எளிய மருத்துவக் குறிப்புகள் – 43. ஞாபக மறதி நோயா?

Share

ஒரு செயலை செய்யும் போது மனதை ஒருமுகப் படுத்துவது, ஈடுபாட்டுடன் ஒரு செயலைச் செய்வது, இவ்விரண்டும் மறதியைத் தடுப்பவை. மனதைப் பல துறைகளில் ஈடுபடச் செய்து ஒன்றிலும் நிதானிக்காமல் செய்வதும், செய்யும் பணியில் ஈடுபாடின்மையும் தான் மறதிக்குக் காரணம்.

புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடுவது, பேசிக்கொண்டே சமையல், கடவுளை வேண்டுவது போன்றவை எல்லாம் மூளையின் கூர்மையைக் குறைப்பவை. எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அந்த ஒரு செயலிலேயே கருத்துடன் ஈடுபடுவது என்றொரு பழக்கம் மறதியில்லாதிருக்க முதற்படியாகும்.

ஞாபக சக்தியை வளர்த்துக் கொள்ள இரவு படுக்கு முன் அன்று காலை விழித்தெழுந்தது முதல் உங்கள் அனுபவத்திற்கு வந்த சிறு சிறு நிகழ்ச்சிகளைக் கூட வரிசைப்படுத்தி நினைத்துப் பார்க்க முயற்சிக்கவும். இப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மறதி சிறுகச் சிறுக விலகி ஞாபக சக்தி நன்கு வளரும்.

நாம் இவ்விதம் நாளின் முடிவில் சிந்தித்துப் பார்த்து வரிசைப்படுத்திக் கொண்டால் இரவில் மன அமைதி பெற்று நிம்மதியாகத் தூங்க முடியும். மறுநாள் மனம் களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சியுடனிருக்கும். மறதியே ஏற்படாது.

ஞாபக சக்தியை வளர்ப்பவைகளின் வரிசையில் பசுவின் நெய், பசுவின் பால், நெல்லிக்காய், வல்லாரை இலை, பிரம்மி, வசம்பு, வாசனை கோஷ்டம், சங்கக் குப்பி, சொக்கத் தங்கம் முதலியவைகளுக்கு முக்கிய இடமுண்டு. விஷயத்தை உடன் கிரஹிக்கும் சக்தி, கிரஹித்ததை மனத்திற்குள் அழியாது என்றும் புதுமையுடன் வைத்துக் கொள்ளும் சக்தி, அப்படியே ஏற்றி வைத்துக் கொண்டுள்ளதைச் சமயம் வரும்போது ஞாபகப்படுத்திக் கொள்ளும் சக்தி, ஞாபகப்படுத்தியதைப் பிறர் நன்கு அறியும்படி விளக்கும் சக்தி, இந்த நான்கையும் நாம் பெற்று மேதாவியாக விளங்க இந்தச் சரக்குகள் உதவும்.

பசுவின் நெய், பசுவின் பால், நெல்லிக்காய் இவற்றை உணவுப் பொருளாகத் தனித்து நிறையச் சாப்பிடலாம். வல்லாரையைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். வல்லாரை, பிரம்மி, சங்கக் குப்பி, கோஷ்டம் இந்த நான்கையும் நிழலில் உலர்த்தி நன்கு தூளாக்கி 2-4 டெஸிகிராம் அளவு தேனில், நெய்யில் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். வசம்பை ஆட்டுப் பாலிலோ பசுவின் பாலிலோ ஊறவைத்து நிழலில் உலர்த்தி 1/2 – குந்துமணி அளவு தண்ணீர் விட்டரைத்துச் சாப்பிடலாம்.

இதில் முதலாவதான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சை காயகற்பம் என அழைக்கப்படுகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால் அழிவில்லாதது. நரை, திரை, மூப்பு அணுகாமல் என்றும் நோயணுகாமல் இளமையாக வைத்திருக்க உதவும் மூலிகைகளை காயகற்ப மூலிகை என்கிறோம். காயகற்ப மூலிகைகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது நெல்லிக்காய். மன்னன் அதியமான் அவ்வைப் பாட்டிக்கு நீண்ட ஆயுள் அமையும் பொருட்டு நெல்லிக்கனி கொடுத்ததாக சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகிறது.

நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் திசுக்களுக்கு புத்துணர்ச்சி யளித்து உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது.

நெல்லிக்காயில் வைட்டமின் “சி” வேறு எந்த வகை காய்கறி பழங்களிலும் இல்லாத அளவுக்கு 600 மில்லிகிராம் உள்ளது. கால்சியம் 50 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 20 மில்லிகிராம், இரும்புச் சத்து 1.2 மில்லிகிராம் உள்ளது. ஆப்பிள் பழத்தை விட இது அதிக சக்தி வாய்ந்தது.

நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. ஜீரண சக்தியை அதிகரித்து, தாதுக்களை நம் உடல் ஏற்றுக் கொள்ள துணை புரிகிறது. கண் களுக்கு தெளிவை கொடுக்கிறது. தலைமுடி உதிராமல், வளர்ந்து, நரைமுடி தோன்றுவதை தவிர்க்கிறது.

நரம்பு மண்டலத்தை தூண்டி வேலை செய்கிறது. மூளை செல்களுக்கு புத்துணர்ச்சியளிப்பதால், மனத்தெளிவு, புத்திக்கூர்மை மற்றும் ஞாபசக்தி உண்டாகிறது. நுரையீரலை பலப்படுத்தி சுவாச நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையை கூட்டாமல் தசைகளுக்கு பலம் அளிக்கக் கூடிய தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு.

நீரிழிவை கட்டுப்படுத்தும் சக்தியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் “சி” சத்து அதிகம் உள்ளதால் நோய்க்கு எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.

நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் காய்ந்த நெல்லிக்காயை (நெல்லிமுள்ளி) பயன்படுத்தலாம். இதற்குரிய சக்தி காய்ந்த பின்னும் குறைவதில்லை.

எல்லா வயதினரும் இதை சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினம் கொடுக்க சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதுடன், மூளை வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் ஏற்படும். ஆயுர்வேத சக்தி மருந்து நெல்லிக்காயால் தான் தயார் செய்யப்படுகிறது.

Leave A Reply