தடுப்பூசியும் தவறான பிரச்சாரங்களும்

Share

இந்த பதிவில் இணைக்கப்படிருக்கும் பெண்மணி நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியவர். அதற்கு முன் அவரது அவசியம் என்ன? அவர் ஏன் இன்று நமக்கு முக்கியமாகிறார் என்பதை முதலில் விளங்கிக்கொள்வோம்.
நவீன மருத்துவ விஞ்ஞானத்தையும் குறிப்பாக நோய்த்தடுப்பு மருந்துகளையும் நிராகரிப்பவர்கள் மற்றும் மறுப்பவர்கள் அடிக்கடி சொல்லும் வாக்கியம் “உணவே மருந்து” என்பது. சரி. உணவே மருந்து என்பதை நீங்கள் உண்மையிலேயே நம்பினால் அந்த உணவே கூட விஷமாக மாறும் என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஏனெனில் ஒரு மருந்தை அதன் குறிப்பிட்ட உபயோகத்தை தாண்டி பயன்படுத்தினால் அதுவே உயிரை எடுக்கும் விஷமாகும். இது தான் அறிவியல். நவீன விஞ்ஞானத்துக்கும் சித்த மருத்துவத்துக்கும் அதுவே அடிப்படை.
இன்றைய நவீன மருத்துவத்தில் வந்தநோயை குணப்படுத்துவது ஒரு பிரிவு என்றால் நோயே வராமல் தடுப்பது அடுத்த பிரிவு. இந்த இரண்டிலுமே பக்கவிளைவுகள் இருக்கும் என்பதும் ஒரு சிகிச்சையோ தடுப்பு மருந்தோ அதன் நன்மையின் அளவென்ன? அதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளின் பாதிப்புகளின் அளவென்ன? இந்த இரண்டில் எது அதிகம் என்பதை கணக்கில் எடுத்துக்கொண்டே மருத்துவர்கள் ஒரு சிகிச்சையையோ அல்லது தடுப்பு மருந்தையோ நோயாளிக்கு தருவார்கள்.

அதாவது ஒரு நோயால் உயிர் போகும் ஆபத்து இருக்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட மருந்து அந்த நோயாளியின் உயிரைக்காப்பாற்றும். ஆனால் அந்த மருந்து சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். 90 முதல் 99% பக்கவிளைவுகள் உயிரை கொல்லாத பக்கவிளைவுகளாகவே இருக்கும். இந்த அடிப்படையில் தான் நவீன மருத்துவம் படிப்படியாக தனது சிகிச்சை முறைகளையும் தடுப்புமருந்துகளையும் உருவாக்கி பயன்படுத்தி வருகிறது.

ஒட்டுமொத்த உலகையும் ஓராண்டுக்கும் மேலாக அச்சுறுத்தி நிலைகுலையச்செய்திருக்கும் கொரோனா விவகாரத்திலும் நவீன மருத்துவம் இதே அணுகுமுறையைத்தான் கையாள்கிறது.
உலக அளவில் இதுவரை குறைந்தபட்சம் 14 கோடி பேரை கொரோனா வைரஸ் தாக்கியிருக்கிறது.
அதில் 30 லட்சம்பேர் இறந்திருக்கிறார்கள்.

இன்றைய நிலையில் இரண்டுகோடி கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.
அதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு அவசரசிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த எண்ணிக்கைகள் முழுமையானவை அல்ல. ஏனெனில் பலநாடுகளில் முறையான முழுகையான புள்ளிவிவரங்கள் இல்லை.

உலக அளவில் கொரோனா தொற்று துவங்கியபோது அதற்கு என்ன மருந்தால் சிகிச்சையளிப்பது என்பது நவீன மருத்துவத்துக்கு பெரும் சவாலாக இருந்தது. ஆனால் இந்த ஓராண்டுகாலத்தில் அதில் மிகப்பெரிய முன்னேற்றம். ஏறக்குறைய கொரோனா மரணங்களில் பெருமளவு இப்போது குறைந்து வருகிறது.

அதே நிலைதான் தடுப்பூசி விஷயத்திலும். இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகளுக்குப்பின் அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு இதுவரை மொத்தம் 86 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

அதில் உலக அளவில் கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் இறந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவே. இதுகுறித்து மருத்துவ ஆய்வாளர்கள் மேலதிக ஆய்வு செய்கிறார்கள். சில அரசுகள் இந்த தடுப்பூசியை 30 வயதுக்கு குறைவானவர்களுக்கும் சில அரசுகள் 50 வயதுக்கு குறைவானவர்களுக்கும் தராமல் நிறுத்தி வைத்திருக்கின்றன. வேறு சில நாடுகள் குறிப்பிட்ட சில தடுப்பூசிகளை முழுமையாகவே நிறுத்திவிட்டன.

இதில் இரண்டு விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

1. கொரோனாதடுப்பூசியால் தான் இந்த 100க்கும் குறைவான சந்தேக மரணங்கள் நிகழ்ந்ததா என்று இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

2. ஒருவேளை இந்த 100க்கும் குறைவான சந்தேக மரணங்கள் கொரோனா தடுப்பூசியால் தான் நேர்ந்தன என்று உறுதியானாலும் இந்த தடுப்பூசிகள் கோடிக்கணக்கானவர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதோடு பல லட்சக்கணக்கானவர்களின் உயிரை காப்பாற்றியிருக்கிறது என்பதையும் நீங்கள் இதில் ஒப்பிட்டு பார்த்து முடிவுக்கு வரவேண்டும்.

