வாங்குன புத்தகத்துக்கு காசும் வரல… புதுசா புத்தகமும் வாங்கல – பதிப்பாளர்கள் கவலை

Share

தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்கும் போது ஏராளமான நம்பிக்கைகள் துளிர்விட்ட ன.

‘அனைவருக்குமான அரசு’ என்றும் சொன்னதோடு செயலிலும் இறங்கினார் முதல்வர். நோய் தொற்று நீங்கி இயல்புநிலை கொண்டுவரப்பட்டதே ஒரு பெரும் சாதனைதான் என்றுகூட சொல்லப்பட்டது. பல்வேறு நலத்திட்டங்கள் பல துறைகளில் அறிமுகம் ஆனாலும் ‘இந்த அரசு புத்தகங்களுக்கான அரசு. அறிவுப் பூர்வமான, அறிவியல் பூர்வமான வாசிப்பே இலக்கு. பகுத்தறிவுச் சமூகம் சார்ந்த அதை வளர்த்தெடுக்க உகந்த செயல்பாடுகளாக பள்ளி வகுப்பறை நூலகம் முதல், மாவட்டம் தோறும் புத்தக காட்சிகள்’ என பரந்துபட்டு அரசாணைகள் வெளிவந்தன.

‘அற்புதம்’ என்று மனம் முழங்கியது. ஆனால் நோய் தொற்று காலத்தில் ஏற்கெனவே முற்றிலும் முடங்கிப் போன தமிழக புத்தகப் பதிப்பாளர்கள் தற்போது பலவகைச் சோதனைகளை சவால்களைச் சந்தித்து வருகிறார்கள் காரணம், நூலகத்துறையின் முடக்கம்.

முதலில் 2019 ல் நூல்களை நூலகத்துறை வாங்கியதில் 50% வரை தரவேண்டிய தொகையில் அரசு பாக்கி வைத்துள்ளது. அதன்பிறகான 2020, 2021, 2022ஆம் ஆண்டுகளில் புத்தகங்கள் வாங்க அறிவிப்புகூட வரவில்லை.

எழுச்சிமிக்க நம்பிக்கை நாயகர்களான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிர்வாக பீடத்தில் இருந்தும் இதுதான் நிலைமை என்பது வருந்தத்தக்க சூழல் ஆகும்.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்வோம் என்றும், இந்த அரசு உறுதி செய்தது. இன்று காகித விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. பலவகை நெருக்கடிகளில் புத்தகம் அச்சிடுவதே பெரிய சோதனையாக மாறியுள்ளது.

காகிதத் தட்டுப்பாடு ஜி.எஸ்.டி உட்பட வரி பூதங்கள் கடந்து இனி அச்சுப் புத்தகமே வெளிவருமா என்ற பதற்றம் நிலவுகிறது. இந்தச் சூழலில் இந்த ஆண்டு அரசு புத்தக விலை மறு நிர்ணயம் செய்து புதிய உத்தரவையும் வெளியிட வேண்டும் என்றும் தமிழ் பதிப்பாளர்கள் எதிர்பார்ப்பது நியாயமே.

எனவே தமிழக நூலகத்துறை உடனடியாகச் செயல்பட்டு நம் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்பதே தமிழ்ப் பதிப்பாளர்களின் எதிர்பார்ப்பு. அதை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வது நமது கடமை.

தமிழக அளவில் வாசிப்பை ஒரு இயக்கமாக எடுத்துச் செல்வதை நம்பிக்கையான துவக்கங்களைச் சாதித்து வரும் நம் அரசு வாசிப்பின் ஆணிவேரான பதிப்பாளர், வாசகர்களின் நலன்களைக் காக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

– புத்தகம் பேசுது தலையங்கத்திலிருந்து.

Leave A Reply