வாழ்வின் வண்ணங்கள் – 16 – கை.அறிவழகன்

Share

சில மணி நேரத்துக்கு முன்னால் காலியாகிப் போயிருக்கும் ஒரு வீட்டுக்குப் போயிருக்கிறீர்களா?

அந்த வீட்டின் மூலையில் சரிந்து படுத்திருக்கும் ஒரு உடைந்த பொம்மையைப் பார்த்திருக்கிறீர்களா? அதன் தனிமையை, அதிலிருக்கும் வெறுமையை எப்படி எதிர்கொள்வீர்கள்?

அதே பொம்மையை வைத்துக் கொண்டு சில நாட்களுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைப் பார்த்திருக்கிறீர்களா? அந்தக் குழந்தைகளின் கண்களில் மின்னும்‌ நம்பிக்கையை, அவர்களின் வாழ்க்கையை யாரேனும் பருகி உயிர் நிரப்பிக் கொண்டிருப்பீர்களா?

நான்‌ இரண்டாவது முறை‌ அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்த போது இரண்டு நாய்க்குட்டிகளைப் பார்த்தேன், பளபளப்பான கருப்பு நிறத்திலொரு குட்டியும், பழுப்பு நிறத்திலொரு குட்டியும் போகிற வருகிற மனிதர்களின் கால்களை உரசிக் கொண்டு புரியாத நேசத்தை வழங்குகிற குட்டி உயிர்கள்.

ஒரு‌ குட்டியின்‌ முதுகை வருடிவிட்டு உள்ளே நுழைந்த போது இரண்டு பெண்கள்‌ மிக மென்மையான குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள், கடைசியாக இன்னும் இரண்டொரு நாட்கள் அவர்கள் அப்படிப் பேசிக் கொண்டிருக்கலாம்.

அதற்குப் பிறகு அந்த நினைவுகள் மட்டும்தான் அங்கிருக்கும், பல ஆண்டுகளாக அங்கிருந்த எந்திரங்கள் இனி அங்கே இருக்காது. இனி‌ வேறு யாராவது அங்கு வருவார்கள். அதன் பெயர்ப்பலகை மாற்றப்பட்டிருக்கும்.

நான் அவர்களைக் கடந்து படிகளில் ஏறத்துவங்கினேன், திமுதிமுவென்று இரண்டு குழந்தைகள் படிகளில் இறங்கி ஓடினார்கள். மதில் சுவரை‌ ஒட்டியபடி படுத்திருந்த நாய்க்குட்டிகளின் கால்களைப் பிடித்து இழுத்தார்கள்.

நாய்க்குட்டிகளுக்குப் பழகி இருக்க வேண்டும். அவையிரண்டும் கலவரமில்லாமல் அவர்களை விரட்டுவதும், கடிப்பது போலப் பாவனை செய்வதுமாக அங்குமிங்குமாக ஓடியலைந்தன.

நான் முதல் தளத்தில் இருந்த கதவைத் தட்டிய போது அங்கு என்‌ மகளை விடக் கொஞ்சம் சிறிய‌ பெண்குழந்தை கதவைத் திறந்து சிரித்தாள். ஒரு மலரின் வாசம் அவளது புன்னகையில் இருந்து எங்கும் பரவியது.

நான் அவளது தலையை வருடிவிட்டு அந்த அறையைக் கடந்து பரந்து கிடந்த முதல் தளத்தின் நீள அகலத்தைக் குறித்துக் கொண்டேன். இப்போது மலரின்‌ வாசம் மறைந்து சமையல் எரிவாயுவின் மணத்தை உணர முடிந்தது.

கூடுதலான மணம், மெல்ல மறுபடி அந்த அறைக்குள் நுழைந்து இடது மூலையில் இருந்த கேஸ் சிலிண்டரைப் பார்த்தேன். சமையல் ஏதும் நடப்பதைப் போலில்லை, ஆனால் அடுப்பு சரியாக மூடப்படாமல் கசிந்து கொண்டிருப்பதை உணர்ந்து உடனடியாகப் பாதி திறந்திருந்த அடுப்பின்‌ முடுக்கியை‌ அணைத்து விட்டு ரெகுலேட்டரைக் கழற்றினேன்.

“அடுப்பு சரியாக மூடாமல் கேஸ் கசிவது உனக்குத் தெரியவில்லையா?” என்று கேட்டேன், குழந்தை மறுபடி சிரித்தாள். வலது பக்கத்தில் கட்டில் மாதிரியான ஒன்றில் குழந்தைகளின் தந்தை உறங்கிக் கொண்டிருந்தான்.

