தடையின்றி அனைவருக்கும் E பாஸ் இனி கிடைக்கும் – தமிழக முதல்வர்

Share

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை எளிமையாக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்கிற நிலை நீடித்து வருகிறது. அத்தியாவசியப் பணிகளுக்குக் கூட இ-பாஸ் பெறுவதற்கு பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்,டிராவல்ஸ் நிறுவனங்களுக்கு இ-பாஸ் மிகவும் எளிமையாக கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மற்ற மாநிலங்களில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்திலும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுவாக எழுந்தன. ஆனால், இ-பாஸ் நடைமுறையை நீக்க சாத்தியமில்லை, அது எளிமையாக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 14 அன்று வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா தொற்று பரவுவதை தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

மேலும், “பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) 17.8.2020 முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி/ செல்போன் எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்ட அவர், பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸுக்கு விண்ணப்பம் செய்து, இ-பாஸ் பெற்று பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply