வாழ்வின் வண்ணங்கள் – 9 – கை.அறிவழகன்

Share

சைக்கிள்

முதன்முதலாக ஒரு புத்தம்புதிய சைக்கிளை பள்ளிக்கு ஓட்டிச் செல்வது என்பது வாழ்வின் மகத்தான அனுபவமாக இருந்தது, பளபளக்கும் சிவப்பு நிறத்தில் அந்த சைக்கிளை வீட்டு வேப்பமரத்தின் முன்பாக, அப்பா நிறுத்திய போது உண்டான உணர்வுகளை இப்போதும் என்னால் நினைத்துப் பார்க்க முடியும்.
கொண்டாட்டமும், பெருமிதமுமாய் தவித்தபடி நான் அங்குமிங்குமாய் ஒரு பூனைக்குட்டியைப் போல அலைந்து கொண்டிருந்தேன், அப்பா, சைக்கிளை நான் ஓட்டிச் செல்வதற்கான பாதுகாப்பு விதிகளை நீண்ட நேரமாக அன்றைய இரவில் பிரசங்கம் செய்துவிட்டுப் படுக்கப்போனார்.
நான் முன்னிரவில் ஒருமுறை சைக்கிளின் மீதேறி அமர்ந்து பார்த்தேன், அன்றைய இரவு வெகு விரைவாக விடிந்து விட்டது.
சைக்கிளுடனான எனது பிணைப்பு குறித்து நான் திரும்பிப் பார்த்துக் கொண்டேன், அப்பாவிடம் ஒரு ஹெர்க்குலிஸ் சைக்கிள் இருந்தது, அப்பா தினமும் காலையில் எழுந்து சைக்கிளைத் துடைத்து எண்ணெய் போட்டு பத்தடி தொலைவில் பின்னோக்கிச் சென்று ஒருமுறை பார்ப்பார்.
ஞாயிற்றுக் கிழமைகளில் எப்போதாவது சைக்கிளைத் துடைக்கச் சொல்லி என்னிடம் சொல்லிவிட்டுப் போகும்போது எரிச்சலோடு தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கிற அந்த சைக்கிளை முறைத்துப் பார்த்துவிட்டு துடைக்க ஆரம்பிப்பேன். சைக்கிள் துடைப்பது எனக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத நான் விளையாடப் போகிற நேரத்தைப் பிடுங்கிக் கொள்கிற வேலை என்பதால் சைக்கிள் மீது மிகப்பெரிய வெறுப்புணர்வு மண்டிவிட்டது.
என்ஜீவோ காலனியின் சி பிளாக்கில் முதல் மாடியில் நாங்கள் இருந்ததால், மாடிபடிகளுக்குக் கீழிருக்கும் முக்கோண வடிவிலான இடைவெளியில் அப்பா சைக்கிளை நிறுத்தி இருப்பார், ஒரு கோடை விடுமுறையின் அதிகாலையில் வழக்கமாக எழுந்து அப்பா சைக்கிளைத் துடைக்கப் போனவர், அதிர்ச்சியோடு திரும்பி வந்தார்.
அதிகாலையின் தூக்கக்கலக்கத்தில் கொஞ்சம் கலக்கத்தோடு அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருந்த அந்த உரையாடல்கள் எனக்கு நினைவில்லையென்றாலும் அந்தக் கணங்கள் சுமந்து கொண்டிருந்த துயரத்தின் சாயலை என்னால் உணர முடிந்தது.
கொஞ்ச நேரத்தில் ஜேசுதாஸ் மாமாவும், மொட்டை சுரேஷ் அப்பாவும் வந்து சைக்கிளைக் குறித்து விசாரிக்க ஆரம்பித்தார்கள், லைசன்ஸ் பட்டையை சீட்டுக்கு அடியில் ஒட்டி இருக்கிறீர்களா? பூட்டு எந்தக் கம்பெனி என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டபடி கொஞ்சம் கொஞ்சமாய் வீட்டுக்கு முன்பாகக் கூட்டம் கூடத்துவங்கியது, வழக்கமாகக் கிடைக்கிற தேநீர் இனி கிடைக்க வாய்ப்பில்லை என்று நானும் கூட்டத்தை வேடிக்கை பார்க்கத் துவங்கினேன்.
