வாழ்வின் வண்ணங்கள் – 27 – கை.அறிவழகன்

Share

பறவைகளைக் கூர்ந்து நோக்குதல் (Bird Watching) என்றொரு பழக்கமும் பதமும் மேற்கத்திய நாடுகளில் உண்டு.

இறுக்கமான மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் சிக்கிக் கொண்டவர்கள் உடலையும் மனதையும் தளர்த்திக் கொள்ள பறவைகளைப் பின்தொடர்தல் அல்லது கூர்ந்து நோக்குதலை மேற்கொள்கிறார்கள்.

பறவைகளின் இயக்கம், இயற்கையோடு இசைந்த அவற்றின் கேவல்கள், பறத்தல் இவையெல்லாம் மனித மனதை சமநிலைப்படுத்த உதவுகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள், அது உண்மையும்‌ கூட.

இந்தியாவிலும் கூட மேற்கத்திய கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடிய பெரும்பணக்காரர்களும், பறவைகளைக் குறித்து ஆய்வுகள் செய்வோரும், உயிரியலில் மேற்கல்வி கற்பவர்களும், நிழற்படக்காரர்களுமாக மிகக்குறைந்த அளவிலான மனிதர்கள் பறவைகளைப் பின்தொடர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நான் ஒரு விஷயத்தை கவனித்திருக்கிறேன். இந்திய விவசாயிகளும், ஊரகப் பகுதியில் வசிக்கிற குடும்பத்தினரும் இதே பறவைகளைக் கூர்ந்து நோக்குதலை இயல்பாக ஒரு வாழ்க்கை முறையாக செய்வார்கள்.

சமைத்துக் கொண்டிருக்கிற ஒரு பெண்ணின் முதுகில் தனது அலகால் கொத்திக் கொத்தி உணவு கேட்கிற காகங்கள், குடிசை வீடுகளின் திறந்த முற்றங்களில் அமர்ந்து தானியங்களைக் கைகளில் வாங்கி சாப்பிடுகிற குருவிகள், விவசாயிகளின் மாடுகளின் முதுகில் பயணித்து வயலுக்கு வருகிற நாரைகள் என்று சில வழக்கமான காட்சிகளைப் பார்த்திருக்கிறேன்.

பிற உயிர்களோடு இணக்கமாக இருக்கிற மனிதர்களைப் பார்க்கிற போது தனித்து ஒரு மெனக்கெடலோடு செய்யப்படும் மேற்கத்திய Bird Watching நிகழ்வுக்கும் நமது பண்பாட்டில் கலந்திருக்கும் இயல்பான சக உயிர்களுக்கான இடத்திற்கும் இடைப்பட்ட வேறுபாட்டை உணர‌ முடியும்.

மனிதர்களைக் கூர்ந்து நோக்குதல் என்கிற நிலையை நீங்கள் கடந்து வரும்போதுதான் இந்தப் பறவையைப் பின்தொடர்தல் போன்ற நிகழ்வுகளுக்கு ஒரு பொருள் இருக்கும். சொந்த வீட்டில் இருக்கிற மனிதர்களையே கூர்ந்து கவனித்துப் பின்தொடர இயலாதவர்களால் பறவைகளைப் பின்தொடர்தல் போன்ற இயக்கங்களுக்கு இயல்பாகப் போய் விட இயலாது.

விவரம் தெரிந்த நாட்களில் இருந்தே நான் மனிதர்களைக் கூர்ந்து நோக்குகிற பழக்கமுடையவனாகவே இருந்திருக்கிறேன். மேலோட்டமாக மனிதர்களின் புறவாழ்வையும், இயக்கங்களையும் வைத்து அவர்களை மதிப்பீடு செய்வதில்லை.

கடந்த மார்ச் மாதத்தில் ஒரு நாள் கொல்கொத்தாவில் இறங்கி விடுதியை நோக்கிப் போகிற வழியில் என்னை அழைத்துக் கொண்டு போன ஒரு இளைஞன் விடுதியை நெருங்கும் போது மென்மையான குரலில் “சார், வேறு ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டான்.

