உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் – 4.டோனடெல்லோ

Share

இவரை ஓவியர் என்பதை விட சிற்பி என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

இத்தாலி நாட்டுக்காரர்தான்.

இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் நகரைச் சேர்ந்தவர். 1386 ஆம் ஆண்டு பிறந்தவர். பிறந்த மாதம் தெரியவில்லை. இவருடைய தந்தை நிக்கோலோ டி பெட்டோ பர்டி. கம்பளி நெய்பவர் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.

டோனடெல்லோவின் நிஜப்பெயர் டோனடோ டி நிக்கோலோ பெட்டோ பர்டி. பிளாரன்ஸ் நகரில் வாழ்ந்த மார்டெல்லி குடும்பத்தினரிடம் கல்வி கற்றார்.

தன்னுடைய முதல் கலைப் பயிற்சியை பிளாரன்ஸ் நகரில் உள்ள நகைத் தொழிலாளி ஒருவருடைய தொழில் கூடத்தில் பெற்றார். பிறகு, லாரன்ஸோ கிபெர்டி என்பவரின் ஓவியக் கூடத்தில் சிறிதுகாலம் பயிற்சி பெற்றார்.

1404 முதல் 1407 வரை ரோமில் பிலிப்போ புரூனெல்ச்சி என்பவருடன் இணைந்து அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுகளில் ஈடுபட்டார். அப்போது பழம்பொருள்களை சேகரித்தனர். அந்த காலகட்டத்தில் பல்வேறு நகைத் தொழில் கூடங்களில் வேலை செய்து தனது வாழ்க்கையை ஓட்டினார் டோனடெல்லோ.

வரலாற்றுப் புகழ்பெற்ற பாந்தியான் டோம் மற்றும் ரோமப் பேரரசின் புகழ்பெற்ற கட்டிடங்களை அளவிடும் வேலையில் புரூனெல்ச்சி ஈடுபட்டார்.

புரூனெல்ச்சியின் கட்டிடங்களும், டோனெடெல்லோவின் சிற்பங்களும் அந்தக் காலகட்டத்தில் உச்சபட்ச கவனத்தைப் பெற்றன. கட்டிடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் புகழைச் சேர்த்தன. அன்றைய காலகட்டத்திலும் அதற்கு பின்னரும் வந்த ஓவியர்களை இவர்களுடைய கலைத்திறமை ஈர்த்தது.


பிளாரன்ஸ் தேவாலயத்தின் வடக்கு கதவில் தேவதூதர்களின் சிற்பங்களை செதுக்கும் பணியில் லாரன்ஸோ கிபெர்ட்டிக்கு உதவியாக டோனடெல்லோ பணியாற்றினார்.

இதற்கான சம்பளம் டோனடெல்லோவுக்கு 1406 ஆம் ஆண்டு இறுதியிலும் 1407 ஆம் ஆண்டு தொடக்கத்திலும் கிடைத்தது.

1409 முதல் 1427 வரை டோனடெல்லோ பல்வேறு இடங்களுக்கு சென்றார். இந்த காலகட்டத்தில் அவர் செதுக்கிய சிற்பங்கள் புகழ்பெற்றவை. பிளாரன்ஸ், பைஸா, நேப்பிள்ஸ் ஆகிய நகரங்களில் இவர் பல்வேறு அற்புதமான சிற்பங்களை செதுக்கினார்.

பிளாரன்ஸில் உள்ள சாந்தா மரியா டெல் ஃபியோரில் இவர் ஐந்து சிற்பங்களை உருவாக்கினார்.

தாடியில்லாத தேவதூதர், தாடியுடன் கூடிய தேவதூதர், ஐஸக்கின் தியாகம், ஹப்பாகுக், ஜெரமையா என்ற தலைப்புகளில் இவர் செதுக்கிய அந்த ஐந்து சிற்பங்களும் தனித்தன்மை வாய்ந்தவை.

