வாழ்வின் வண்ணங்கள் 12 -கை.அறிவழகன்

Share
வரலாற்று உணர்வு ஏறத்தாழ இன வாதத்தின் ஒரு சங்கிலித் தொடராகவே மனிதர்களால் முன்னெடுக்கப்படுகிறது, இனவாதமும், தேசியவாதமும் நில உடைமைச் சமூகம் மிக இறுக்கமான ஒரு கட்டமைப்பை உருவாக்கிய பிறகுதான் நாகரீகத்தின் தொகுப்பானது.
 
 
வரலாற்று உணர்வு என்பது பொதுவாகவே உலகம் முழுவதும் அதிகாரக் குவிப்பின் மையமாக விளங்கிய அரசர்களின் வழியாகவே உணர்ந்து கொள்ளும்படியாக ஆனது தற்செயலான நிகழ்வு அல்ல.
 
 
வரலாற்றின் வழியாக கிரேக்க நாகரீகத்தின் அடையாளங்களாக நாம் கண்டடைவது மேன்மையடைந்த மனித மனங்களையோ, தத்துவங்களையோ அல்ல, மாறாக நிலத்தை, நிலத்தின் மீதமர்ந்து ஆட்சி புரிந்த அதிகார மையங்களை, கட்டிடங்களைத்தான் நாம் நாகரீகத்தின் சுவடுகள் என்று குறிப்பிடுகிறோம்.
 
 
நமது கல்வி முறையில் வரலாறு என்பது கால அட்டவணைப்படி நமது நிலங்களில் இருந்த மன்னர்களின் வாழ்க்கை, அவர்கள் புரிந்த போர், அவர்கள் மணந்த பெண்கள்.
வரலாறு குறித்த ஒரு தீவிர முரணியக்கம் நீண்ட காலமாகவே எனக்குள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. வரலாறு என்பது உண்மையில் மன்னர்களும் அவர்கள் வாழ்வுமா? அவர்கள்‌ புரிந்த போரும், அடைந்த வெற்றிகளுமா?
 
 
இப்படியான ஒரு வரலாற்றுக் குறியீட்டை நாம் எங்கிருந்து பெற்றோம் என்ற கேள்வி தொடர்ந்து விரட்டி வருகிற சூழலில் இப்போது வரலாறு குறித்த விவாதம் நிகழத் துவங்கி இருக்கிறது.
பண்டைத் தமிழர்களின் வாழ்வியல், வணிகம், பொருளாதாரம், கலை மற்றும் பண்பாட்டுக் கூறுகளை நம்மால் உணர முடிவதற்கான செழுமையான இலக்கிய ஆவணங்கள் நம்மிடம் உண்டு.
 
 
புறநானூறு நிலத்தையும், அதிகார மையங்களின் வாழ்வியலையும் பேசுகிற அதே வேளையில் அகநானூறு மானுட உணர்வுகளையும் அதனூடாக நிகழ்ந்த மேன்மையுறு நாகரீகத்தையும் பேசுகிறது.
 
பண்டைத் தமிழர் வரலாற்றில் வேறுபட்ட நிலங்களில் இருந்த வழிபாட்டு முறைகள் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது, அவை முற்று முழுதாக நாட்டார் வழிபாட்டு முறைமைகளை ஒத்தவையே தவிர மத அடையாளங்கள் அல்ல.
 
நிலத்தின் வழியாக உருவாகி வளர்ந்த பொதுத் தொழிலுக்கு‌ முதன்மைக் காரணிகளாக இருந்தவற்றை உருவகப்படுத்தி கற்பனை சேர்த்து வரையப்பட்ட சித்திரங்களே பண்டைத் தமிழர்களின் கடவுளர்கள்.
 
வேட்டைச் சமூகமாக இருந்த மனிதகுலம் இன்னும் சிறந்ததாக இருந்திருக்கும் என்றொரு கருத்தியலை முன்வைக்கிற வரலாற்று ஆய்வாளர்கள் உலகெங்கும் உண்டு. ஆனால், இந்தப் பேரண்டத்திற்கு ஒரு இயல்பு உண்டு, தனக்கான ஒழுங்கை நிறுவிக் கொண்டே பயணிப்பதுதான் அது.
 
உயிரற்ற பொருண்மை உலகைத் திருத்துவது மற்றும் உயிர்களின் இருப்பை, இயக்கத்தை தகவமைப்பது என்கிற புறச்சூழல் மாற்றம் ஒருபக்கம் என்றால் உயிரியக்கத்தின் அகமனப்போக்கை, மானுட மனங்களின் கூட்டு மனசாட்சியின் ஒழுங்கைத் தீர்மானிப்பதிலும் பேரண்டத்தின் இயக்கம் முதற்காரணியாக இருக்கிறது.
 
கடந்த பத்தாண்டுகளில் தமிழர்களின் வரலாறு புரிந்து கொள்ளப்படுகிற போக்கில் ஒரு மிகப்பெரிய பிறழ்வையும், அதீத வியந்தோம்பல் நிலைகளையும் தொடர்ந்து நான் பார்க்கிறேன்.
 
