கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையில் அமைச்சர் சுதாகர்

Share

ரூ.11.32 கோடி செலவில் 10 லட்சம் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகள் கொள்முதல் செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறினார். சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல் அமைச்சர் எடியூரப்பா தலைமையில் கொரோனா அமலாக்க படை செயல்பட்டு வந்தது. அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. துணை முதல் அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் தலைமையில் அந்த படை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

அவற்றில் நான், பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உறுப்பினராக செயல்படுவோம். இந்த அமலாக்க படையின் ஆலோசனை கூட்டம் இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இதனை அடுத்து 3 மாதங்களில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், 3 மாதங்களில் கொரோனா பரிசோதனை செய்ய ரூ.11.32 கோடி செலவில் 10 லட்சம் ஆன்டிஜென் பரிசோதனை கருவிகளை கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.22.50 கோடி செலவில் கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்கப்படும். கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முக்கிய மருந்துகளில் ஒன்றான ரெமிடிசிவர் மருந்து தற்போது அரசுக்கு ரூ.1,800 விலையில் கிடைக்கிறது.

அதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனைகள் இந்த மருந்துக்கு ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. அவ்வாறு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால், அத்தகைய மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூர் நகர், பெங்களூர் புறநகர், பல்லாரி உள்பட 10 மாவட்டங்களில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் அங்கு பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை.

இதனால் வருகிற 20-ந் தேதி முதல் ஜனவரி 2-வது வாரம் வரை கொரோனா கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். கொரோனா 2-வது அலை வந்தால் அதை எதிர்கொள்ள வசதியாக கர்நாடகத்தில் 30 மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள், 30 தாலுகா அரசு ஆஸ்பத்திரிகளில் ரூ.37.72 கோடி செலவில் ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுதாகர் கூறினார்.

Leave A Reply