1425ல் சாந்தா குரோஸ் தேவாலயத்திற்காக இவர் செதுக்கிய யேசுவின் சிலை வித்தியாசமானது. க்ரூசிஃபிக்ஸ் என்ற தலைப்பில் அந்த சிலை யேசுவை வித்தியாசமாக சித்தரித்தது.

கண்களும் வாயும் சிறிதளவு திறந்திருந்த நிலையில் அந்த சிலை உருவாக்கப்பட்டது.
சுவர்களில் மாடங்களை உருவாக்கி அதற்குள் சிலை செதுக்குவது டோனடெல்லோவின் பாணி. இந்த பாணியில் அவர் சிறந்து விளங்கினார். அவர்தான் வித்தியாசமான மாடங்களை அமைத்தார். அந்த மாடங்களே கலைநயத்துடன் அமைந்திருந்தன.


மெடிசியின் அரசவையில் இவர் செதுக்கிய டேவிட்டின் வெண்கல சிலை இடம்பெற்றுள்ளது. இது டோனடெல்லோ வின் புகழ்பெற்ற சிலையாகவும், கலை நுணுக்கத்துடன் கூடிய சிலையாகவும் கருதப்படுகிறது.

வெனிஸ் நகரில் உள்ள சாந்தா மரியா தேவாலயத்திற்காக இவர் மரத்தில் செதுக்கிய செயின்ட் ஜான் தி எவாஞ்சலிஸ்ட் என்ற சிற்பம், பிளாரன்ஸ் நகரில் உள்ள சான் லாரன்ஸோ என்ற தேவாலயத்தின் கதவுகளில் இவர் தந்தத்தால் செதுக்கிய சிற்பங்கள் அந்த காலகட்டத்தின் ஓவியம் மற்றும் சிற்ப கலைஞர்களுக்கு புதிய அனுபவத்தை அளித்தவை.

டோனடெல்லோ திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர் தனது ஓவியக் கூடத்தில் இருந்த ஓவியர்களுடனும், இளம் உதவியாளர்களுடனும் தங்கியிருப்பதையே விரும்பி னார்.

தனக்கு ஓரினச்சேர்க்கை வழக்கம் இருந்ததையும் அவர் மறைக்கவில்லை. திடீரென்று ஆவேசப்படுவார், தனது உதவியாளர்களிடம் வன்முறையில் ஈடுபடுவார் என்றெல்லாம் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

இவருடைய வன்முறைகளை உடனிருந்தவர்கள் தாங்கிக் கொண்டனர். தன்னுடைய பாலியல் தொந்தரவுக்கு பயந்து வெளியேறிய இளம் உதவியாளர் ஒருவரை கொலை செய்யும் நோக்கில் நீண்டதூரம் விரட்டிச் சென்ற சம்பவத்தையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருந்தாலும் இவர் மீது புகார்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. இவருடைய ஆள் உயர டேவிட் சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டது. இந்த சிலை ஓரினச் சேர்க்கையை குறிக்கும் கலைநயமிக்க சிலையாகும் என்று கூறப்படுகிறது.

படுவாவுக்கும் அவர் அழைக்கப்பட்டார். அங்கு எராஸ்மோ டா நார்னி என்பவர் இறந்தார். அவருடைய சிலையை செதுக்கி செயின்ட் ஆண்டனி பாஸிலிக்காவைப் பார்த்து அமைந்த சதுக்கத்தில் நிறுவினார். புராதன காலத்திலிருந்து இம்மாதிரியான சிலை நிறுவப்படுவது அதுதான் முதல்முறை.

படுவாவில் தனது வேலையை முடித்துவிட்டு, மீண்டும் பிளாரன்ஸ் திரும்பினார் டோனடெல்லோ. அங்கு தனது இறுதி நாள்களை கடத்தினார். பல சிற்பங்களை செதுக்கினார்.

1466 ஆம் ஆண்டு இறந்தார். அவருடைய உடல் சான் லாரன்ஸோ பாஸிலிகாவில் அடக்கம் செய்யப்பட்டது.

Leave A Reply