அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்காலத் தடை- உயர்நீதிமன்றம் உத்தரவு

Share

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதற்கிடையில் கல்லூரிகளில் இறுதி செமஸ்டர் தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாகவும், அரியர் தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்தியவர்களும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

இதனை எதிர்த்து சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மற்றும் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், தேர்வுகளை ரத்து செய்வதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பல்கலைக்கழக மாணியக் குழுவும், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலும், அரியர் தேர்வு ரத்து என்பது விதிமுறைகளுக்கு முரணானது என்று எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், ராம்குமார் ஆதித்தன் சார்பில் தக்கல் செய்த மற்றொரு மனுவில், இந்த வழக்கானது நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போதே சில பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபரிகள், விதிமுறைகளை மீறி பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட அரியர் தேர்வு முடிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களும், தமிழக அரசும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Leave A Reply