“இல்லை தம்பி, வேறொன்றும் வேண்டாம்” என்றேன். மீண்டும் ஒருமுறை அதே கேள்வியைக் கேட்டான். எனக்கு உண்மையிலேயே எதுவும் புரியாமல் மலங்க விழித்தபடி “ஒரு தண்ணீர் பாட்டில் மட்டும் வாங்கிக் கொடு தம்பி” என்றேன், அருகில் வந்தவன் தலையைத் தாழ்த்தி “நல்ல நல்ல பெண்கள் எல்லாம் இங்கே உண்டு, விலையும் குறைவுதான்” என்றான்.

பதட்டமாகி எங்காவது சிக்கலான விடுதியில் கொண்டு விட்டு விடுவானோ என்ற அச்சத்தோடு அடுத்த 15 நிமிடங்கள் அவனோடு பயணித்தேன்.அமைதியாக வந்தவன் என்ன நினைத்தானோ, “என்ன சார் பழக்கமில்லையா?” என்று கேட்டான்.

“தம்பி, திடீரென்று ஒரு அறிமுகமில்லாத பெண்ணுடனோ ஆணுடனோ உடலைப் பகிர்ந்து கொள்வது எனக்கு சாத்தியப்படாத விஷயம், அப்படியான உடல் இச்சை ஏதும் எனக்கில்லை” என்றேன்.

அவனுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன், ஆழமாக என்னை ஒரு முறை பார்த்தான், “ஒனக்கென்னப்பா நீ பைத்தியம், என்னவேண்ணாலும் பேசலாம்” என்பது போலிருந்தது அந்தப் பார்வை.

விடுதிக்கு வந்து நீண்ட நேரம் அதுகுறித்து யோசித்தபடி இருந்தேன், மானுட வரலாற்றில் புணர்ச்சி என்பது மிக இயல்பானதாக மூர்க்கத்தனமான ஒன்றாக இருந்தது, இன்றைய சமூக அமைப்பில் இருக்கும் கட்டுப்பாடுகள் இல்லாத உறவுமுறைகளைக் குறித்த எந்த வரைமுறைகளும், நம்பிக்கைகளுமற்ற நிலையில் இருந்து மானுடத்தை நாகரீகத்துக்கு வழிநடத்தியது காதல்.

மென்மையான நெஞ்சம் நிறைந்த அன்போடு தனது இணையைக் கூர்ந்து நோக்குதல் அல்லது பின்தொடர்தல் தானே காதல். காதல் மெல்ல மெல்லப் பரவத் துவங்கிய பின்புதான் குடும்ப அமைப்பு உருவாகி வலுப்பெறத் துவங்கியது, குடும்ப அமைப்பின் பரவல் தான் இன்றைய நவீன மானுடத்தின் அகவுலகைக் கட்டமைத்த, ஒழுக்கக் கோட்பாடுகளை வடிவமைத்த மிகப்பெரிய காரணி.

பின்தொடர்ந்து, கூர்ந்து நோக்கி ஆழமாக உள்ளிறங்கி மனதைக் கொள்ளை கொண்ட பிறகு நிகழ்கிற உடலிணைப்பில் தான் எத்தனை மகத்தான மானுடப் பயணம் இருக்கிறது, நிறைவும், பூரிப்பும் இருக்கிறது. அதுதானே இல்லற வாழ்வின் பொருள்.

