எளிய மருத்துவக் குறிப்புகள் – 36. மழைக் காலத்தை வெல்ல!

Share

சளி, இருமல் தொடருவது ஏன்? மழைக் காலத்தில் சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுவோர் உண்டு.

நெஞ்சில் கபம் சேரச் சேர பிரச்சினை தீவிரமாகிறது. அலோபதி மாத்திரைகளால் தாற்காலிக நிவாரணம் கிடைக்கலாம்; ஆனால், இந்த மாத்திரைகள் நச்சை (சளியை) உடலிலிருந்து வெளியேற்றாமல் இருப்பதால் பிரச்சினை அவ்வப்போது தலைதூக்கி தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

ஆனால், சளி-இருமல் போன்ற பிரச்சினை வராமல் தடுத்துக் கொள்ளவும், பிரச்சினை வந்தால் அதைக் குணப்படுத்தவும் சிறந்தது இயற்கை மருத்துவமே.

எலுமிச்சை – தேன் சாறு: ஒரு டம்ளர் (200 மி.லி.) வெந்நீரில் அரை எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து எலுமிச்சை-தேன் சாறு தயாரித்துக் கொள்ளுங்கள். இதை தினமும் காலையில் மழைக் காலம் முழுவதும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். காபி-டீ சாப்பிடத் தேவை இல்லை.

இந்தச் சாறை தினமும் குடித்து வரும் நிலையில் சளி-இருமல் உங்களை அண்டாது; சளி-இருமல் பிரச்சினை உள்ளவர்களுக்கு சளி வெளியேறி நல்ல நிவாரணம் கிடைக்கும். இவ்வாறு சளியை எலுமிச்சை-தேன் சாறு வெளியேற்றுகிறது.

வேண்டாம் மூட நம்பிக்கை: எலுமிச்சை மிகவும் குளிர்ச்சி – இன்னும் ஜலதோஷம் அதிகரிக்கும் என்பதில் உண்மை எதுவும் இல்லை. எலுமிச்சை தேனுடன் சேரும் நிலையில் மார்பில் உள்ள சளியை வெளியேற்றும் ஆற்றல் படைத்தது.

இஞ்சி – தேன் சாறு: எலுமிச்சை – தேன் சாறை விரும்பாதவர்கள், எலுமிச்சைக்குப் பதிலாக இஞ்சியைத் துண்டு துண்டாக்கி மிக்சியில் போட்டு சிறிதளவு வெந்நீர் ஊற்றி சாறு தயாரித்துக் கொள்ள வேண்டும்;

ஒரு டம்ளர் (200 மி.லி.) சாறில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம். ஆக, எலுமிச்சை-தேன் சாறையோ அல்லது இஞ்சி-தேன் சாறையோ மழைக் காலம் முழுவதும் சாப்பிட்டு வர சளி-இருமல் பிரச்சினையைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

இந்த இரண்டு வகையான சாறுகளிலும் நல்ல தேன் கிடைக்காத நிலையில் உள்ளவர்கள், வெல்லத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெல்லத்தில் இரும்புச் சத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுக்கு-மல்லி-மிளகு கஷாயம்: மழைக் காலத்தில் சுக்கு-மல்லி விதை-மிளகு மூன்றையும் நன்கு அரைத்து வெல்லம் போட்டு காய்ச்சி கஷாயமாக தினமும் காலையில் காபி, டீ-க்குப் பதிலாகக் குடிப்பது மிகவும் நல்லது.

இதேபோன்று துளசி-கொத்துமல்லி இலை ஆகியவற்றை அரைத்து சாறு தயாரித்து, தேனுடனோ அல்லது வெல்லத்துடனோ கலந்து தினமும் காலையில் சாப்பிடலாம். இவை சளி-இருமல் வராமல் தடுக்கவும், பிரச்சினை இருந்தால் கட்டுப்படுத்தவும் உதவும்.

உணவில் பூண்டு, வெங்காயம்: தினமும் உணவில் பூண்டு, சிறிய வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்வது நல்லது.

மதிய உணவிலோ அல்லது இரவு உணவிலோ மூன்று சிறிய வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிடுவது நல்லது; அல்லது மூன்று பல் பூண்டை பச்சையாக ஏதாவது ஒரு வேளை உணவில் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

இவ்வாறு செய்வதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.

தொண்டையில் அழற்சி: மழைக் காலத்தில் ஒரு சிலருக்கு தொண்டை அழற்சி பிரச்சினை ஏற்படும். எப்போதும் நன்கு காய்ச்சிய குடிநீரையே குடிப்பது நல்லது. எனினும் தொண்டை அழற்சி ஏற்படும் நிலையில் காய்ச்சிய குடிநீரில் உப்பு போட்டு அண்ணாந்து வாய் கொப்பளிக்கும் நிலையில் நிவாரணம் கிடைக்கும்.

நெல்லிக்காய்-கடுக்காய்-தான்றிக்காயை உள்ளடக்கிய திரிபலா சூரணத்தை (அனைத்து சித்த மருந்துக் கடைகளிலும் இந்த மருந்துத் தூள் கிடைக்கும்.) வெந்நீரில் போட்டு வாய் கொப்பளித்தாலும் நிவாரணம் கிடைக்கும்.

ஆஸ்துமா நோயாளிகளே…: ஆஸ்துமா நோயாளிகள் இரவு உணவை சீக்கிரமாக அதாவது, இரவு 7 மணிக்குச் சாப்பிட்டுவிட வேண்டும். இரவு 9.30 மணிக்கு தூங்கிவிட வேண்டும். எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை மட்டுமே இரவில் சாப்பிட வேண்டும். இரவில் மூச்சுத் திணறல் ஏற்படும் நிலையில், வெந்நீரில் துண்டை நனைத்துப் பிழிந்து அதை மார்பில் கட்டிக் கொள்ள நல்ல நிவாரணம் கிடைக்கும்.

எதெல்லாம் சாப்பிடக் கூடாது? மழைக் காலத்தில் சளி-இருமல், சைனஸ் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ள பால், தயிர் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பிரச்சினை இல்லாவிட்டால் சிறிதளவு மோர் சாப்பிடலாம்.

வாழைப்பழம், திராட்சை, நாட்டுத் தக்காளி ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது. அசைவ உணவுப் பிரியர்கள் மீன், முட்டையை குறைவாகச் சாப்பிடுவது நல்லது.

Leave A Reply