எளிய மருத்துவக் குறிப்புகள் – 25.உடலை வலிமையாக்கும் சிறு குறிஞ்சான்!

Share

எதிர் அடுக்குகளில் அமைந்த இலைகளை உடையது சிறு குறிஞ்சான். இலைக் கோணத்தில் அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய சுற்றுக் கொடி இனம் இது. முதிர்ந்த காய்களில் இருந்து பஞ்சு பொருந்திய காற்றில் பறக்கக்கூடிய விதைகளைக் கொண்டது. இலை, வேர், மருத்துவக் குணம் உடையது. இலை பித்தம் பெருக்கும்.

தும்மலை உண்டாக்கும். மேலும் வாந்தி உண்டாக்கி நஞ்சை முறிக்கும் குணம் உடையது. தமிழ்நாடெங்கும் சிறு காடுகளில் தானாகவே வளர்கின்றது.

மருத்துவக் குணங்கள்:

சிறு குறிஞ்சானைக் கொடி இலையுடன் 50 கிராம் எடுத்து, திரிகடுகு வகைக்கு 10 கிராம் எடுத்து, ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 10 மில்லியளவு 10 நிமிடத்திற்கு ஒரு முறை குடித்து வர ஒரே நாளில் தணியாத தாகத்துடன் கூடிய காய்ச்சல் குணமாகும்.

சிறு குறிஞ்சான் கொடி இலையுடன் 10 கிராம், களா இலை 20 கிராம் சேர்த்து அரைத்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட தாமதமாக வருகின்ற மாதவிலக்குப் பிரச்சினை, இரத்தப் போக்கு, கற்பாயாசக் கோளாறுகள் குணமாகும்

சிறு குறிஞ்சான் இலை ஒரு கைப்பிடி அளவும், தென்னம்பூ இரண்டு கைப்பிடி அளவும் எடுத்துச் சேர்த்து அரைத்து பட்டாணி அளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் காயவைத்து எடுத்து 2 வேளை ஒரு மாத்திரை வீதம் வெந்நீரில் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் குணமாகும்.

சிறு குறிஞ்சான் வேரை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகையளவு எடுத்து திரிகடுகு சூரணம் 1 சிட்டிகையுடன் கலந்து வெந்நீரில் இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர கபம் வெளியேறி இரைப்பிருமல் (ஆஸ்துமா) மூச்சுத்திணறல் குணமாகும்.

சிறு குறிஞ்சான் வேரை நன்கு நசுக்கியது 40 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 30 மில்லியளவு எடுத்து 3 வேளை குடித்து வரக் காய்ச்சல், இருமல், காசம் குணமாகும்.

சிறு குறிஞ்சான் இலையைப் பிட்டவியலாய் அவித்து சாறு எடுத்து 200 மில்லியளவு, உள்ளி, சுக்கு, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் வகைக்கு 30 கிராம் எடுத்து வெதுப்பிப் பொடி செய்து இரண்டையும் கலந்து, 3 நாள்கள் காலையில் கொடுத்து வர குடல்வாதம் நீங்கும்.

சிறுகுறிஞ்சானின் பட்டையைப் பொடியாக்கி அதேயளவு சர்க்கரை கூட்டி, ஒரு தேக்கரண்டியளவு இரண்டு வேளை சாப்பிட்டு வர, உடம்பிலுள்ள காணாத வியாதிகள் நீங்கும். உடலுக்கு வலிமை உண்டாகும்.

Leave A Reply