பிறகெப்படி போகிற போக்கில் ஏதோ ஒரு அவசரத் தேவைக்காக வாங்கி நுகர்கிற தண்ணீர்ப் போத்தலைப் போல பிறிதொரு உடலை நுகர முடிகிறது, அணுக‌ முடிகிறது என்ற கேள்வியோடு, சாத்தியப்படாத ஒரு மிகப்பெரிய சவாலாக அது இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

கற்பு என்றொரு பதத்தை அந்த நாளில் என்னால் உணர முடிந்தது, கற்பென்பது பால் வேறுபாடுகள் ஏதுமில்லாதது, குற்ற உணர்வு ஏற்படுத்தாத நம்முடைய காதலை மதித்துப் போற்றுகிற பேரன்பு தான் கற்பு. சில கணங்களேனும் மதிகெட்டு மனம் சிந்திக்குமேயானால் அது சலனமடைந்த உடைந்த கண்ணாடி தான்.

அத்தகைய மகத்தான மனம் வாய்க்கும் போது நாம் அன்பும், அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைக்குள் நுழைவதற்குத் தகுதியுடை நெஞ்சாகிறோம்.

நேற்று நண்பகலில் அலுவலகத்துக்குப் பக்கத்தில் மணல் சுமந்து பூச்சு வேலை செய்கிற ஒரு மனிதரைப் பார்த்தேன், மழையில் நனைந்தபடி வேலை செய்து கொண்டிருந்த அவரது கண்களைப் பார்த்துப் புன்னகைத்தேன்.

ஆழமாக சிரித்த அந்த மனிதரின் புறத்தோற்றத்தைத் தாண்டி அவருடைய 50 ஆண்டு கால வாழ்க்கை அந்தக் கண்களில் தெரிந்தது. திரும்பி வரும்போது அவரிடம் “எந்த ஊரண்ணே? என்றேன்.

திருநெல்வேலிக்குப் பக்கத்தில் என்றவர் “சார் உங்க பேர் என்ன?” என்றார், பேரைச் சொன்னேன், சிரித்தவர் “என்னோடு கல்லூரியில் படித்த நண்பன் ஒருவனுக்கு உங்கள் பெயர்தான் சார்” என்று உற்சாகமாகப் பேசினார்.

நான் அவரைப் பின்தொடர்ந்து பயணிக்கத் துவங்கினேன், கல்லூரியில் பயின்றவர், நல்ல தமிழில் பேசுகிற பயிற்சி, ஆனால் வாழ்வு அவரை வதைத்துப் பார்க்கிறது, எங்கோ தொலைவில் இருக்கிற மனைவியை பிள்ளைகளைப் பாதுகாக்க மாநகரத்தின் தெருக்களில் மணல் அள்ளுகிறார். அவரது வாழ்க்கை கடல் போல் கண்களில் தேங்கிக் கிடக்கிறது.

இப்போது சிமெண்ட் வழிந்து கொண்டிருந்த அவரது தோளைத் தொட்டு “சரிண்ணே, பாருங்க, வரேன்” என்று விடைபெறுகிறேன். அந்தத் தொடுதலில் ஒரு நிறைவிருக்கிறது. சிமெண்ட் வழியும் அந்த உடலுக்குள்ளே 50 கால அவரது வாழ்வின் பொதிகள் நிறைந்திருக்கும், அந்த உட்பொருள் தான் அந்த மனிதர், அந்த அகப்பொருள் தான் அந்த மனிதர். புறத்தே நான் காண்கிற உடல் மட்டுமல்ல அந்த மனிதர்.

ஒவ்வொரு சக மனிதரும், சக உயிரும் அப்படித்தான் அறிந்து கொள்ளப்பட வேண்டும், ஒவ்வொரு சக உயிரையும் நாம் அப்படித்தான் அணுக வேண்டும். அதுதான் மானுடத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்கிற மகத்தான தொடுதல்.

அது பறவையாகட்டும், மனிதர்களாகட்டும், நீங்கள் பின்தொடர்ந்து போகத் துவங்கி விட்டால் போதும், தொடுதல் சாத்தியமாகி வாழ்வு இன்னும் எளிதானதாகிவிடும். மானுடம் பேரண்டத்தின் நோக்கத்தை விரைந்து கண்டடையும்.

Leave A Reply