வாழ்வின் வண்ணங்கள் 35 – கை.அறிவழகன்

Share

உயிர்களுக்கு ஒரு இயல்புண்டு, தன்முனைப்பு. தன்னை முன்னிறுத்தலின் மூலமாக இருத்தலின் சிக்கல்களை எளிமையாக்கிக் கொள்தல்.

இந்த முன்னிருத்தல் உணவிலிருந்து தான் தோன்றுகிறது. அதாவது பொருள் வாழ்க்கை, பசியின் மீது கட்டப்பட்டிருக்கிற உயிர்களின் இயக்கம்.

மார்க்ஸ் இந்த இயக்கத்தின் கூறுகளை உபரி வரைக்கும் பேசி, உற்பத்தி மற்றும் உபரியை மானுடம் எப்படிப் பகிர்ந்து கொள்ளலாம் என்ற பொருள் முதல் வாத சிந்தனையை உலகின் மிக உயரிய கோட்பாடாக மாற்றினார். முரண்பட்டவர்கள் கூட அவரது வாதத்தில் இருக்கும் துல்லியமான காரணிகளையும் உளவியலையும் உடைக்க முடியாமல் தேங்கினார்கள்.

ஆனாலும், உலகின் மிக உயரிய தத்துவமாகப் பிரகடனம் செய்யப்பட்ட மார்க்சிஸம் ஏன் பெரிய வெற்றியைப் பெற இயலவில்லை? பொதுவாக எல்லோரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு இயங்கியலை அரசியலில் ஏற்றி இந்த சமூகம் கடைபிடிப்பது தானே முறை?

அது ஏன் மார்க்சிஸத்தில் நிகழவில்லை? அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிற முழுமையான கம்யூனிச ஆட்சிமுறை அரசியலைத் தவிர்த்து ஏனைய உலகம் முதலாளித்துவ அரசியலையே முன்னிலைப் படுத்துகிறது.

தனிமனிதர்களாக அறம் குறித்துப் பேசுகிறவர்கள், மானுட சம நீதி குறித்து சிந்திப்பவர்கள் கூட சமூகக் கட்டமைப்பில் நிற்கிற போது வேறொரு தொனியில் பேச நேரிடுகிறது, தான் தன்னுடைய சமுகம் என்றொரு வாதத்தைப் பின்தொடரும் அவலம் நிகழ்கிறது. இத்தகைய முரண்பாடுகளுக்குப் பின்னால் இருக்கிற மிகப்பெரிய காரணிதான் மனிதனின் தன்முனைப்பு.

தன்னையோ தன்னுடைய குழுவையோ (தான் சார்ந்திருக்கிற, சார்ந்திருப்பதாக நம்புகிற) முன்னிருத்துகிற ஒரு உளவியல் எப்போதும் மனிதர்களுக்குள் உழன்று கொண்டே இருக்கிறது.

சாதிப் பெருமிதம், சாதி ஆதிக்க உணர்வு மாதிரியான மானுட செயல்பாடுகளில் இந்த உளவியல் தீவிரமாக இயங்குகிறது. இதன் அடிப்படையும் பொருள் சார்ந்தது, நில உடைமை சார்ந்தது, ஆனால் நவீன உலகில் அந்த உள்ளடக்கம் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டு வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

சாதி ஒழிப்பு குறித்து மேடைகளில் முழங்குகிற பல மனிதர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதி தீவிரமாகப் பல்லிளிப்பதைப் பார்க்க முடியும், இது ஆதிக்க சாதியினருக்கு மட்டுமான உணர்வில்லை.

ஒடுக்கப்பட்ட சமுகங்களின் தலைவர்களாக அறியப்பட்டவர்கள் கூட உள்ளார்ந்த கூட்டங்களில் சாதியை எப்படி நாம் ஒழிப்பது, சாதியற்ற அனைவரையும் நேசிக்கிற ஒரு சமூகத்தை நாம் எப்படி உருவாக்குவது என்று பேசுவதில்லை.

மாறாக நம்முடைய சமூகத்தை எப்படி முன்னேற்றி சாதித் தரவரிசையில் முன்னேறிச் செல்வது என்று சிந்திக்கிறார்கள். சுருங்கச் சொன்னால், இந்திய சமுகக் கட்டமைப்பில் அனைவருமே எப்படி வர்ணக் கட்டமைப்பில் முதலிடத்தை (பிராமணர்களின் இடத்தை) அடைவது என்பதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சி செய்பவர்களாகவே இருப்பார்கள்.

இவற்றைத் தாண்டி மானுடத்தின் இயக்கத்தில் சாதியின் பங்கு குறித்த தீவிரமான ஆய்வுகளைச் செய்தவர் டாக்டர்.அம்பேத்கர், அவருடைய காலத்தில் இந்திய சாதி அமைப்பைக் குறித்து ஆய்வு செய்த ஐரோப்பியர்கள் (குறிப்பாக ஆங்கிலேயர்கள்) பலர் இருப்பினும் பொருள் முதல்வாதத்தோடு இணைத்து அவர் சாதிக் கட்டமைப்பை ஆய்வு செய்தார். அவர் ஒரு பொருளாதார அறிஞராகவும் இருந்தது இத்தகைய பரந்த ஆய்வுகளுக்குத் துணை செய்தது.