எனது வேலைகளை முடித்துக் கொண்டு அடுத்த அரைமணியில் நான் மீண்டும் அந்த அறைக்குள் நுழைந்து வெறியேறுகையில் “அங்கிள், நான் இப்போது சமையல் செய்ய வேண்டும். அப்பா, எழுந்தவுடன் சாப்பிட வேண்டும். ரெகுலேட்டரை மாட்டித் தருகிறீர்களா? அதே புன்னகையோடு கேட்டாள்.

“கவனமாக அடுப்பை அணைப்பாயா?” என்று கேட்டுவிட்டு இணைப்பை மறுபடி கொடுத்து விட்டுப் படிகளில் இறங்குவதற்கு முன்பாக திரும்பி ஒருமுறை கலக்கத்தோடு பார்த்தேன், “தேங்க்ஸ் அங்க்கிள், பை” என்று கையசைத்தாள் குழந்தை.

மறுபடி மலரின் மணம் எங்கும் பரவியது. நான் கீழே இறங்கியபோது நாய்க்குட்டிகளோடு அந்த இரண்டு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த நாள் முழுவதும்‌ “குழந்தை பாதுகாப்பாக சமைத்திருப்பாளா?” என்ற கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது.

ஆறாவது முறை அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்த போது தரைத்தளத்தில் அமர்ந்திருந்த பெண்களின் பணியிடம் காலியாக இருந்தது. அவர்களின்‌ பழைய சொற்கள்‌ பிரிக்கப்பட்டிருந்த கூரைகளில் மோதி சிதறிக் கிடந்த பொருட்களின் மீது இன்னும் ஒடுங்கிக் கிடப்பதைப் போலிருந்தது.

கட்டிடத்தை உடைத்து சீர் செய்வதற்காக சில இளைஞர்கள் அங்கே வந்திருந்தார்கள். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அவர்களில் ஒரு இளைஞன் என்னிடம் வந்து “மேலே இருக்கிற குடும்பத்தை உடனடியாகக் காலி செய்தால் தான் நாங்கள் வேலை செய்ய‌ முடியும்” என்றான். நான் தலையை அசைத்து விட்டு நகர்ந்தேன்.

நான்காவது முறை‌ நான் அந்தக் கட்டிடத்திற்குள்‌ நுழைந்து கால்வாசி திறந்திருந்த கதவைத் திறந்த போது குழந்தைகள் இல்லை. கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். அதிர்ந்து எழுந்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டுத் திரும்பினேன்.

வழக்கமாக ஆணும்,பெண்ணும் செய்கிற ஊடல் தான் பிறகு அது, அதிர்ந்து போவதற்கு ஏதுமில்லை. ஆனால் ஒரு குற்ற உணர்வு‌ மட்டுமிருந்தது. நான் அவர்களது ஒரு மகிழ்ச்சியான பொழுதைக் கலைத்து விட்டேன். பிறகு அந்த நாள்‌ முழுவதும் “அவர்கள் மறுபடி கூடியிருக்க மாட்டார்களா?” என்றொரு கேள்வி என் பின்னால் வந்து கொண்டே இருந்தது.

தொலைதூரத்தில் இருந்து பிழைத்துக் கிடப்பதற்காக இந்த நகரத்துக்கு வந்திருக்கிற குடும்பம், நெடுநாட்களாக அந்த அறைதான் அவர்களின்‌ வீடு, வேலை செய்கிற இடத்திலேயே வீடும் கொடுத்திருக்கிற முதலாளியின் மனம் பெரியது தானே?

ஏழாவது முறை‌ அந்தக் கட்டிடத்திற்கு நேற்று‌ முற்பகலில் போனபோது குழந்தைகள் வந்து கதவைத் திறந்து சிரித்தார்கள், இதுதான் கடைசியாக அவர்களால் திறக்கப்படும் அந்த வீட்டின் கதவாக இருக்க வேண்டும்.

வீடு அப்படியே இருந்தது. இடது மூலையில் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. வலது மூலையில் அந்த இளைஞன் உறங்கிக் கொண்டிருந்தான். அவனை ஒட்டியபடி மனைவியும் குழந்தைகளும் அமர்ந்திருந்தார்கள்.

குழந்தைகளுக்குப் பக்கத்தில் உடைந்த பொம்மையொன்றிருந்தது. சரிந்து படுத்திருந்த பொம்மையின் கண்களில் மகிழ்ச்சி இருந்தது. பெண்குழந்தை என்னைப் பார்த்து அதே புன்னகையைக் கொடுத்தாள். மலர் வாசம் பெருகி வழிந்தது. வேலை செய்கிற இளைஞர்கள் எதையோ உடைத்துக் கொண்டிருந்தார்கள்.

