இந்திய-கொரிய தொழில் ஒத்துழைப்பு வரலாற்றில் கலைஞரின் பங்களிப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கொரியா தமிழ்ச்சங்கம் பெருமிதம்

Share

தமிழ்நாடு அரசின் சார்பில் தென்கொரியாவில் மோற்கொள்ளப்படும் தொழிற்சந்திப்புகள் நிமித்தம் தமிழ்நாடு தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு, மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் தற்பொழுது தென் கொரிய தலைநகர் சியோலுக்கு வருகை தந்துள்ளார். அவர் இந்திய தூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கொரிய தமிழ்ச் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட தமிழ் மக்களை சந்தித்தார்.

அமைச்சருக்கு விருந்து

இங்குள்ள நம் மக்களின் நிலை, தொழில், தமிழ்-கொரிய பண்பாட்டு தொடர்பு, கொரியாவின் தொழில் வளர்ச்சி, மற்றும் தமிழ் அமைப்புகளால் செய்யப்படும் மக்கள் பணி உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினார். தமிழ்-கொரிய பண்பாட்டு மற்றும் வரலாற்று தொடர்புகளை ஆய்வுநோக்கில் அணுகி ஆராய்ச்சி கட்டுரைகளாக வெளிக்கொணர்வதின் அவசியத்தை வலியுறுத்தினார். இதுகாறும் ஆய்வுப்பணியில் ஈடுபடுவோர், உலகத் தமிழ்ச் சங்கம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட அரசின் ஆய்வு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது சிறப்பாக அமையும் என்று தெரிவிதத்தார். மேலும் கணினித்தமிழ் வளர்ச்சி குறித்து உரையாடிய அமைச்சர் அவர்கள், அதுகாறும் பெரும்பங்காற்றிய கணினித்தமிழ் வேந்தர் மறைந்த ஆண்டோ பீட்டர் மற்றும் விஜயகுமார் உள்ளிட்டோரின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்தார்.

சென்னை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் உதவியுடன் கொரிய தமிழ் சங்கம் மேற்கொண்டுவரும் திருக்குறள் மற்றும் மணிமேகலை கொரிய மொழியாக்கபணிகள் பற்றி இந்த வேலைத்திட்டத்தை முன்னின்று செய்து வரும் பொறியாளர் பீ. சகாய டர்சியூஸ் அவர்கள் அமைச்சரிடம் எடுத்துரைத்தார். இதுகுறித்து மகிழ்ச்சி வெளியிட்ட அமைச்சர் அவர்கள், பணி செவ்வனே நடைபெற வாழ்த்தினார். தமிழ்-கொரிய ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடுதல் பற்றி கொரிய தமிழ்ச் சங்கத்தின் பிரதிநிதிகளான முனைவர்கள் செ. ஆரோக்கியராஜ், மோ. பத்மநாபன், மற்றும் கோ. சரவணன் ஆகியோர் அமைச்சரிடம் விளக்கினர் .

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவராக விளங்கியவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞர் அவர்களின் தொழில் வளர்ச்சி குறித்த தொலைநோக்கு சார்ந்த பன்னாட்டு தொழில் ஊக்குவிப்பு முன்னெடுப்புகளால் சென்னையில் ஃகாந்தே மகிழுந்து தொழிற்சாலை (Hyundai Automobiles) தொடங்கப்பட்ட 1996-ம் ஆண்டு கால குறியீட்டிற்கு பிறகே கல்வி-வேலைவாய்ப்புகள் நிமித்தம் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய மக்கள் சில நூறுகள் என்கிற அளவில் தொடங்கி தற்பொழுது சில ஆயிரங்கள் என்கிற அளவில் கொரியாவில் வசிக்கின்றனர் என்பதை கொரிய தமிழ் சங்க பிரதிநிதிகள் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். இந்திய-கொரிய தொழில் ஒத்துழைப்பு வரலாற்றில் கலைஞரின் இந்த பங்களிப்பு என்றும் நினைவுகூறத்தக்கது.

அமைச்சருடன் திருமதி சாந்தி பிரின்ஸ் தனது கணவருடன்

குறிப்பாக, தற்பொழுது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்றை கடும் நெருக்கடி காலத்தில் திறம்பட எதிர்கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரியாவில் உள்ள தமிழ் மக்கள் சார்பாக நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. நெருக்கடி காலத்தில் உயிர் காற்றான ஆக்ஸிஜன் உற்பத்தி, கொள்வளவு, மற்றும் பகிர்ந்தளித்தல் குறித்து மிகுந்த கவனம் செலுத்தி மக்களை காக்க உதவிய மாண்புமிகு தொழில்துறை அமைச்சரின் பணியினை அனைவரும் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

மேலும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைத்து, நெருக்கடி காலங்களில் உதவுதல், தொடர்ந்து தொடர்பை பேணுதல், தமிழ் கல்வி, தமிழ் பரப்புரை, தொழில் தொடர்பு வளர்த்தல் உள்ளிட்ட பணிகள் செவ்வனே செய்யப்பட வழிகோலிய மண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு உலகத்தமிழர்கள் சார்பிலும் கொரியவாழ் தமிழ் மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில், மாண்புமிகு அமைச்சர் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் குழுவினருக்கு தமிழ் முறைப்படி பொன்னாடை-புத்தகங்களுடன் கூடிய சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. சந்திப்பிற்கான உணவு ஏற்பாடுகளை சக்ரா இந்திய உணவகத்தின் சார்பில் திரு. பிரின்ஸ் மற்றும், கொரிய தமிழ்ச் சங்கத்தின் மக்கள் தொடர்பு செயலாளர் திருமதி சாந்தி பிரின்ஸ் ஆகியோர் செய்திருந்தனர். இந்த சந்திப்பினை இந்திய தூதரகத்தின் தொழில் மற்றும் முதலீட்டிற்கான இரண்டாம்நிலை செயலாளர் திரு. சுவப்னில் தேவிலால் துரோட் மற்றும் கன்சுலார் நரேந்திர சர்மா ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

நிறைவில் தமிழ் மக்களின் அறிவுசார் அங்கம் என்கிற வகையில் கொரிய தமிழ் மக்கள் நலன், சிறப்பு துறைகளில் ஆராய்ச்சிப்பட்டம் பெற்றோர் நலன், மற்றும் பொது நன்மை, ஆகியவை தொடர்பான கொரிய தமிழ்ச் சங்கத்தின் கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பத்தை சங்கத்தின் தலைவர் முனைவர் சு. இராமசுந்தரம் அமைச்சரிடம் வழங்கினார். விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர், கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

Leave A Reply