அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கொரியா தமிழ்ச்சங்கம் வைத்த கோரிக்கைகள்!

Share

தமிழ்நாடு தொழில்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொழில்துறை ஆய்வுகளுக்காக குழுவினருடன் தென்கொரியா வந்தார். அப்போது, அங்குள்ள கொரியா தமிழ்ச்சங்கத்தினர் மற்றும் தமிழர் பிரதிநிதிகளை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, கொரியா தமிழ்சங்க நிர்வாகிகள் முனைவர்கள் ராமசுந்தரம், ஆரோக்கியராஜ் செல்வராஜ், சகாய டர்சியூஸ் பீ, பத்மநாபன் மோகனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சகாய டர்சியூஸ், பத்மநாபன் மோகனன், ஆரோக்கியராஜ் ஆகியோர்

சந்திப்பின்போது, கொரியா தமிழ்சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் வழங்கப்பட்டது. அந்தக் கோரிக்கைகள் விவரம்…

⦁ நாட்டிற்கு இராசதந்திர பலன்களை தரக்கூடிய இந்திய குழந்தைகள் அதிகம் பயன்பெரும் வகையிலான குறைந்த செலவில் கல்வியை வழங்கக்கூடிய நிலைத்திருக்கூடிய ஆசிய பள்ளியை கொரியாவில் அமைக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி நிறைவேற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

⦁ தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இணையவழி கல்விக்கழகம் ஊடக இன்னும் பள்ளி ஏற்படுத்தப்படாத தமிழர் வசிக்கும் அயல்நாடுகளில் தன்னார்வ ஆசிரியர்களைக்கொண்டு நடத்தப்படும் இணையவழி பள்ளியை ஏற்படுத்தித்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

⦁ மிகச்சிறந்த 50 தமிழ் புத்தகங்களை கொரியா மொழியில் மொழிபெயர்த்து தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும்.

⦁ தமிழ்நாடு ஆசிரியர் பணி தேர்வாணையத்தால் கோரப்படும் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதில் வெளிநாட்டில் பயின்ற அல்லது ஆராய்ச்சி பட்டறிவுள்ளோர் எதிர்கொள்ளும் அதீத படிவ தேவைகளை குறைக்க தமிழ்நாடு அரசு ஆவண செய்ய வேண்டும்.

தங்கம் தென்னரசுவுடன் ஆரோக்கியராஜ்

⦁ இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களின் படத்தை உலக நாடுகளில் இந்திய ஒன்றிய அரசால் நடத்தப்படும் சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையங்களில் வைக்க ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்தி நிறைவேற்றித்தர வேண்டும்.

⦁ சென்னை-சியோல் இடையே நேரடி விமானசேவை தொடங்கப்பட ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி நிறைவேற்றித்தருமாறு தமிழ்நாடு அரசிடம் வேண்டுதல்!

⦁ சிறப்பு துறைகளில்/வெளிநாடுகளில் முனைவர் பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டறிவுபெற்றோருக்கென கற்பித்தல் வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்.

⦁ வெளிநாடுகளில் மேற்படிப்பு ஆராய்ச்சி மற்றும் தொழில்துறையில் பட்டறிவுபெற்றோருக்கென குறுகியகால கற்றல்/ஆராய்ச்சி பணி மற்றும் தொழில் தொடங்குதல் வாய்ப்புகளை ஏற்படுத்தி மூளை வறட்சியை தடுக்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும்.

⦁ நோய் பெருந்தொற்று சூழலை எதிர்கொள்ள மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் அறிவியல் படிக்கும் மாணவர்கள் மற்றும் துறைசார் பட்டறிவுபெற்ற தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய தன்னார்வ நல்வாழ்வு படையணியை அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

⦁ இந்தியா-கொரியா நேரடி தொழிலாளர் ஒப்பந்தம் அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த  வேண்டும்.

Leave A Reply