வாச்மேன் தாத்தா வடமாவட்டத்திலிருந்து சைக்கிள் திருடர்கள் ஊருக்குள் புகுத்திருப்பதாகவும், இப்படித்தான் நேற்று இரவு ஆவாரங்காட்டில் சில சைக்கிள்களும், அரண்மனை வீதியில் சில சைக்கிள்களும் காணாமல் போனதாகவும் கதையளக்கத் துவங்கினார். போதாக்குறைக்கு காசி அண்ணன் வந்து நின்று கொண்டு நேற்று இரவில் சில சந்தேகத்துக்கு இடமான ஆட்கள் நடமாட்டம் இருந்ததாகவும், தன்னைப் பார்த்து அவர்களில் ஒருவன் முறைத்ததாகவும் தன பங்குக்கு அள்ளிவிட்டார்.
ஒருவழியாக அனைவரும் சேர்ந்து காலனியின் அலுவலகத்தில் ஒரு கூட்டம் போட்டார்கள். போலீசில் புகாரளிப்பது என்றும், இரவில் போலீசார் ரோந்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அப்பா சோர்ந்து போயிருந்தார். சைக்கிள் என்பது ஒரு மிகப்பெரிய சொத்தாக இருந்தது. அலுவலகத்திற்கு சைக்கிளில் தான் போக வேண்டியிருந்தது.
காய்கறிகள் வாங்குவதிலிருந்து, எனக்கு முடிவெட்டுவதற்காக, இரவு எம்ஜியார் படங்களைப் பார்க்க அமுதா தியேட்டர் போவதற்கு என்று சைக்கிள் ஒரு வாழ்வாதாரப் பொருளாக இருந்தது. அன்றைய நாளில் புதிய சைக்கிளை வாங்குவது ஒன்றும் அத்தனை எளிதான பொருளாதார நடவடிக்கையாக இருக்கவில்லை.
ஏ பிளாக்கில் இருந்தும், பி ப்ளாக்கில் இருந்தும் தொடர்ந்து ஆட்கள் வரத்துவங்கினார்கள். அப்பா சட்டையை மாட்டிக்கொண்டு காலனியின் காம்பௌண்டில் இருந்து மெதுவாக வெளியேறி நடக்கத் துவங்கினார். அவரது கண்களில் ஏதோ ஒரு நம்பிக்கையின் ஒளி மிச்சமிருந்தது. நான் அப்பாவைப் பின்தொடர்ந்து நடக்கத்துவங்கினேன.
நாங்கள் வெளியேறி மேட்டைக் கடந்து நடக்கத்துவங்கிய போது அப்பா என்னைத் தன்னுடன் இணைத்துக் கொண்டார். துயரம் மிகுந்த மனத்தை சுமந்து கொண்டு நடக்கிற அப்பாவை நான் கூர்ந்து நோக்கியபடி அவருடைய கால்களை உரசியபடி நடந்தேன்.
நாங்கள் கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் தொலைவு நடந்து ஜெயவிலாஸ் டெப்போவின் பின்புறமிருக்கிற முந்திரி மரக்காட்டுக்குள் நுழைந்தோம். அப்பா கவனமாக மண்பாதைகளில் தென்படும் சைக்கிள் டயரின் தடங்களைக் கவனித்தபடி முன்னேறினார். நாங்கள் இரண்டாம் வரிசை மரங்களின் கீழாக நடந்து கொண்டிருந்தபோது சரியாக வரிசையின் நான்காவது மரத்தின் கீழே சைக்கிள் கீழே சாய்ந்து கிடந்தது. அப்பா காணாமல் போன குழந்தைகளை அணைத்துக் கொள்கிற மனநிலையில் ஓடிப்போய் சைக்கிளை தடவிப் பார்த்தார்.
“பூட்ட ஒடச்சுப் பாத்திருக்கேங்கடா, முடியல” என்று கண்களில் மகிழ்ச்சி பொங்க ஸ்டென்டைப் பிடித்துக் கொள்ளச் சொன்னார். நாங்கள் பையூர்ப்பாதையில் சைக்கிளின் முன்சக்கரம் அழுந்திப் பதிய வடம்பிடிப்பவர்களைப் போல வந்து காலனிக்குள் நுழைந்தோம்.
தாசில்தார் அம்மா லட்சுமிப் பாட்டி வந்து “ஒழைச்ச காசு திருட்டுப் பயகளுக்கா ஒட்டும்” நல்லநாளுல ஒரு சூடத்தக் கொளுத்தி திட்டி சுத்தி போடு தாயி என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு போனது.
