை.

இங்கே மக்கள் என்பது இரண்டு ஊர் பெரிய மனிதர்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

அதன்பிறகு, தேவசேரி தலித் மக்கள் ஓடைப்பாலத்தை தாண்டி ஆதனூர் எல்லையில் இடம் வாங்கி வீடுகட்டி குடியேறத் தொடங்கினார்கள்…

குடியேறிய அவர்களுக்கு, ஆதனூர் ஊராட்சி நிர்வாகம் குடும்ப கார்டோ, வாக்காளர் அடையாள அட்டையோ கொடுக்கவில்லை…

இதற்கு என்ன காரணம் தெரியுமா? ஆதனூரில் தலித் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகம். அத்துடன் தேவசேரி தலித் குடும்பங்களும் சேர்ந்தால் ஊராட்சித் தலைவர் தேர்தலில் மற்ற சாதியினர் பின்தங்கி விடுவார்களாம்….

முடிவு என்னாச்சு தெரியுமா?

தேவசேரி தலித் குடும்பங்கள் தங்கள் ஊராட்சியிலேயே குடும்ப கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை வாங்கிக் கொண்டார்கள்… அவர்கள் வாங்கிய வீட்டு மனைகளில் தொகுப்பு வீடுகளுக்கும், கட்டிய வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகளும் தேவசேரி ஊராட்சியே ஏற்பாடு செய்துகொடுத்திருக்கிறது…

இதெப்படி சாத்தியம்? இன்னொரு ஊராட்சியின் எல்லைக்குள் வீடுகட்டி, அதற்குரிய வீட்டு வரியை வேறு ஊராட்சிக்கு கட்டு வது சரியா? ஊராட்சி நிர்வாகம் இதை அனுமதிக்கலாமா?

இதில் உள்ள சட்டப் பிரச்சனைகள் இருக்கட்டும். ஆனால், தங்கள் ஊராட்சி எல்லையில் குடியேறிய தலித் குடும்பங்களிடம் வீட்டு வரி வசூலிக்கவும், அவர்களுக்குரிய வசதிகளை செய்துதரவும் மறுக்கும் இந்தப் போக்கும் சரியா?

தலித் வாககாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடக் கூடாது என்பதற்காக இப்படி ஊராட்சி எல்லைக்குள் அடுத்த ஊராட்சி நிர்வாகம் ஆக்கிரமிக்க அனுமதிப்பது கொடுமை இல்லையா?

Leave A Reply