இறுதியாக பக்கவிளைவுகளற்ற மருந்து என்கிற சர்வரோக நிவாரணியோ மாயாஜால மந்திரக்கோலோ நவீன மருத்துவத்தில் மட்டுமல்ல சித்தவைத்தியத்திலும் சாத்தியம் இல்லை. எனவே ஒரு சிகிச்சை முறையோ மருந்தோ அதன் நன்மை தீமைகளின் சதவீதம் என்ன என்பதைக்கொண்டே அதை ஏற்பதா வேண்டாமா என்பதை நீங்களும் உங்கள் மருத்துவரும் கலந்துபேசி முடிவுக்கு வாருங்கள். 100க்கு 99% மருத்துவர்கள் உங்களை கொல்ல நினைக்க மாட்டார்கள். காசே தான் கடவுளடா என்கிற மோசமான மருத்துவர்களே ஆனாலும் உங்களை கொல்ல விரும்பமாட்டார். ஏனெனில் அப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் தான் பணம் காய்ச்சி மரம். அதை வெட்டிவிட விரும்பமாட்டார்கள்.

கொரோனா தடுப்பு மருந்தால் வெகு அரிதாக ஏற்படக்கூடிய பக்கவிளைவான Rare blood clots பற்றிய மேலதிக தகவல்கள் இந்த செய்தியில் இருக்கின்றன. அவசியம் படித்து தெளியுங்கள்.

https://www.bbc.co.uk/news/health-56674796

இதில் கூடுதலாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால் உங்களுக்கு கொரோனா தடுப்பூசியால் Rare blood clots ஏற்படும் வாய்ப்பைவிட கொரோனா நோய் தொற்றினால் அதே Rare blood clots ஏற்படும் வாய்ப்பு எட்டுமுதல் பத்து மடங்கு அதிகம் என்கிறது இந்த ஆய்வு.

https://www.bbc.co.uk/news/health-56760163

இறுதியாக இங்கே இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசிக்குப்பின் ஒருவர் இறந்து போனார். அவரது மரணம் இந்த Blood clotsஇனால் நடந்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவரது சொந்த சகோதரி மருந்துகள் பற்றிய பல்கலைக்கழக ஆய்வுத்துறையின் தலைவர். (https://pure.hud.ac.uk/en/persons/alison-astles ) தன் உடன்பிறந்த சகோதரனின் மரணத்துக்கு தடுப்பூசியின் பக்கவிளைவு காரணமாக இருக்கலாம் என்று அவரும் சந்தேகிக்கிறார்.

ஆனால் அதையும் மீறி அவர் எல்லோரையும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்துகிறார். காரணம் கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அரிதினும் அரிதான மரணங்களைவிட அதனால் தடுக்கப்படும் மரணங்களின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் அதிகம் என்பது அவரது கருத்து. அவர் ஒரு மருந்துகள் பற்றி முறையாக படித்த Pharmacist. இந்த செய்தியில் இருக்கும் அவரது பேட்டியின் காணொளியை அவசியம் பாருங்கள். தனிமனித இழப்பு, சோகத்தையும் தாண்டிய பொதுநலப்பார்வை என்றால் என்ன என்பதற்கான இலக்கணம் அவரது இந்த பேட்டி.

https://www.bbc.co.uk/news/uk-56675665

இறுதியாக நம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானவர்கள் சாலைவிபத்தில் இறக்கிறார்கள். இருசக்கரவாகனங்களில் பயணிக்க தலைக்கவசம்; காரில் பயணிக்க seat belt; சாலைகளின் தடுப்புகள் என வெவ்வேறு விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் இந்த சாலை விபத்துகளை தடுக்க முயல்கிறோம். பெருமளவில் தடுத்தும் வருகிறோம். ஆனால் வெகு அபூர்வான விபத்துகளின்போது சாலையில் இருக்கும் தடுப்புகளே உயிரை பறிக்கும் விபரீதங்களும் நடந்துவிடுகிறது. அதற்காக சாலை தடுப்புகளை நீக்கிவிடுவோம் என்பது எவ்வளவு அபத்தமோ அதே அளவு அபத்தம் பக்கவிளைவுகள் காரணமாக தடுப்பு மருந்துகளை புறக்கணிப்போம் என்பது.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
(அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:504)

கலைஞர் உரை: ஒருவரின் குணங்களையும், அவரது குறைகளையும் ஆராய்ந்து பார்த்து அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து அதன் பிறகு அவரைப் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டும்.
மனிதர்களுக்கு மட்டுமல்ல மருந்துகளுக்கும் அதுவே அளவுகோள்.

பிகு: உலக அளவில் மிக அதிக அளவில் எதிர்மறையான விமர்சனங்களில் சிக்கித்தவிக்கும் Oxford-AstraZeneca vaccine தான் இங்கே பிரிட்டனில் சுமார் மூன்று கோடி பேருக்கு போடப்பட்டிருக்கிறது. எனக்கும் அதுவே செலுத்தப்பட்டது என்பது கூடுதல் தகவல்.

LR Jagadheesan

Leave A Reply