அன்று மாலை வரையில் வீட்டுக்கு ஆட்கள் வருவதும், விசாரிப்பதுமாய் இருந்தார்கள். பெரிதாகத் தொடர்பு இல்லாத ஏ பிளாக் ஆட்களும், பி பிளாக் ஆட்களும் வந்து அப்படிப் பேசிக்கொண்டிருந்தது எனக்கு ஒருவகையில் மகிழ்ச்சி தருவதாக இருந்தது.
என்னுடைய சிவப்பு சைக்கிளை நான் பாதியில் விட்டுவிட்டேனே? பள்ளிக்கு முதன்முதலாக சைக்கிள் எடுத்து வருகிற அந்த நாளில் மிகப்பெரிய தலைக்கனத்தோடு பெல்லை வேண்டுமென்றே அடிப்பவர்களைத் துரத்துவது, காற்று சரியாக இருக்கிறதா என்று மறுபடி மறுபடி ரீசஸ் மணி அடிக்கிற பொழுதில் வந்து பார்ப்பது என்று சில நாட்கள் பரபரப்பாகப் போனது.
நான்காவது நாளில் தான் கீகு என்னுடைய சைக்கிளைப் பார்த்தான், கீகு என்கிற கிருஷ்ணகுமார் பள்ளியின் பணக்கார மாணவர்களில் ஒருவன். நகரத்தின் புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் ராமகிருஷ்ணனின் மகன். பள்ளியின் ஆசிரியர்கள் பலருக்கு அவர்தான் குடும்ப மருத்துவர்.
கீகுவின் தங்கை குமுதா வெள்ளைக்காரர்கள் போட்டுக்கொள்கிற ஸ்னோ பயன்படுத்துகிறாள் என்றும், அவர்கள் வீட்டில் ஐஸ்க்ரீம் தயாரித்து சாப்பிடுவார்கள் என்றும் ரகசியக் குரலில் வகுப்பறைகளில் பேசிக் கொள்வார்கள்.
“கீகு” உணவு இடைவேளையில் வந்து என்னிடம் சைக்கிள் சாவியைக் கேட்டான், அவனிடம் விலை உயர்ந்த சைக்கிள் ஏற்கனவே இருந்தது மட்டுமில்லாமல், அவன் எப்பாவதாவது ஸ்கூட்டரில் வந்து போவான், எப்போதாவது அவனிடம் ஸ்கூட்டரை வாங்கி ஓட்டி விடலாம் என்கிற நப்பாசையில் நானும் சாவியை உடனடியாகக் கொடுத்துவிட்டேன்.
15-20 நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தவன், சைக்கிள் சுவற்றில் மோதி வீல் வளைந்து விட்டதாகக் கூறியபோது அழாத குறையாக வெளியே போய்ப் பார்த்தால் சைக்கிள் அலங்கோலமாக நின்று கொண்டிருந்தது.
“கீகு, எனக்கு எதுவும் தெரியாது பாத்துக்க, ஒழுங்கா சைக்கிள ரிப்பேர் பண்ணிக் குடுத்துரு” என்று கட்டன்ரைட்டாக சொல்லிவிட்டு கண்களைக் கசக்கியபடி நடக்கத்துவங்கினேன்.
மாலையில் கடக் கடக் என்று ஓசை எழுப்பிய சைக்கிளோடு நாங்கள் கீகு வீட்டுக்குப் போனோம், வாசலிலேயே நின்று கொண்டிருந்த டாக்டர் ராமகிருஷ்ணன் என்னைப் பார்த்து ஸ்நேகத்தோடு சிரித்துவிட்டு, “தம்பி, ஒன்றும் கவலைப்படாதே, சைக்கிளை சரி செய்து நாளை ஓட்டி விடலாம்” என்று நம்பிக்கையோடு பேசினார்.பிறகு யாரோ ஒருவர் வந்து சைக்கிளை எடுத்துச் சென்றார், “கீகு” உன் ஃபிரெண்டுக்கு ஐஸ் ப்ரூட் செய்து கொடு என்று சொல்லிவிட்டு டாக்டர் தனது வெள்ளை மாருதியில் புறப்பட்டுப் போனார்.
நாங்கள் சோபாவில் அமர்ந்தபடி தொலைக்காட்சியில் குத்துச் சண்டை பார்த்தோம், சொன்னபடி மறுநாள் சைக்கிளை ரிப்பேர் செய்து கொடுத்தான் கீகு, அதற்குப் பிறகு நாங்கள் நெருங்கிய நண்பர்களாகிப் போனோம். சரியாக 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாளில் கீகு பள்ளி நண்பர்களின் வாட்ஸப் குழுவில் நுழைந்தான். பிறகு சில நாட்களில் அலைபேசியில் அழைத்துப் பேசினான்.
