வாழ்வியல் சிந்தனைகள் – 26 – ராதா மனோகர்

Share

நாம் உலகை ரசிக்க வந்த ரசிகர்கள்! ஆத்மாக்கள் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே!

நான் இப்போது தெரிவிக்க போகும் கருத்து உங்களில் அநேகருக்கு ஏற்றுகொள்ள முடியாத கருத்தாகும் . மிகவும் பழகி போன ஒரு கோட்பாட்டை எழுந்த மானத்தில் தூக்கி எறிவது சுலபம் அல்ல. மிகவும் மெதுவாக படிப்படியாக தான் ஆழமாக பதிந்து விட்ட கோட்பாடுகளை மறு பரிசீலனை செய்ய முடியும்.

அடிப்படையில் எனக்கு பொறுமை இல்லை. தெரிந்ததை அல்லது நான் நம்புவதை எவ்வளவு விரைவாக வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக வெளிப்படுத்துவது. எனது சுபாவமாகும்.

அதிகம் யோசிக்கும் பொழுது நான் சுயநலவாதி ஆகிவிடுகிறேன். எனது கருத்தை நான் வெளிப்படுத்துவதால் சமுகத்தில் எனது கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டு விடும் என்ற பயம் அல்லது தயக்கம் என்னை மௌனமாக்கி விடும்.

காலாகாலமாக நாம் எமது உடலுக்கு உரிய முதல் இடத்தை கொடுக்கவில்லை. அனேகமாக கடவுளுக்கு அல்லது நமது வழிகாட்டி குருவானவர் போன்றவர்களுக்கு முதல் இடத்தையும் அல்லது நமது ஆத்மாவுக்கு முதல் அல்லது இரண்டாவது இடத்தையும் கொடுத்து வந்துள்ளோம்.

உண்மையில் எமது உடலுக்கு மிகவும் கீழான ஒரு ஸ்தானத்தையே வழங்கி வந்துள்ளோம்.

ஏனெனில் உடல் அழியக்கூடியது ஆனால் ஆத்மா அழியாது கடவுள் அழியாது குருவானவர் அழியாதவர் என்பது போன்ற கோட்பாடுகள் எமது மனதின் ஆழத்தில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இது உண்மையில் மிகவும் மோசமான தவறான கோட்பாடாகும். உடலை மேன்மை படுத்தாமல் ஆத்மாவை அல்லது கடவுளை மேன்மை படுத்துவிட்டோம். ஆத்மா அல்லது கடவுள் என்று ஒன்றுமே இல்லை என்று நான் கூறவரவில்லை.

ஆனால் இங்கே இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருப்பது எமது உடல் மூலம்தான். எமது பிறவியின் நோக்கமும் இந்த அற்புதமான உடல் மூலம் இந்த வாழ்வை வாழ்ந்து எம்மை சுற்றி உள்ள அற்புதங்கள் எல்லாவற்றையும் ரசித்து மகிழ்வதற்கே.

குதிரையின் கழுத்தில் கட்டப்பட்ட காரெட் கிழங்கு போன்று எமது கழுத்துக்கு முன்பும் ஆத்மா கடவுள் சுவர்க்கம் போன்ற சாக்கிலேட்டுக்கள் கட்டப்பட்டுள்ளன .அவற்றை நோக்கி நாம் ஓடிகொண்டே இருக்கிறோம்.

வாழ்வு முழுவதும் எமக்கு முன்பே கட்டப்பட்டுள்ள சாக்கிலேட் இனிப்புக்களை நோக்கி ஓடிகொண்டே வாழ்வும் முடிந்து விடுகிறது. கண்ணுக்கு முன்பே தெரியும் அற்புதத்தை அழகை ரசிக்க மறந்து எங்கே எப்போதோ யாரோ சொன்ன அம்புலிமாமா கதைகளை நம்பி எல்லோரும் சென்று கொண்டிருக்கிறார்கள் போல தான் தெரிகிறது. சொல்லப்பட்ட கதைகள் எல்லாம் இரவல் கதைகள்தான்.

ஒருவரினதும் சொந்த அனுபவமோ சொந்த புத்தியோ இல்லை என்பதை இங்கே நான் குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. நான் சொல்வது மட்டும் இரவல் அனுபவம் இல்லையா என்று நீங்கள் கேட்டால் அது மிகவும் நியாயமான கேள்விதான். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பதில் சொல்லவேண்டியது எனது கடமை. ஆம் எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே சொல்கிறேன்.

இந்த உலகத்தில் நாம் மனிதர்களாக பிறந்து இருப்பது இந்த உடல் என்ற அற்புத இயந்திரத்தில்தான். இந்த அற்புத சம்பவத்தின் ஒரே ஒரு நோக்கம், இதன் மூலம் ஆனந்தமாக இருபதுதான். இந்த உடல் மனம் போன்ற பல உப கருவிகளை கொண்டுள்ளது. அவை எல்லாமே இந்த உலகின் அற்புதங்களை கண்டு ரசித்து செல்வதற்குத்தான். இதுதான் பிறவி நோக்கம்.

பாவம் புண்ணியம் தர்மம் கர்மம் போன்ற எல்லாம் இயற்கை விதி என்ற ஒரு விதி முறையில் தான் இயங்குகிறது . அந்த இயற்கை விதியை நாம் எத்தனையோ லேபிள்களை மாத்தி மாத்தி ஒட்டி அழைத்தாலும் விடயம் ஒன்றுதான். இயற்கை விதி என்பது மிகவும் தெளிவானது நீ எண்ணுவது உன்னை வந்து சேரும். எல்லா வினைகளுக்கும் எதிர்வினைகள் உண்டு.