தன்முனைப்பு / வலியதாக முன்னிற்றல் என்கிற பொருளாதாரக் காரணி பல்வேறு படிநிலைகளில் இயங்கி ஒரு உளவியலைக் கட்டமைக்கிறது. பொருட்தேவைகளுக்காக தன்னையோ தன்னுடைய நிலத்தையோ சார்ந்திருப்பவர்கள் தனக்குக் கீழிருப்பவர்கள் என்கிற உளவியல் கட்டமைப்பு தான் சாதிப் பெருமிதத்தைக் காலப்போக்கில் நிலைநாட்ட முயற்சி செய்கிறது.

அரச அதிகாரத்தை எப்படி எதிர்கொள்வது என்கிற பிராமணர்களின் தன்முனைப்பு அவர்களுக்கு ஒரு புதிய வழிமுறையைக் கற்றுக் கொடுத்தது, மத வழிபாடு அல்லது சடங்குகளின் மூலமாக அரச அதிகாரத்தை பிராமணர்களால் அசைத்துப் பார்க்க முடிந்தது, அரசர்களைப் போல எந்த ஒரு பொறுப்பையும் ஏற்க வேண்டிய தேவை இல்லாமல் அதிகாரம், பொருள் என்கிற இரண்டு புள்ளிகளையும் வழிபாடு அல்லது சடங்குகள் மூலமாகப் பிராமணர்களால் பெற முடிந்தது.

இந்த வழிமுறைகளை ஆவணப்படுத்தி, தொடர்ச்சியாக நிலைநிறுத்திக் கொள்வதற்காக அவர்கள் அமைத்த சட்டங்களே மனுநீதியாகவும், பிராமண சடங்குகளாகவும் நிலைத்தது. ஒரு சமூகக் குழுவின் இருத்தலுக்கான தன்முனைப்பு தேசம் முழுமைக்குமான இயங்கியலாக நிலை கொண்டதில் அனைவருக்கும் பங்குண்டு, வர்ணப் படிநிலை வழங்கிய தகுதிகள் இடைநிலைச் சாதிகளைக் கவர்ந்தது, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பிறப்பினால் உண்டாகிற வாய்ப்பை அவர்கள் விரும்பினார்கள், கடைபிடித்தார்கள்.

இயல்பாகவே மனிதர்களுக்கு இருந்த சாவின் மீதான அச்சமும், வாழ்நாளை நீட்டித்துக் கொள்ள மதச்சடங்குகள் தரும் புதிய நம்பிக்கையுமே பிராமணர்களின் மதம் சார்ந்த அரசியலை ஏனைய இடைச்சாதியினர் பின்பற்றியதற்கான முதல் காரணி.

ஆனால், இந்திய சமூகத்தில் தலித்துகளின் வாழ்க்கை முறை இந்த அடுக்கில் தன்னைப் பொருத்திக் கொள்ளவியலாத ஒரு சூழலில் தான் தனித்து விடப்பட்டது என்கிறார்கள் வரலாற்று அறிஞர்கள், விடுதலை உணர்வும், கலையுணர்வும் கொண்ட இந்திய தலித்துகள் அதிகார அரசியலை நோக்கிய தன்முனைப்பை இடைக்கால இந்தியாவின் காலத்தில் வெளிப்படுத்த விரும்பாதவர்களாக அந்த அடுக்கில் சிக்கிக் கொள்ள விரும்பாதவர்களாகவே இருந்தார்கள்.

அதற்கு முந்தைய பழங்கால இந்தியாவின் நாகரீக உலகை, புதையுண்ட எல்லா நாகரீக நகரங்களின் வரலாற்றிலும் (சிந்துச் சமவெளி முதல் கீழடி வரை) ஏற்றியதில் மிக முக்கியப் பங்காற்றியவர்கள் தலித்துகள்.

பழமையான இந்தியாவின் நீர் மேலாண்மை, கட்டிடக்கலை, உலோக அச்சு மற்றும் கலைகளில் அவர்கள் ஆற்றிய பங்களிப்புகள் குறித்து தொல்லியல் ஆய்வுகள் சொல்லும் முடிவுகள் சாதிய முன்முடிவுகளை மாற்றி அமைக்கக் கூடியவை.

அத்தகைய மனநிலையில் இருந்து எந்த மாற்றத்தையும் இயல்பிலேயே விரும்பாத குழுக்களே தேங்கிப் போனவை, சேரிகளின் வாழ்க்கை முறை என்பது இன்றளவும் அரச அதிகாரத்தை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட பிராமண மதவழிபாட்டு அரசியலில் இணையாத, தனித்திருக்கிற ஒரு வாழ்க்கை முறை.

உலகளாவிய பழங்குடிகளின் வாழ்க்கை முறையோடு இணைந்த சேரிகளின் வாழ்க்கை முறை, பொது சமுகத்திலிருந்து விலகி இருப்பதன் காரணங்கள் ஆய்வு நோக்கில் வியப்புக்குரியது.

தன்முனைப்பை விடுத்த, மானுடத்தை மட்டுமின்றி உயிர்களிடத்திலும் ஒரு வகையான நீதியைக் காட்டிய அவர்களின் அரசியல், இந்தியாவின் பெரும்பான்மைச் சாதியினர் பின்பற்றுகிற அல்லது பின்பற்ற விரும்புகிற பிராமண மதவழிபாட்டு அரசியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. தொடர்ந்து பொது சமூகம் எனப்படுகிற ஏனைய சமூகங்கள் அவர்களோடு மோதுவதற்கான காரணங்களில் மிக முக்கியமானது மதவழிபாட்டு அரசியல் சொல்கிற அடுக்கு முறையை அவர்கள் ஏற்க மறுப்பது.

வாழ்வின் வண்ணங்கள் 36 – கை.அறிவழகன்

Leave A Reply