வாழ்வின் வண்ணங்கள் – 7 – கை.அறிவழகன்

Share

கதவுச் செவ்வகம், இரட்டைக் குழல் இசை….

 

கருநீல இரவுக்குள் ஊடுருவிப் படரும் நிலவின் விழுதுகளை, எதன் மீதும் பிடி இன்றிப் பொன்னீலப் பசுமை நிறத்தைக் கசிந்தபடி தகிக்கும் நட்சத்திரங்களை வீட்டுக் கதவின் செவ்வக இடைவெளியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன், தொலைக்காட்சியில் குழந்தை “நார்னியா” திரைப்படத்தைப் பாதியில் விட்டு விட்டுப் படுக்கப் போய் விட்டாள்.

பக்கத்தில் பீட்டர் மேத்தீசன் பனிப் பல்லியை (The Snow Leopard) இமயமலையில் தேடிக்கொண்டிருக்கும் நூற்றாண்டு கால ரகசியங்களோடு காற்றில் படபடக்கிறது, படிக்கவோ, எழுதவோ மனமில்லை, நட்சத்திரங்களுக்கும், மனித மனதுக்கும் எது இடைவெளியாக இருக்கிறது, திறந்திருக்கிற கதவுச் செவ்வகம் தான் நம்மை அதனோடு இப்போதைக்கு இணைக்கிறதா?

உலக இலக்கியங்களில் படைக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்கள் எல்லாவற்றையும் விட வியப்பும், வண்ணங்களும் நிரம்பியவை நட்சத்திரங்கள், தங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ரகசியங்களை அவை மனிதர்களோடு பகிர்ந்து விரும்புகின்றன, பேரண்ட வெளியின் பாடல்களை அவை தங்கள் மினுமினுப்பில் இசைத்துக் கொண்டே இருக்கின்றன.

தொடர்ந்து அவற்றின் அசைவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிற மனிதனால் பேரண்டத்தின் மொழியை அறிந்து கொள்ள முடியும். அவற்றின் மீது நிலைத்திருக்கும் பெருமலைகளின் உயரத்தையும், அளக்க முடியாத பள்ளத்தாக்குகளின் ஆழத்தையும் வேடிக்கை காட்டப்படும் குழந்தைகளுக்குக் காட்ட விரும்புகின்றன, புவிப்பந்தில் விதைக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு மனித உயிர்களைப் போலவும் அவை தங்களுக்குள் இருக்கும் கதைகளை இறப்பதற்குள் யாரிடமேனும் சொல்லிவிட வேண்டுமெனத் தவிக்கின்றன.

இன்னொருபுறம் நார்னியாவின் குட்டிப் பெண் அலமாரியில் இருந்து குதித்து வேறொரு உலகத்தில் நுழைகிறாள், ஆடுகளைப் போலக் கால்களும், காதுகளும் கொண்ட ஒரு வினோத உயிரைச் சந்திக்கிறாள், தன்னோடு தேநீர் அருந்த வேண்டுமென்று அந்தக் குட்டிப் பெண்ணை அழைத்துப் போகிறான் அந்த மனிதன், வழக்கமாகத் தான் எல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது, அந்தக் கணம் வரும் வரையில்……..

தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் போதே அந்த வினோத உலகத்தின் ஆட்டுக்கால் மனிதன், குட்டிப் பெண்ணிடம் “நீ இந்த இசையைக் கண்டிப்பாகக் கேட்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு ஒரு இரட்டைக் குழல் கொண்ட இசைக்கருவியை இசைக்கிறான்.

இசை மழை போல் கரையற்ற பெருங்கடலாய்ப் பரவிக் கிடக்கும் கருநீல இரவுக்குள் தனது சீவல்களைத் தெளிக்கிறது, மனம் என்கிற மாய எந்திரம் இரவுப் பெருங்கடலுக்குள் விழுந்து அமைதியாய் மிதக்கிற ஒரு தக்கையைப் போல சலனமற்று இசையின் கூர் நுனிகளை உரசியும், நுகர்ந்தும், தத்தளித்தும், ஆர்ப்பரித்தும் இருப்பின் தீர்க்க முடியாத வாதைகளின் மீது விழுந்து ஆற்றுப்படுத்தும் ஒரு வெதுவெதுப்பான அருவியைப் போல ஆழ்மனதில் வீழ்ந்து கொண்டிருக்கிறது.

