எளிய மருத்துவக் குறிப்புகள் – 42. நொச்சி – சகல நோய் நிவாரணி

Share

மூக்கிலிருந்து நீர் ஒழுகுதல், ஜலதோஷத் தலை வலிக்கு கைகண்ட மருந்து நொச்சி தைலம். நொச்சித் தைலம் பல நோய்களைத் தீர்க்கும் நிவாரணியும் கூட.

மேலும் நொச்சி இலையில் ஒத்தடம் கொடுத்தால் வாயுப்பிடிப்பு, சுளுக்கு நீங்கும். இதன் இலையைச் சட்டியில் போட்டு பிறகு அடுப்பில் சூடு செய்து உடம்பு ஏற்கும் அளவு சூட்டில் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும். வலியுள்ள இடத்தில் துவையலாக அரைத்தும் பூசலாம். மண்ணீரல் வீக்கமும் கட்டுப்படும்.

நொச்சி இலைகளை ஒரு துணிப்பையில் அடைத்துப் தலை யணையாகப் பயன்படுத்தினால் ஜலதோஷம் பறந்துவிடும். உலர்ந்த நொச்சி இலையைத் தூள் செய்து பீடிப்புகை பிடித்தாலும் ஜலதோஷம் நீங்கும். இதனுடைய சாறு வயிற்றுப் புண்ணையும் ஆற்றும். இலைச்சாற்றை தலைப்பகுதியிலும், கழுத்திலும் தேய்த்து, சிலமணி நேரம் உடலில் ஊறவிட்டு இளஞ்சூட்டு வெந்நீரில் குளித்தால் கழுத்துவலி நீங்கி, காதில் தங்கிய நீரும் வெளியேறும்.

சீழ்பிடித்து அழுகிச் சொட்டும் புண்ணைக் கூட நொச்சி தைலத்தால் குணப்படுத்தலாம். நொச்சி இலையுடன் திப்பிலி சேர்ந்த கஷாயம் ஜலதோஷக் காய்ச்சலுக்கு நல்லது. கேளாச் செவியையும் கேட்க வைக்கும்.

பிரசவத்துக்கு முன்னும் பின்னும் கர்ப்பப்பையில் ஏற்படும் வலி குறைய நொச்சி இலை போட்டு ஊற வைத்த தண்ணீரைச் சூடுபடுத்தி, உடம்பில் ஊற்ற வேண்டும்.

தீராத வாதநோய் வலிப்பு குணமாக நொச்சி இலையுடன் பூண்டு, ரோஜா மொட்டு அல்லது காசினி விதைப்பூ சேர்த்த அரிசிக்கஞ்சியை குடிக்கலாம். மிளகு, நெய் இரண்டும் சேர்த்து நொச்சிக் கொழுந்தை அரைத்து வழித்த சாரும் 2 தோலாவுடன் (1 தோலா என்பது 12 கிராம்) 2 தோலா அளவு குடித்தால் ஈரல் வீக்கம் கட்டுப்படும்.

நொச்சி வேர்ப்பட்டையின் சாரத்தை புண்ணுக்கு டிஞ்சராகத் தடவலாம். நொச்சி வேர்ப்பொடி மூலத்துக்கும், சீதபேதிக்கும் மருந்தாக பயன்படுகிறது. நொச்சிவேர் நாள்பட்ட புண், குடல்புண், வயிற்றுப் புழு, தொந்தரவுக்கு கிருமி நாசினியாகும். உலர்ந்த நொச்சிப் பூக்களைத் தூள் செய்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு, காய்ச்சல் குணமாகும். நொச்சிப் இலையும், பட்டையும் தேள்கடிக்கு நல்ல மருந்து.

வலிகளை அகற்றும் நொச்சி…

இலைகளைப் பிழிந்து சாறு எடுத்துப் பயன்படுத்தலாம். இலைகளை நீரிலிட்டு கஷாயமாகப் பயன்படுத்தலாம். பூக்களை கஷாயமாக்கலாம். வேர்களைக் குடிநீராக்கி பயன்படுத்தலாம்.

கோழையகற்றி, புழுவகற்றி, உடல்தேற்றி, வலிநீக்கி, வியர்வை உண்டாக்கி, சுரம் நீக்கி.

மருத்துவப் பயன்கள்:

இலைகளை பிழிந்து சாறு எடுத்து அரை அவுன்சு சாறில், ஒரு ஸ்பூன் நெய் கலந்து நான்கு சிட்டிகை மிளகுத்தூள் கலந்து மூட்டுவலி, இடுப்பு வலியில் பூசிட வலி மாறும்.

இலைகளை அரைத்து மூட்டுவலி மேல் கட்டிவர, மூட்டுவலி வீக்கம் மறையும்.

வேர்களை நீரிலிட்டுக் காய்த்து வெறும் வயிற்றில் ஒரு அவுன்சு அருந்த வயிற்றுப் புழுக்கள் ஒழியும்.

இலைகளை நெருப்பில் வதக்கி வீக்கம் மேல் கட்ட, வலி தீரும். வீக்கம் வடியும்.

கைப்பிடி இலைகளோடு ஒரு துண்டு சுக்கு சேர்த்தரைத்து நெற்றிப் பொட்டில் பூசிட தலைவலி மாறும்.

சுடுநீரில் இலைகளைப் போட்டு ஆவிபிடிக்க காய்ச்சல், தலைபாரம், சளிக்கட்டு மாறும். இலைகளை நீரிலிட்டு காய்த்து குளித்து வர கீல் வாதம் மறையும்.

வேர்ப்பட்டையை உலர வைத்து இடித்து பொடியாக்கி சிட்டிகை பொடியை தேனில் குழைத்து வாரம் இருமுறை காலையில் தின்றுவர நரம்புவலி வாதப்பிடிப்பு குணமாகும்.

வேப்பெண்ணெயை சட்டியில் ஊற்றி சூடாகியபின் கைப்பிடி இலைகளை இட்டு வதக்கி, வீக்கத்தின் மேல் வைத்துக் கட்ட வீக்கம் குறையும்.

பூவின் சாறு அரை ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் கலந்து உண்ண காய்ச்சல் குணமாகும். நீரில் இலைகளையும், பூக்களையும் இட்டு சூடாக்கி, குளித்துவர தலைநீர், தலைபாரம், தலைவலி, ஜலதோஷம், உடல்வலி மாறும்.

இலைகள், பூக்களை மணலில் இட்டு வறுத்து, லேசான சூட்டில் கழுத்துப் பிடரி வலி ஏற்படும் போது ஒற்றடம் கொடுக்க வலி மாறும்.

சமஅளவு நொச்சி இலைச்சாறு, நல்லெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து குளித்துவர கழுத்தில் ஏற்படும் வீக்கம், நெறிக்கட்டு குணமாகும். நொச்சி இலைகளை ஒரு துணியில் தலையணை போல் அடைத்து தலைக்கு வைத்துத் தூங்கி வர, தலைவலி, நரம்புவலி, கழுத்து வலி, தலைநீர், தலைபாரம் இவைகள் குணமாகும்.

Leave A Reply