இன்னும் சரியாக சொல்லப்போனால் விஞ்ஞான விதிகள் எல்லாம்தான் இந்த உலகின் இயற்கை விதியாகும். அதுதான் கடவுள் அல்லது கர்மா.

விஞ்ஞானம் நமது நல்வாழ்வுக்கு மேன்மை புரிகிறது , விஞ்ஞானத்தை தவறாக புரிந்து கொண்டால் அது தீமையை புரிகிறது , இதுதான் சுருக்கமான மெய்ஞானம் அல்லது கடவுள் என்று எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.

அழியாத ஆத்மா அப்படியே இருக்கும் அதில் உண்மையில் ஒரு பிரயோசனமும் இல்லை. அந்த ஆத்ம அனுபவம் என்று சொல்வது மனம் என்ற ஒன்றை நாம் உணர முடியாத ஒரு நிலைதான். இந்த உலகை நாம் பார்ப்பது எமது மனதின் மூலம்தான் எந்த நிமிடம் அந்த மனதின் உதவியை இழந்து விடுகிறோமோ அந்த கணமே நாம் பார்க்கும் வஸ்துக்கள் எல்லாமே நாமே ஆகிவிடுவோம்.

இது ஒன்றும் அதி அற்புதமான அல்லது உயர்ந்த ஸ்தானம் அல்ல. ஆனால் மிகவும் அரிதான ஒரு அனுபவமாகும். எண்ணிப்பார்க்கையில் இது ஏதோ கிடைத்தற்கரிய குண்டலினி சக்தி அல்லது அதி உன்னத ஸ்திதப்பிரக்ஞை போன்றெல்லாம் தோணவும் கூடும். இதில் நாம் மயங்கவும் கூடும் ஆனால் இதில் மயங்கி இதுவே நமது பிறவியின் பயன் முக்தி என்றெல்லாம் எண்ணுவது தவறு.

ஏனெனில் மனம் எப்பொழுது அடியோடு இல்லாமல் போய்விடுகிறதோ அந்த கணமே நான் அது என்ற வேறுபாடுகள் இல்லாமல் போய்விடுகிறது.

தற்காலிகமாக இந்த நிலை ஒரு ஆனந்தத்தை அல்லது எளிதில் விளக்க முடியாத அனுபவத்தை தரும். ஆனால் இதனால் இவ்வனுபவத்தை நாம் பெரிதாக கருத முடியாது. சகல ஜீவராசிகளுக்கும் அடிப்படை ஸ்தானம் இந்த பிரபஞ்சத்தில் இதுதான். இதில் ஒன்றும் மெரிட் கிடையாது.

ஆனால் இந்த பிறவி ஒரு பெரிய சாதனை. அதிலும் இந்த பிறவியை மகிழ்ச்சியாக நம்மை சுற்றி உள்ள உலகம் முழுவதும் ஒரு கொண்டாட்டம் போன்று வாழ்ந்து அனுபவித்தல் பெரும்பாக்கியம்.பெரும் சாதனை.ஞானம் குண்டலினி என்று நாம் கருதும் அறிவிலும் பார்க்க இந்த வாழ்வு உயர்ந்தது.

இந்த மனம் அற்ற அனுபவம் தற்போதையை எமது உலகியல் வாழ்வில் ஏதோ ஒரு சிறந்த அடையவே முடியாத அதி உன்னத சுவர்க்க நிலை அல்லது ஆத்மா அநுபூதி போன்று தோன்ற கூடும். உண்மையில் அப்படியாகவே இருக்கவும் கூடும்.

ஆனால் இந்த உலக வாழ்வு என்பதுதான் உண்மையில் அதி அற்புதமானது. ஏனெனில் நாம் எங்கிருந்து வந்தோமோ அதை நோக்கிதான் போய்க்கொண்டும் இருக்கிறோம் .இதுதான் இயற்கை விதி அல்லது விஞ்ஞான விதி. மீண்டும் இந்த அற்புத பிறவியை நாம் தரிசிப்போமோ என்பதற்கு எதுவித கரண்டியும்கிடையாது.

ஆனால் ஆத்மாவின் அனுபவத்தில் தான் நிரந்தரமாக அல்லது நமக்கு தெரியாத அளவு இருக்க போகிறோம். அப்போது இந்த பிறவியின் அதி மேலான அதிசயங்களை எண்ணி அடடா இந்த ஆத்மானுபவத்திலும் பார்க்க அந்த சின்ன சிறு உடலில் எவ்வளவு பெரிய வாழ்வு இருந்தது என்று எண்ணுவோம்.? பசித்தவன் பழங்கணக்கு பார்ப்பது போல இந்த உலகின் மேன்மையை அந்த ஸ்தானத்தில் இருந்து பார்த்து என்ன பயன்?

ஆகவே எமது பிறவியின் நோக்கம் ரசித்து அனுபவிப்பதே. நாம் மனிதர்கள் அல்லது உயிரனங்கள் அல்லது ஆத்மாக்கள் என்றெல்லாம் எமது இருப்பை அழைப்பதிலும் பார்க்க நாம் ரசிகர்கள்! இந்த உலகை ரசிக்க வந்த ரசிகர்கள் என்று சொல்வதுதான் எமது பிறவியின் சரியான பெயராகும்.

வாழ்வியல் சிந்தனைகள் – 27 – ராதா மனோகர்

Leave A Reply