அகவிலைப்படி உயர்வு அறிவித்த முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி!

Share

தமிழ்நாடு ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவிப்பதாக சங்கத்தின் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பது…

நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து பின் தனது எழுச்சியுரையில் தனது ஆட்சியின் அச்சாணியாக விளங்கும் அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசிற்கு இணையாக 3 சதவீத அகவிலைப் படி உயர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு 16 லட்சம் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி உள்ளார். கொரோனா காலங்களில் நிலவிய பெரும் நிதி நெருக்கடி சூழலிலும் கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை 11% மட்டுமே வழங்குவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் எவரும் எதிர்பாராத அகவிலைப் படி உயர்வை ஒன்றிய அரசிற்கு இணையாக 14% உயர்த்தி வழங்கியவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.

அதோடு மட்டுமில்லாமல் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியை ஆட்சி பொறுப்பேற்றதும் 3 லட்சம் ரூபாயாக இருந்ததை கருணையுள்ளத்தோடு 5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருந்தார். ஜாக்டோ – ஜியோ போராட்டத்தின் போது கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட அத்தனை பழிவாங்கும் நடவடிக்கைகளையும் ஆட்சி பொறுப்பேற்றவுடன் ரத்து செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.

கடந்த காலங்களில் தனது நியாயமான கோரிக்கைக்காக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தியபோது போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் தலைவர்களை குறைந்தபட்சம் அழைத்து கூட பேச மனமில்லாத
இருண்ட ஆட்சி நடைபெற்றபோது திமுக ஆட்சி அமைந்தவுடன் ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து பின் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற வைத்தார்கள்.

மேலும் ஆசிரியர் அரசு ஊழியர்களை மதிக்கிற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கடந்த 1ஆம் தேதி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பேரமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேசி
தலைமைச் செயலகத்தில் அவர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்தார்கள். மேலும் அவற்றை உற்றுநோக்கி அவற்றில் உள்ள நியாயத் தன்மையை உணர்ந்து உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி ஸ்டாலின் அவர்கள். சொன்னதை செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்ற கோட்பாட்டில் விளங்கும் சொல்லின் செல்வர் தற்போது அவர் கூறியதுபோல் ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஒன்றிய அரசுக்கு இணையாக அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இது 16 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விரைவில் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தையும் எங்களுக்கு வழங்குவார் என்ற பெரும்
நம்பிக்கையை இந்த அறிவிப்பு ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் நடைபெற உள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் பேரமைப்பான ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் இன்னும் சில கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்றுவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த அறிவிப் பின் மூலம் மேலும் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு இணையான அகவிலைப் படி உயர்வு வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்..

இவ்வாறு கு.தியாகராஜன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Leave A Reply