எட்டாவது முறையாக நான் மாலையில் மறுபடி அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்த போது வேலை செய்கிற இளைஞர்களில் ஒருவன் உடலெங்கும் நுரையோடு குளித்துக் கொண்டிருந்தான், நான் படிகளில் ஏறத்துவங்கியபோது ஒருமுறை‌ திரும்பிக் கீழே பார்த்தேன். நாய்க்குட்டிகள் வாலை ஆட்டியபடி அம்மாவிடம் பால் குடித்துக் கொண்டிருந்தன. குழந்தைகளைக் காணவில்லை, அவர்கள் வரமாட்டார்கள்.

மேலே ஏறி நின்று முற்றிலுமாகப் பிரிக்கப்பட்டிருந்த கூரையைப்‌ பார்த்தேன், முதல்முறை‌ வந்தபோது அமர்ந்து பேசிக்கொண்டிருந்த‌ பெண்களின் சொற்கள்‌ பரந்த வெளியின்‌ வழியாக‌ வெளியேறி‌ இருந்தன.

அந்த அறையைக் கடந்து வந்த‌ போது அனிச்சையாகத் திரும்பி அடுப்பு வைக்கப்பட்டிருந்த இடத்தைப் பார்த்தேன். புன்னகையும் மலரின்‌ வாசமும்‌ இல்லாமல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புதிய இரும்புக் கூரையின்‌ வாசம் அங்கு அடைந்திருந்தது, அவர்கள் அவசர அவசரமாக வேறொரு‌ புதிய கட்டிடத்தில் தங்கள் வீட்டை உருவாக்கி இருப்பார்கள்.

எங்கும் சிதறிக் கிடந்த குப்பைகளும், உடைந்த மரத்துண்டுகளும், அட்டைகளும் புரியாத ஒரு துயரின் கிளைகளை எனது மனவெளியில் பரப்பிய கணத்தில் நின்று வலது மூலையைக் கவனித்தேன். சரிந்து படுத்திருந்த அந்த உடைந்த பொம்மை அங்கேயே விடப்பட்டிருந்தது.

அதன் கண்கள்‌ என்னை‌ வெறித்துப் பார்ப்பது போலிருந்தது. அதன் கண்களில் இப்போது மகிழ்ச்சி இல்லை. அவர்கள் அந்த பொம்மையைத் தங்கள் புதிய வீட்டுக்கு எடுத்துப் போயிருக்கலாம்.

வீடுகளைக் குறித்த சித்திரங்கள் உலகெங்கும் பரவிக் கிடக்கிறது, வீடுகளைக் குறித்த நம்பிக்கைகளும், விழுமியங்களும் மனிதர்களின் இயல்பைப் பொறுத்து மாறிக்கொண்டே இருக்கிறது.

உங்களிடம்‌ இருக்கும் செல்வம் உங்கள் வீட்டை உருவாக்குகிறது, ஒரு பிரபுவுக்கு 100 ஆண்டுகள் பழமையான‌ வீடு, ஒரு இளவரசிக்கு 1000 ஆண்டுகள் பழமையான அரண்மனை, ஒரு பிழைப்புக்காக இடம்பெயர்ந்து போன தொழிலாளிக்கு ஒரே‌ இரவில் மாறிப் போகிற ஏதாவதொரு கட்டிடத்தின் இடது அல்லது வலது மூலையிலிருக்கிற பயன்படுத்தப்படாத அறை.

ஆனால், ஒரு அரண்மனை‌ இளவரசிகளின் புன்னகையில்‌ இருந்தும், உடைந்து சிதிலமான கட்டிடத்தின் மூலையில் வசிக்கிற இளவரசியின்‌ புன்னகையில் இருந்தும் வெளியில் பரவும் மலர்களின் வாசம் ஒன்றாகத்தான் இருக்கிறது.

சில மணி நேரத்துக்கு முன்னால் காலியாகிப் போயிருக்கும் ஒரு வீட்டுக்குப் போயிருக்கிறீர்களா? அந்த வீட்டின் மூலையில் சரிந்து படுத்திருக்கும் ஒரு உடைந்த பொம்மையைப் பார்த்திருக்கிறீர்களா? அதன் தனிமையை, அதிலிருக்கும் வெறுமையை எப்படி எதிர்கொள்வீர்கள்?

வாழ்வின் வண்ணங்கள் – 17 – கை.அறிவழகன்

Leave A Reply