செவ்விந்தியர்களின் குழலில் இருந்து புறப்படும் உன்னதமான இசை அது, செவ்விந்தியர்களின் தொன்ம இசையைப் பல முறை கேட்டிருக்கிறேன், அது உயிருக்குள் கிடக்கும் குழந்தையை பிசிறுகள் நீக்கி அணைத்து எடுத்துக் கொண்டு போய் ஒரு நதிக்கரையின் ஒய்யார மர நிழலில் கிடக்கும் கயிற்றுக் கட்டிலில் கிடத்தித் தாலாட்டும் அற்புதம்.

நார்னியாவின் குழலிசையோ மனதை என்னென்னவோ செய்கிறது, கடந்து போன ஒரு மாலைப்பொழுதின் ஒற்றைக் குயிலோசையை, அதன் குரலில் படிந்து கிடக்கும் பிரிவின் துயரத்தை அப்படியே மீட்டுக் கொண்டு வந்து சேர்க்கிறது, எப்போதோ காதல் வயப்பட்ட கணமொன்றில் சுவாசத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவிய பன்னீர்ப் பூக்களின் இதழ்களை உயிரின் சாளரங்களில் உரசிச் செல்கிறது, திரும்பத் திரும்ப நார்னியாவின் இரட்டைக் குழல் இசையை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

கதவுச் செவ்வகத்தின் வழியே காற்று மேலேறி உடலின் இருப்பைக் குறித்து உணர்த்திக் கொண்டே இருக்கிறது, தொலைவில் நட்சத்திரங்கள் இசை கேட்க விரும்புவதைப் போல கண் சிமிட்டிக் கொண்டே இருக்கின்றன, மனித உயிரின் இருப்பு அறியப்பட்ட இடங்களில் எல்லாம் இசை காற்றைப் போலப் பரவி இருக்கிறது, செவ்விந்தியனின் யாருமற்ற காடுகளும் சரி, ஹிட்லரின் பூட்டப்பட்ட அறைகளும் சரி, போர்க்களங்களின் கடைசி இரவுகளும் சரி, பிறப்பின் முதல் இரவுகளும் சரி, இசை எப்படியாவது எந்த வடிவிலாவது நுழைந்து விடுகிறது.

மனித வாழ்க்கையில் சொற்கள் எப்போதெல்லாம் தோற்றுப் போகிறதோ அப்போதெல்லாம் இசை பேசத் துவங்குகிறது, அப்போது அந்தக் கணத்தில் நான் என்கிற திடப் பொதி பெருவெளியில் உயிருக்குள் அடைக்கப்பட்ட மிதவையாய் காற்றுடன் முட்டி மோதிக் கொண்டிருக்கிறது, நார்னியாவின் இரட்டைக் குழல் இசையோ ஏதுமற்ற திடப் பொதிக்குள் முழுப் பேரண்டத்தின் உயிர்ப்பையும், பொருளையும் காற்றின் வழியே எனக்குள் செலுத்துகிறது. இசையை விழுங்கி விழுங்கி, காற்றுக் குடித்த உருளைப் பாம்பைப் போல உயிர்த்து மீண்டும் நகரத் துவங்குகிறேன்.

நார்னியாவின் இரட்டைக் குழல் இசையைப் பற்றியபடி ஒரு தொலைதூர நட்சத்திரத்தின் தெருக்களில், அதன் மலைச்சாரல்களில், அதன் வெள்ளைப் பெருங்கடலில் மிதக்கிற பாய்மரக் கப்பல்களில் உங்களால் பயணிக்க முடியும். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ரோமானிய இசையின் மீதேறி அழிந்த அதன் பின்சியன் குன்றுகளில் எப்போதோ பூத்துக் கிடந்த மலர்களை நுகர முடியும், செவ்விந்தியர்களின் குழலிசை மீதேறி நூற்றாண்டுகளுக்கு முன்பு அழிக்கப்படாமல் இருந்த அவர்களின் போர்டாக் குதிரைகளின் பிடரி மயிரைக் கோதியபடி பள்ளத்தாக்குகளில் பயணிக்க முடியும்.

இரை தேடும் உயிர் ஒருபுறம் கரைந்து கொண்டே இருக்க, இசை தேடும் உயிரோ இன்னொருபுறம் வளர்ந்து செழித்து மரணத்தின் குரல்வளையை இறுக்கிப் பற்றி உலுக்குகிறது. உயிர்ப்பறவை பறக்கத் தோன்றாமல் சோர்வடைந்து நிலத்தை நோக்கி வீழும் போதெல்லாம் நார்னியாவின் இரட்டைக் குழல் இசை மாதிரியான ஏதாவது ஒரு இசை வாழ்க்கையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு விடுகிறது.

 

Leave A Reply