அரசியல் புரிந்துணர்விலும், வரலாற்றுப் புரிந்துணர்விலும், கலை மற்றும் பண்பாட்டுத் தளங்களிலும் இத்தகைய ஒரு வியந்தோம்பல் நிகழ்வது தற்செயலானது அல்ல.
 
 
பக்தி இலக்கியங்களின் தொடர்ச்சியாக இங்கே வந்திறங்கியது மன்னர்களைக் குறித்த வியந்தோம்பல் செய்யும் புதினங்கள், குறிப்பாக சோழர்களைக் குறித்த வரலாற்றுப் புனைவுகள் மிகப்பெரிய அளவில் எழுதப்பட்டன.
 
சோழ மன்னர்களை அதிலும் குறிப்பாக ராஜராஜ சோழனையும் அவன் சார்ந்த பிற பாத்திரங்களையும் மையமாக வைத்து புனையப்பட்ட கதைகள் அவற்றையே தமிழகத்தின் வரலாறாக மாற்றும் வேலையை மிக நுட்பமான வகையில் செய்தன.
 
 
சீமான் போன்ற அரைவேக்காட்டுத் தமிழ் தேசியர்கள் அத்தகைய புனைவுகளைக் கொண்டு வியந்தோம்பி சோழர்களே தமிழர்களின் அடையாளம் என்று வசூல் வேட்டை நடத்துகிற அவலமும் வரலாற்றின் பெயரில் நடக்கிறது.
 
 
வரலாறு என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் பயணம், சோழர்களின் காலத்தில் அவர்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான தஞ்சைப் பெரிய கோவிலுக்கு பல மைல் தொலைவில் இருந்து கற்களைச் சுமந்து வந்த எளிய உழைக்கும் மனிதனின் வலியும் உள்ளடக்கம் என்று பொதுமைப்படுத்துவது அல்ல வரலாறு.
 
 
மாறாக அந்த எளிய மனிதர்கள் எந்த அதிகாரத்தின் கீழ் அப்படியான உடல் வலியை எதிர்கொண்டார்கள், எந்த அதிகாரத்தின் கீழாக பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் போரின் பெயரால் கொல்லப்பட்டன.
 
 
மன்னர்களின் போர் என்பது மக்களின் எழுச்சியா? அப்பாவி மனித உயிர்கள் அரச அதிகாரத்தின் கருவிகளாக மாற்றப்பட்டது ஏன்? போன்ற கேள்விகளுக்கான விடையும் தான் வரலாறு.
ஏன் எளிய மனிதர்களின் வாழ்வியலை வரலாறு புறக்கணிக்கிறது என்கிற கேள்வி மிக முக்கியமானது. அந்தக் கேள்விக்கான விடை எளிமையானதுதான். அதிகாரத்தின் கரங்கள் தான் உலக வரலாற்றை எழுதுகிற வல்லமை கொண்டதாக இருக்கிறது.
 
 
எளிய உழைக்கும் மனிதனுக்கு அதிகாரமில்லை ஆகவே அவனுக்கு வரலாறுமில்லை. மன்னர்களிடத்தில் அதிகாரம் குவிக்கப்பட்டிருந்த காரணத்தால் வரலாறு என்பதே அவர்களின் வாழ்க்கை என்று மாறிப்போனது.
 
நல்ல வேளையாகத் தமிழ் நிலத்தில் (இடைக்காலம் தவிர்த்து) நமது இலக்கியம் வரலாற்றை அழுத்தமாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது. வியந்தோம்பல் இல்லாத மேன்மையுறு பண்பாட்டுப் பயணத்தையும், புறச்சூழலையும் நிலத்தையும், ஆட்சி முறைமைகளையும் கூட நாம் திரும்பிப் பார்க்கக் கூடிய வாய்ப்பை நமது இலக்கியங்கள் நமக்கு வழங்கி இருக்கிறது.
இல்லையென்றால், சோழர்கள் தான் ஆடைகள் இல்லாமல் அலங்கோலமாகத் திரிந்த நம்மையெல்லாம் ஓரிடத்தில் அமர்த்தி தலை சீவி விட்டார்கள். பாண்டியர்கள் தான் சோற்றைக் கண்டுபிடித்து தமிழர்கள் உயிர் வாழ்வதை உறுதி செய்தார்கள் என்று இலக்கிய வரலாற்று அறிஞர்களும், சினிமா வரலாற்று அறிஞர்களுமாகச் சேர்ந்து வரலாற்றை ஊற்றி மூடி விடுவார்கள்.
 
வரலாறு என்பது என்னைப் பொறுத்தவரை குரலற்றவனின் வாழ்க்கை, எளிய மனிதனின் கைகளில் இருக்கிற உழைப்பின் ரேகை, எந்த வகையிலும் தன்னை முன்னிறுத்த முடியாமல் மடிந்து போன மானுடர்களின் மனம். வரலாறு என்பது பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிற கட்டிடங்கள் அல்ல, காற்றில் அலையும் அதைக் கட்டியவனின் வலி.
 
 
 

Leave A Reply