திடீரென்று கீகுவை குழுவில் இருந்து நீக்கினார்கள், என்ன ஏதென்று விசாரிப்பதற்கு முன்பாக அவன் திடீரென்று ஹோட்டலில் அறை எடுத்துக் கொண்டு குடிப்பதாகவும், பிறகு நண்பர்களிடம் பணம் கேட்பதாகவும் ஒரு சாரார் என்னிடம் புகாரளித்தார்கள். கீகுவை அவர்கள் நடத்திய விதம் குறித்து எனக்கு பெரிய மனக்குமுறல் இருந்தது, அவன் பள்ளியின் புரவலனாக வளம் வந்தபோது இந்த நண்பர்களில் பலர் அவனது புத்தகப் பையை சுமந்தபடி அவன் வாங்கிக் கொடுக்கிற தின்பண்டங்களுக்காக அடிமைகளைப் போல அவன் பின்னால் சுற்றுவார்கள்.
கீகு, பத்தாவது படிக்கும் போது டாக்டர் மாரடைப்பால் இறந்து போனார். குடும்பம் ஏறத்தாழ சர்ரென்று ஒரு சருக்கு மரத்தில் இருந்து இறங்குவதைப் போல கீழே இறங்கியது. கீகு ஏழ்மையில் விழுந்து புரண்டான். உலகம் அவனைத் துரத்தியது. நண்பர்கள் அவன் காசு கேட்பதாக குழுக்களில் இருந்து நீக்கினார்கள். பின்னிரவுகளில் அழுதபடி இதுகுறித்தெல்லாம் என்னிடம் பேசுவான் கீகு. நான் அவனுக்கு ஆறுதல் சொல்லுவேன். கீகு ஒரு ராஜகுமாரனைப் போல பள்ளியில் வலம் வந்தவன். கையில் இருக்கிற பணத்தை நண்பர்களுக்கு வேறுபாடுகள் இல்லாமல் செலவு செய்தவன். முதன்முதலாக ஸ்கூட்டரில் பள்ளிக்கு வந்தவன். வாக்குத்தவறாதவன்.
இன்றைய நண்பர்கள் குழுவில் அன்று ஒரு புழுவைப் போல அவன் பின்னால் சுற்றிக் கொண்டிருந்த நண்பர்களை எனக்குத் தெரியும். அவர்களில் சிலரிடம் இப்போது கார் இருக்கிறது. ஆனால், பழைய கார் டயர் வாங்குவதைக் கூடக் கற்பனை செய்ய முடியாத நிலையில் அனைவரும் இருந்த பொழுதில் காரில் நகரை வலம்வந்தவன் கீகு.
காலம் மனிதர்களை எப்படியெல்லாம் சுழற்றி அடிக்கிறது என்று திரும்பிப் பார்த்தால், முப்பது வருடங்களுக்கு முந்தைய என்னுடைய சிவப்பு சைக்கிளும், கீகுவின் வெள்ளை மாருதியும் நிழலாடுகிறது.
அலுவலகத்தில் இருந்து கீழே இறங்கி வாசலில் நிற்கிற போது சைக்கிளில் வந்து கால்களை ஊன்றி கைகளை மடக்கி சல்யூட் அடிக்கிறான் கூர்க்காத்தம்பி.
தம்பி, கொஞ்சம் சைக்கிளை ஒரு ரவுண்டு குடுக்கிறியா என்று கேட்டு, மிக மென்மையாக சைக்கிளை கொஞ்ச தூரம் உருட்டி ஏறி மிதிக்கிறேன். நகரம் இதயத்துக்கு மிக நெருக்கமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. கலவையான உணர்வுகள் பெருகப் பெருக என்னுடைய சிவப்பு சைக்கிளையும். கீகுவின் வாழ்க்கையையும் நினைத்தபடி நகர்கிறேன்.
கீகுவின் புத்தகமூட்டைகளை சுமந்துகொண்டு அவன் கொடுக்கிற தின்பண்டங்களைத் தின்று அவன் பின்னே சுற்றித் திரிந்தவர்களை வைத்தே அவனை அவமதிக்கிறது. காணாமல் போன அப்பாவின் சைக்கிளை 2 மணி நேரத்தில் திரும்பக் கொடுத்து அதிர்ச்சி அளிக்கிறது. வாழ்க்கை விசித்திரமான திருப்பங்கள் கொண்டது.
https://www.uthayamugam.com/tamil-essays/vazhvin-vannangal-10/

Leave A Reply